Wednesday, May 15, 2024
Home » சிறுவர் இலக்கியத்துக்கு பெரும் பங்காற்றியவர் கவிஞர் அம்பி

சிறுவர் இலக்கியத்துக்கு பெரும் பங்காற்றியவர் கவிஞர் அம்பி

சிட்னியில் இயற்கை எய்தினார்

by damith
April 29, 2024 11:11 am 0 comment

ஈழத்து சிறுவர் இலக்கிய வளர்ச்சியில் கவிஞர் அம்பியின் காத்திரமான படைப்புகள் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரின் மறைவின் பின்னரும், அவருடைய படைப்புக்கள் குழந்தைகளின் நாவில் தவழும். தமிழ்கூறும் நல்லுலகால் ‘இலங்கையின் தேசிய விநாயகம்’ என்றும் ‘குழந்தைக் கவிஞன்’ எனவும் போற்றப்படும் கவிஞர் அம்பி எனப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகன் தனது 94 வயதில் கடந்த 28.4.2024 அன்று இயற்கை எய்தினார்.

சிறுவர் இலக்கிய படைப்புக்களை தாயகத்தில் மாத்திரமன்றி, புலம்பெயர் மண்ணிலும் படைத்த இலங்கையைச் சேர்ந்த அம்பி என அழைக்கப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகர் சிறுவர் இலக்கிய வரலாற்றில் காத்திரமான பங்களிப்பினை ஆற்றியுள்ளார்.

எளிமையும் தமிழின் அழகும் ஒருங்கே கூடியமையும் அவர் பாடல்கள் பல குழந்தைகளின் நாவில் இன்றும் தவழ்கின்றன. தமிழ்மொழி வளர்ப்பு, கவிதை என்று பல தளங்களில் சாதனைகள் செய்தவர் கவிஞர் அம்பி.

கவிஞர் அம்பியின் சொந்த ஊர் யாழ் நாவற்குழி ஆகும். தனது ஆரம்பக்கல்வியை நாவற்குழி சி.எம்.எஸ் பாடசாலையிலும் பின்னர் உயர்கல்வியை யாழ். பரி. யோவான் கல்லூரியிலும் தொடர்ந்த அவர் அறிவியல் மற்றும் கணித ஆசிரியராக இலங்கையில் பல பாகங்களிலும் பணியாற்றி உள்ளார். இலங்கையின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான கவிஞர் அம்பி அவர்கள் அவுஸ்திரேலியாவில் தன் முதுமையிலும் தமிழுக்கு ஆற்றிய பணியை எவரும் மறவர்.

அவர் அவுஸ்திரேலிய தமிழ் சமூகத்திற்கு செய்த பங்களிப்பு மிகப் பெரிது. அவர் 1950 ஆம் ஆண்டு முதல் எழுதி வருபவர். கவிதை, கவிதை நாடகம், சிறுகதை, கட்டுரை, விமர்சனம், ஆய்வு முதலான துறைகளில் அறியப்பட்டவர். சிட்னியில் வசித்த கவிஞர் அம்பி சிறுவர் இலக்கியத்திற்கு குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் தமிழ்ச் சிறார்களுக்காக கவிதைகள் பலவற்றையும் படைத்துள்ளார்.

‘இலட்சியக் கோடி’ என்ற சிறுகதையின் மூலம் தமிழ் எழுத்துலகில் அறிமுகமானவர். இச்சிறுகதை தினகரன் இதழில் வெளிவந்தது. அத்துடன் தமிழ்நாட்டில் அண்ணாதுரை முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டினை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற பெருமைக்குரியவர். சிறுவர் இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றிய அம்பி ஈழத்தின் தேசிக விநாயகம்பிள்ளையாக ‘சுபமங்களா’ இதழால் வர்ணிக்கப்பட்டவர்.

அம்பியின் வேதாளம் சொன்ன கதை கவிதை நாடகம், இலங்கையில் தாசீசியசின் நெறியாள்கையிலும், ‘யாழ்பாடி’ என்ற கவிதை நாடகம் அவுஸ்திரேலியாவில் அண்ணாவியார் இளைய பத்மநாதனின் அண்ணாவியத்திலும் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் ‘அண்ணா பதக்கத்திற்காக’ கவிதைப்போட்டி நடைபெற்று எம்.ஜி.ஆர் அவர்கள் தங்கப்பதக்கம் அளித்த பத்து கவிஞர்களில் அம்பியும் ஒருவர்.

30 ஆண்டுகள் ஆசிரியப்பணி, பின்னர் பாடவிதான எழுத்தாளர் என்று அவரின் பணி விரிந்தது. அம்பி அவர்கள் 10 கவிதை நூல்கள், கிரீன் அவர்களைப்பற்றி மூன்று நூற்களைப் படைத்துள்ளார்.

சிறுவர் இலக்கிய தமிழ் மொழி வளர்ப்பு, கவிதை என்று பல தளங்களில் சாதனைகள் செய்த கவிஞர் அம்பி அவர்கள் 1968இல் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு தங்கப்பதக்க விருதையும் பெற்றுள்ளார். அதன்பின் 1993இல் இலங்கை இந்து கலாசார அமைச்சின் ‘தமிழ்மணி விருது’ பெற்றார். 1994இல் கொஞ்சும் தமிழ் சிறுவர் இலக்கிய நூலுக்கு இலங்கை சாகித்திய விருது பெற்றமை குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் மண்ணில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக 1997இல் அவுஸ்திரேலியாவில் மெல்பன் ‘நம்மவர்’ விருதையும், 1998இல் கனடாவில் சி.வை. தாமோதரம்பிள்ளை தங்கப்பதக்க விருதையும் பெற்றுள்ளார். அதன்பின்னர் 2004இல் அவுஸ்திரேலியா கன்பராவில் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் விருதையும் பெற்றுள்ளார்.

இலங்கையில் மல்லிகை, ஞானம் ஆகிய இலக்கிய இதழ்கள் முகப்பில் அம்பியின் உருவப்படத்துடன் அவரது பணியை பாராட்டி கட்டுரை எழுதி அலங்கரித்துள்ளன. அம்பியின் கவிதைகள் நூலிலும் பல இதழ்கள், இணையத்தளங்களிலும் வெளியாகி பிரசித்திபெற்றுள்ளன.

--ஐங்கரன் விக்கினேஸ்வரா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT