Tuesday, May 21, 2024
Home » மருதூர்க் கொத்தனின் நினைவுகளின் தேரோட்டம் கட்டுரைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

மருதூர்க் கொத்தனின் நினைவுகளின் தேரோட்டம் கட்டுரைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

by sachintha
April 30, 2024 7:32 am 0 comment

பிரதம அதிதியாக இந்தியா தமிழ்நாடு, தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை பேராசிரியர் கு. சின்னப்பன் பங்கேற்பு


மலையக கலை கலாசார சங்கத்தின் ஏற்பாட்டில் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி செ. சுதர்சன், சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அலி ஆகிய இருவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘மருதூர்க் கொத்தனின் நினைவுகளின் தேரோட்டம்’ எனும் கட்டுரைகள் நூல் வெளியீட்டு விழா கண்டி டி. எஸ். சேனநாயக வீதி, (அசோக வித்தியாலயத்திற்கு முன்னால் அமைந்துள்ள) செல்லத்துரை ஞாபகார்த்த மண்டபத்தில் தலைவர் எஸ். பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

பிரதம விருந்தினராக இந்தியா தமிழ்நாடு, தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை பேராசிரியர். கு. சின்னப்பன் கலந்து சிறப்பித்தார்.

வரவேற்புரையினை கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவர் இரா. அ. இராமனும் வெளியீட்டுரையினை பேராதனை பல்கலைக்கழக தமிழ்த் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி செ. சுதர்சனும், நூல் அறிமுகவுரையினை பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் துரை மனோகரனும் நூலாய்வுரையினை சிரேஷ்ட பேராசிரியர் பி. எம். ஜமாஹிர் ஆகியோர் நிகழ்த்தினர்.

நூலின் முதல் பிரதியினை மலையக கலை கலாசார சங்கத்தின் தலைவர் எஸ். பரமேஸ்வரன் பெற்றுக் கொண்டார். அதேவேளையில் இந்தியா தமிழ்நாடு, தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை பேராசிரியர். கு. சின்னப்பன் எழுதிய தமிழில் தலித் அரங்கு எனும் கட்டுரைத் தொகுதியும் வெளியிட்டு வைக்கப்பட்டது. முதல் பிரதியை எஸ். பரமேஸ்வரன் பெற்றுக் கொண்டார்.


மலையக கலை கலாசார சங்கத்தின் தலைவர் தேசமானிய எஸ். பரமேஸ்வரன் தலைமையுரையில்;

மருதூர்க் கொத்தனின் அதிமதுரம் என்னும் குறுநாவல் நூலை எமது கலாசார சங்கத்தின் ஊடாக வெளியிட்டு வைத்தோம். அதேவேளை அவரது நினைவுகளின் தேரோட்டம் என்னும் கட்டுரை நூலையும் வெளியிட்டு வைப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம்.

மருதூர்க் கொத்தன் எமது மண்ணின் கல்வி, இலக்கியப் பதிவேட்டில் ஐந்து தசாப்தங்கள் வீற்றிருந்தவர். அவர் எம்மை விட்டுப் பிரிந்து இம்மாதம் 20 ஆம் திகதியுடன் 20 வருடங்கள் ஆகின்றன. அந்த மாமனிதன் தன் குடும்பத்தை, இலக்கியத்தை, நண்பர்களை மட்டும் நேசிக்கவில்லை. அதற்கும் மேலாக இந்த மண்ணை, இந்த மக்களை நேசித்தார். அவரை இலக்கிய வாழ் நெஞ்சங்களும் கல்விசார் அன்புள்ளங்களும் தமிழ் இலக்கிய உணர்வுகளும் அவரை ஆகர்ஷித்து அவர் அக்காலத்தில் எழுதிய ஆக்கங்களை வெளியே கொண்டு வருவதில் முனைப்புடன் செயற்பட்டு வந்துள்ளார்.

மருதூர்க் கொத்தனின் கதையினை பாடசாலையின் பாடப் புத்தகத்தில்தான் படித்தேன். அந்த சரித்திர நாயகனின் சரித்திரம் பாடசாலை பாடப் புத்தகத்தில் மட்டும் அல்ல பல மட்டங்களிலும் அவருடைய இலக்கிய ஆளுமைகளை நண்பர்களான இக்பால் அலி, கலாநிதி செ. சுதர்சன் இனங்கண்டு கொள்ளக் கிடைத்தமையிட்டு நான் இரட்டிப்பு மகிழ்ச்சியடைகின்றேன்.

கல்வி, கலை, இலக்கியம், அரசியல், ஆன்மீகம், வரலாறு மொழி போன்றவற்றை அமிர்தமாகத் தந்தவரே மருதூர்க் கொத்தன். அந்த மாமனிதனின் உக்கிரமான உழைப்பையும், இலக்கியத்தின் பால் அவர் கொண்டிருந்த அயராத காதலையும் நாம் ஆர்வத்தோடு அறிந்து கொள்வதற்கு அவர் எழுதிய நினைவுகளின் தேரோட்டம் என்னும் கட்டுரைகள் நூல் சாட்சியாக அமைந்துள்ளன. அவருடைய படைப்பிலக்கியத்திற்கு உன்னதமான பங்களிப்பை நண்பர் இக்பால் அலி, கலாநிதி செ. சுதர்சனும் வழங்கி வருகின்றனர். இவர்களுடைய முயற்சி பாராட்டத்தக்கது. அந்த வகையில் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்குவதில் பெருமிதம் அடைகின்றேன். இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தியா தமிழ் நாடு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறைப் பேராசிரியர் கு. சின்னப்பன் உரையாற்றும் போது;

இந்த நூலின் பதிப்பாசிரியர்களான கலாநிதி செ. சுதர்சன் மற்றும் இக்பால் அலி ஆகியோர்களுடைய பதிப்புரைகளை வாசித்தேன். தமிழ் சமூகத்தினுடைய வரலாறு, இஸ்லாமிய சமூகத்தினுடைய வரலாறு இவை இரண்டும் எப்படி தமிழ் இலக்கியத்திற்கு பங்களிப்புச் செய்கிறதோ எழுகின்ற அடுத்த தலைமுறையினர்களுக்கு இது பெரியதொரு ஆவணமாக இருக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.

இதில் இரண்டாவது அவர் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை அவர் கட்டுரையாக்கித் தந்திருக்கிறார். அனுபவங்கள் தான் மனிதனின் அடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்லும். அனுபவங்கள் தான் மனிதனின் வாழ்க்கைப் பாடங்களை கற்றுத் தரும். மூன்றாவது அவர் சந்தித்த ஆசிரியர், நண்பர்கள், கலை இலக்கிய ஆளுமைகள் , அவர் வாழ்ந்த காலத்தில் சமகாலத்தினுடைய சமூக வரலாறு, பண்பாட்டு வரலாறு, இலக்கிய வரலாறு, அரசியல் வரலாறு ஆகியவற்றை மருதூர்க் கொத்தன் அவர்கள் மிகவும் நேர்த்தியாக வழங்கியிருக்கின்றார்.

அவர் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதை நினைவு கூர்ந்து செய்வது என்பது அவருடைய இலக்கியப் பங்களிப்புக்கும் சமூகப் பங்களிப்புக்கும் நாம் செய்யும் பெரியதொரு கடமை. இதைப் பதிப்பித்த இக்பால் அலி, கலாநிதி செ. சுதர்சன் அவரது குடும்பத்தவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன விடுதலைக்காக 28 ஆண்டுகள் சிறையில் இருந்த நெல்சன் மண்டேலா அவர்களிடத்திலே ‘உங்களுக்கு என்ன வேண்டும். எல்லா வசதிகளையும் செய்து தருகிறோம் ‘என்று கேட்ட பொழுது அவர் இரண்டே இரண்டு விடயத்தைத்தான் 28 ஆண்டுகளாகக் கேட்டார். ஒன்று என் மக்களுக்கு விடுதலை. இரண்டாவது சிறையில் படிப்பதற்கான அனுமதியாகும். ஒரு நூல் என்ன செய்யும். சிறந்த புத்தங்கள்தான் நல்ல மனிதர்களை உருவாக்குகிறது. மருதூர்க் கொத்தன் வாழ்ந்த காலத்தில் தமிழ் சமூகத்திற்கும் இஸ்லாமிய சமூகத்திற்கும், கல்வி சமூகத்திற்கு அவர் தொண்டாற்றியமைக்கு பிள்ளைகளிடத்தில் வாசிப்பு பழகத்தை உருவாக்குங்கள், இன்றைக்கு உங்கள் முன்னால் நிற்பதற்கு தகுதியாக இருப்பது நான் 11 வயதில் வாசிக்க ஆரம்பித்ததுதான். நான் வாசித்த ஒரு புத்தகத்தில் மனிதன் வாழ்க்கையில் உயர்வதற்கு வறுமை தடையில்லை என்று அவர் பதிவு செய்திருக்கின்றார். எனவே எனது சொந்த கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகள் நான் வாசித்த 5000 புத்தங்கள் ஒரு நவீன நூலகமாக இயங்கிக் கொண்டு இருக்கிறது. அறிவு ஒரு மனிதனை மனிதனாக்கும். அறிவுதான் ஒரு தலைமுறைக்கு மிகப் பெரிய சொத்து. அறிவுதான் ஒரு தகப்பன் தரக்கூடிய மிகப் பெரிய சொத்து என்றார்.

பேராதனை பல்கலைக்கழகம் தமிழ்த் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் துரை மனோகரன் உரையாற்றும் போது;

இந்த நூல் உண்மையினை வெளிக்கொணர்வது என்பது மிகவும் பாராட்டத்தக்க விடயம். கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் மருதூர்க் கொத்தனின் அதி மதுரம் குருநாவல் வெளியீட்டு விழா இதே மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் நான் கலந்து கொண்டேன். அது மிக முக்கியமான நிகழ்வாக இருந்தது. அதே நூலை மருதூர்க் கொத்தனின் பதிப்புச் செய்த அதே பிரமுகர்களாகிய கலாநிதி சுதர்சனும் இக்பால் அலியும் நினைவுகளின் தேரோட்டம் என்ற நூலையும் வெளிக்கொணர்ந்துள்ளார். என்பது மகிழ்ச்சிக்குரியது. எப்படி மருதூர்க் கொத்தனுடைய எழுத்துக்கள் எப்படிக் கவர்ந்தனவோ அந்த நூலின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரான கலாநிதி சுதர்சனின் பதிப்புரை நல்ல எடுத்துக் காட்டாகவுள்ளது என்பதை எடுத்துக் காட்ட விரும்புகின்றேன்.

பதிப்பாசிரியர் இக்பால் அலி தன்னுடைய அறிமுகவுரையில் : இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் தடம் பதித்துச் சென்ற பெரியார்களை இலகுவில் மறந்து விடுபவர்களாகவும் அவர் செய்த உபகாரங்களுக்கு நன்றி மறந்தவர்களாகவும் வாழ்வதைக் காண முடிகிறது. இஸ்லாமிய இலக்கிய மேம்பாட்டுக்காகவும், சமூக அரசியல் வளர்ச்சிக்காகவும் தமிழ் இஸ்லாமிய மக்களின் நல்லுறவுக்காகவும் வாழ்ந்த நமது பெரியார்களது வரலாறுகள் எல்லாம் மறந்து வருகின்றன. ஆயினும் பழைய நினைவுகளை நினைத்துப் பார்த்து, புதிய பயணம் செய்வதற்கான உத்வேகத்தை மருதூர்க் கொத்தனின் கட்டுரைத் தொகுதி வழங்குகின்றது. இப்படி இரண்டு பதிப்பாசிரியர்களும் தங்களுடைய அருமையான கருத்துக்களை இந்நூலிப் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இதன் மூலம் மிக முக்கியமாக விளங்கிக் கொள்ள வேண்டியது என்னவென்றால் தமிழ் முஸ்லிம் உறவு ஒன்றுபட வேண்டும் என்றும், என்றும் ஒன்றுபட்டு நின்றால் அசைக்க முடியாத ஒரு சிறுபான்மைப் பலம் ஒன்று இந்த நாட்டில் ஏற்படும். தமிழ் முஸ்லிம் ஒற்றுமை கலந்த அந்தப் பலத்தை எங்கள் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. அந்தப் பங்கை ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.

அதே போன்று மருதூர்க் கொத்தனின் நூல் வெளியீட்டு விழாவுக்கு தலைமைதாங்குகின்ற பரமேஸ்வரன் அவர்கள் என்பது இவ்விழாவுக்கு பெருமை தருகின்ற விடயம்.

பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் பி. எம். ஜமாஹிர் உரையாற்றும் போது;

வீ.எம் இஸ்மாயில் எனும் இயற்பெயர் கொண்ட மருதூர் கொத்தன் மரணித்து இருபது வருடம் கடந்த நிலையில் இன்று அவரின் கட்டுரைகளின் தொகுப்பை ‘நினைவுகளின் தேரோட்டமாக’ கலாநிதி சுதர்சன் மற்றும் கவிஞர் இக்பால் அலி இணைந்து மருதூர்க் கொத்தன் அறக்கட்டளை வெளியீடாகத் தருவது மன மகிழ்வைத் தருகின்றது.

சிறுகதை, கவிதை நாடகம், இசைப்பாட்டு, ஓவியம் திறனாய்வு, மேடைப்பேச்சு, காவியம், பத்திரிகை எழுத்து என பன்முக ஆளுமை கொண்ட கொத்தனின் இக் கட்டுரைகள் வெளிவர சுமார் இருபது வருடங்கள் எடுத்துள்ளன. (இவற்றில் சில பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் வெளிவந்தவையும் வானொலிகளில் ஒலிபரப்பாகியவையுமாகும்).

இது தொடர்பான கொத்தனின் ஆதங்கத்தை இந்நூலின் ‘எழுபதுக்கு பின் வசன இலக்கியத்துறை’ எனும் கட்டுரையில் அறியலாம்.

அறிஞர் சித்திலெப்பை அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இலங்கை இஸ்லாமியர்களின் வசன இலக்கியத்துறை மெதுவாகவே வளர்ச்சியடைந்துள்ளது. இது ஐம்பதுகளுக்குப் பின் உத்வேகமுற்றது. அறுபதுகளிலும் அந்த உத்வேகம் ஒரு புதிய கட்டத்தை அடைந்தது. வளமும் செழுமையும் உற்றது. எழுபதுக்குப் பின் அந்த வளர்ச்சி மேலும் பலமடங்குகளாகப் பெருகியது.

இலக்கியம் என்பது ‘காலம் காட்டும் கண்ணாடி’ என்பர். அது நம் வாழ்க்கையின் நிகழ்வுகளைப் படம் பிடித்துக்காட்ட வல்லது. ஆக, இந் நூலிலுள்ள இருபது கட்டுரைகளும் கொத்தனின் கால உணர்வுகளைப் படம் பிடித்து காட்டுவதை அறிய முடிகின்றது.

அதிலும் குறிப்பாக அவர் கண்டு அனுபவித்த அனுபவங்கள் மட்டுமன்றி அவர் கால மக்களின் வாழ்க்கை நிலையினையும் மற்றும் சமூக யதார்த்தம், கலை, இலக்கியம், அரசியல், இனத்துவ முரண்பாடும் தீர்வும் என அனைத்தையும் எழுத்தில் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

பதிப்பாசிரியர்களுள் ஒருவரான பேராதனை பல்கலைக்கழக தமிழ்த் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி செ. சுதர்சன் உரையாற்றும் போது;

ஒருவர் நூலை வெளிக்கொணரலாம். அந்த நூல் வெளியீட்டுச் செலவை விட வெளியீட்டு விழாச் செலவு அதிகரித்து இருக்கிறது. கொழும்பு, யாழ்ப்பாணத்தில் பிரதான மண்டபத்தில் வெளியீட்டு விழா செய்தால் நன்கு தெரியும். புத்தகம் அச்சிடும் செலவை விட நூல் வெளியிடும் செலவு அதிகமாக இருக்கிறது. அந்த குறையை நிவர்த்தி செய்யும் மனிதராக மலையக கலை கலாசார சங்கத்தின் தலைவர் பரமேஸ்வரன் விளங்குகின்றார். இது ஒரு முக்கியமான முயற்சியாகும். இது நூல் வெளியீட்டாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஆறுதல் தரும் சேவையாக பரமேஸ்வரனின் சேவை இருக்கிறது. எழுத்தாளர்கள் எழுத்துப் பயணத்தில் முன்னேறவும், அவர்களுக்கு உறுதுணையாகவும் இருந்து கொண்டு எழுத்துலகச் சேவையை செய்து வருகின்றார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT