பாகிஸ்தான் கட்டுப்பாட்டு ஜம்மு காஷ்மீர் (PoJK) மக்கள் மீது அதிகரித்து வரும் அட்டூழியங்கள் குறித்து முத்தஹிதா குவாமி இயக்கத்தின் (MQM) ஸ்தாபகரும் தலைவருமான அல்தாப் ஹுசைன், கவலை தெரிவித்தார்.
சமூக ஊடகங்களின் ஊடாக தனது ஆதரவாளர்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள ஹுசைன், பாகிஸ்தான் கட்டுப்பாட்டு ஜம்மு கஷ்மீரில் வசிப்பவர்கள் எதிர்கொள்ளும் மோசமான சூழ்நிலையை வலியுறுத்தினார்.அவர்கள் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பிராந்தியத்தில் நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், அந்த மக்களுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்திய அவர், அரசு கையாண்ட அடக்குமுறை தந்திரங்களையும், எதிர்ப்பை அடக்குவதற்கு ராணுவப் படைகளை அனுப்புவதையும் கண்டித்தார்.
பாகிஸ்தானிய சிவில் மற்றும் இராணுவ தரப்பினரால் காஷ்மீரின் உணர்வுகளை சுரண்டுவதாக வருத்தம் தெரிவித்த அவர், காஷ்மீர் என்ற பெயரில் உலகளாவிய ஆதரவைப் பெற்ற போதிலும், அந்தப் பகுதி புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.அதன் மக்கள் இரண்டாம் தர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெறும் எதிர்ப்புகள் மட்டும் போதாது என்று வலியுறுத்திய ஹுசைன்,காஷ்மீர் இளைஞர்கள் தங்கள் உரிமைகளுக்காக நீடித்த போராட்டத்திலும் தியாகத்திலும் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மின்கட்டணத்தின் மீதான வரிகளை இரத்து செய்தல், அதிகார வர்க்கம் அனுபவிக்கும் நியாயமற்ற சலுகைகளை நீக்குதல், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மானியங்களை மறுசீரமைத்தல் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு அவர் தனது ஆதரவை தெரிவித்தார்.
பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு பாகிஸ்தான் கட்டுப்பாட்டு ஜம்மு மற்றும் காஷ்மீரின் தலைவிதி அதேநிலையில் தொடர்கிறது. கடுமையான பின்விளைவுகளின் அச்சம் அப்பகுதியில் கடுமையாக காணப்படுகிறது.