Tuesday, April 30, 2024
Home » மலையகம் என்னும் உணர்வுக்கு எழுத்தாற்றலால் உருவம் கொடுத்தவர்
தெளிவத்தை ஜோசப்:

மலையகம் என்னும் உணர்வுக்கு எழுத்தாற்றலால் உருவம் கொடுத்தவர்

by mahesh
April 17, 2024 8:00 am 0 comment

தெளிவத்தை ஜோசப் கனடா தாய்வீடு இதழில் எழுதிய ‘மாறுதல்கள்’ நாவல் நூல் வெளியீட்டு விழா கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சாகித்திய ரத்னா மருத்துவர் தி.ஞானசேகரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வரவேற்புரையை ஊடகவியலாளர் கே.பொன்னுத்துரை, வெளியீட்டுரையை சுப்பையா கமலதாசன், நூல் நயவுரை வசந்தி தயாபரன் ஆகியோர் நிகழ்த்தினார். மூத்த எழுத்தாளர் அல் அஸ்மத், தமிழ்நாடு தோழர் ஜெயசிங் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்கள். மல்லியப்புசந்தி திலகர் தொகுத்து வழங்கிய நிகழ்வில் இலக்கிய புரவலர் ஹாஷிம் உமர் நூலின் பிரதியைப் பெற்றுள்ளார்.

இவ்வைபவத்தில் தலைமையுரை ஆற்றிய சாகித்திய ரத்னா மருத்துவர் தி. ஞானசேகரன், ‘மலையகம் என்னும் உணர்வுக்கு தனது எழுத்தாற்றலால் உருவம் கொடுத்த தெளிவத்தை ஜோசப்’ என்று குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சந்தனசாமி ஜோசப் என்ற இயற்பெயர் கொண்ட தெளிவத்தை ஜோசப், ஹாலிஎலைக்கு அருகேயுள்ள ஊவாக்கட்டவளை என்கிற தேயிலைத் தோட்டத்தில், ஆசிரியராகப் பணிபுரிந்த தங்கசாமி சந்தனசாமிப் பிள்ளைக்கும் பரிபூரணத்திற்கும் 16.02.1934 இல் மகனாகப் பிறந்தார்.

மூன்று சகோதரர்களையும் ஒரு சகோதரியையும் கொண்டுள்ள இவர், இறைநம்பிக்கை கொண்ட கத்தோலிக்க குடும்பச்சூழலில் வளர்ந்தவர். தனது ஆரம்பக்கல்வியை தோட்டப் பாடசாலையில் தனது தந்தையிடம் கற்றபின், தந்தை பிறந்த ஊரான தமிழ்நாடு கும்பகோணம் ‘லிட்டில் பிளவர்’ உயர்நிலைப்பள்ளியில் இரண்டு வருடகாலம் ஐந்தாம் வகுப்புவரை கற்று, இலங்கை திரும்பி பதுளையில் உள்ள புனித பீட்ஸ் கல்லூரியில் இவர் சாதாரணதரம் வரை கற்றார்.

பிந்திய ஐம்பதுகளில் தமிழக சஞ்சிகையான உமாவில் ‘வாழைப்பழத்தோல்’ என்ற இவரது முதற்கதை வெளியாகியது. அக்கதை வெளிவந்த சஞ்சிகையை இவர் பார்த்ததில்லை. பார்த்தவர்கள் சொல்லித்தான் அறிந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பேசும்படம் இதழிலும் இவரது படைப்பு வெளியாகியது. தொடர்ந்து கே.வி.எஸ்.மோகன் வெளியிட்ட கதம்பம் சஞ்சிகையிலும் வீரகேசரியின் தோட்டமஞ்சரி பக்கத்திலும் இவரது ஆக்கங்கள் வெளியாகின.

பாடசாலைக் கல்வி முடித்து வீட்டிலிருந்த ஜோசப்பை, தமையன் ஞானப்பிரகாசத்துக்கு உதவுவதற்காக பெற்றோர் தெளிவத்தை தோட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு இலிகிதர் பணியிலிருந்த தமையனுக்கு நளபாகத்தோடு உதவிய ஜோசப் அதேகாலப்பகுதியில் பரந்த வாசிப்பையும் மேற்கொண்டார். தொடர்ச்சியான வாசிப்புக்கள் ஜோசப்புக்கு எழுதவேண்டும் என்ற சிந்தனையை மனதில் விதைத்தது.

1956இல் தெளிவத்தைத் தோட்டத்தில் இவருக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. அதேசமயம் பகுதிநேர எழுதுவினைஞராகவும் தொழில்புரிய ஆரம்பித்தார். அக்காலகட்டத்தில் தனது இருப்பிடத்தின் பெயரைத் தனது பெயருடன் இணைத்து தெளிவத்தை ஜோசப் என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். இவரது வருகையால் தெளிவத்தைத் தோட்டம் இலக்கியப் பரப்பில் கவனத்தைப் பெறும் பெரும்பேற்றினைப் பெற்றது.

தோட்டத்து மக்கள் பற்றிய இவரது அக்காலப் படைப்புகள் தெளிவத்தை மக்களைச் சீண்டிச் சீற்றம் கொள்ளச் செய்தன. உத்தியோகத்தர்கள் பற்றிய கதைகள் அவர்களை முகம் திருப்பிக்கொள்ள வைத்தன. அதனால் 1964 இல் ரெயில் ஏறி கொழும்பு வந்துசேர்ந்தார் ஜோசப். கொழும்பில் ஸ்டார் டொபி நிறுவனத்தில் பிரதம கணக்காளராக இணைந்து பணியாற்றினார்.

மலைமுரசு, மலைப்பொறி, தேனருவி, கலைச்செல்வி, அல்லி, ஈழமணி, கதம்பம் போன்ற சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் எழுதிக்கொண்டிருந்த தெளிவத்தை ஜோசப், கண்டியில் இருந்து வெளிவந்த ‘மலைமுரசு’ என்ற பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியிலும் இவரது, ‘நாமிருக்கும் நாடே’ என்ற சிறுகதை முதற்பரிசைத் தட்டிக் கொண்டது. 1979இல் இக்கதையின் தலைப்பைக் கொண்ட இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி ‘வைகறை’ வெளியீடாக வெளிவந்தது. இச்சிறுகதைத் தொகுதி 1979இல் அரச சாஹித்திய விருதினைப் பெற்றுக்கொண்டது.

இனவிவகார அமைச்சு மும்மொழிகளில் நடத்திய சிறுகதைப் போட்டியில் தமிழ்மூலம் படைப்புக்கான சிறுகதைப் போட்டியில் இவர் 1998இல் முதற்பரிசு பெற்றார். எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவரது இரண்டாவது தொகுப்பான ‘தெளிவத்தைஜோசப் சிறுகதைகள்’ பாக்யா வெளியீடாக வெளிவந்து 2013இன் தேசிய சாகித்திய விருதினைப் பெற்றுக்கொண்டது.

‘மீன்கள்’ என்று மகுடத்தில் இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது.

1980க்குப் பிற்பட்ட காலப்பகுதியில் புதிதாக எழுத வருபவர்களை உற்சாகப்படுத்தும் பணியிலும் இவர் ஈடுபடத் தொடங்கி ‘வாரம் ஒரு சிறுகதை விருந்து’ என்னும் பகுதியை தினகரன் வாரமஞ்சரியில் எழுதினார். ஒவ்வொரு வாரமும் ஒரு எழுத்தாளரை அவருடைய சிறுகதையுடன் அறிமுகப்படுத்தினார். ஒரு இலங்கை எழுத்தாளர், ஒரு தமிழக எழுத்தாளர் என மாறிமாறி இடம்பெற்ற இப்பகுதியில் இரு நூறுக்கும் அதிகமான சிறுகதை எழுத்தாளர்களை அறிமுகஞ் செய்தார்.

எழுபது வருடகாலத்துக்குரிய கதைகளைத் தேடிச் சேகரித்து தொகுத்து இரண்டு வருடகால எல்லையுள் இப்பணியைச் செய்து சாதனை படைத்தார். துரைவி தினகரன் சிறுகதைகள், சுதந்திர இலங்கையின் ஐம்பது சிறுகதைகள் என்னும் நூல்களை தொகுத்து பதிப்பிக்க வழிசமைத்தார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும், பேராதனை, யாழ்ப்பாணம், சப்ரகமுவ பல்கலைக் கழகங்களிலும் இவரது படைப்புகளைக் குறித்து உயர் பட்டப்படிப்பு மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்கள்.

ஜோசப் அவர்கள், பிலோமினா, திரேசா, சியாமளா ரமே, ரவீந்திரன், ஜேயார் ஆகிய புனைபெயர்களில் இலக்கியத் தகவல்கள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதிய இவரது மனைவியின் பெயர் பிலோமினா ரூபளா. ஜோசப் தம்பதியினருக்கு திரேசா, தோமஸ் ரமேஷ், திருமதி ரவீந்திரன், தெக்ளா சியாமளா ஆகியோர் பிள்ளைகளாவர்.

இவரது படைப்புகள் சிங்களம், ஆங்கிலம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன.

மூன்று தடவை சாகித்திய விருது பெற்ற இவர், சம்பந்தன் விருது, கம்பன் கழக விருது, தேசிய ஒற்றுமைக்கான விருது, கொடகே தேசிய சாஹித்திய விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது, கலாசார அமைச்சின் ‘தேசநேத்ரு’ விருது, மத்திய மாகாண, மேல்மாகாண இலக்கிய சாதனையாளர் விருது, ‘தமிழியல் வித்தகர்’ விருது, பேராதனைப் பல்கலைக்கழக இலக்கிய விருது (2007), இந்துசமய கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு வழங்கிய ‘தமிழ் மணி’ (1992) ‘இலக்கியச் செம்மல்’ (1993) ‘கலாபூஷணம்’ விருது (1996), போன்ற விருதுகள், எழுத்தாளர் ஊக்குவிப்புமையத்தின் தமிழியல் விருது (2008) தமிழ்நாடு விஷ்ணுபுர விருது(2003) உட்படப் பல விருதுகள் பெற்றுள்ளார்.

இலங்கை அரசின் அதியுயர் விருதான ‘சாஹித்திய ரத்னா’ விருதினை 2014இல் பெற்றவர் தெளிவத்தை ஜோசப். இவர் எழுதிய நாவல்களுள் 485 பக்கங்ளைக்கொண்ட மிகப்பெரிய நாவலே மாறுதல்கள் நாவல் ஆகும்.

கே. பொன்னுத்துரை

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT