Home » யுகரிஷியின் ஆன்மிகச் சிந்தனைகள் – அத்தியாயம் 85

யுகரிஷியின் ஆன்மிகச் சிந்தனைகள் – அத்தியாயம் 85

by damith
April 29, 2024 11:22 am 0 comment

இரண்டு கைகள் நிறைய லட்டு வேண்டும் என நினைப்பது சிறுபிள்ளைத்தனம். அதே சிறுபிள்ளைத்தனத்துடன். சின்னதாய் ஒரு பூஜை மட்டும் செய்து விட்டு. பெருமளவு சுகபோகங்களும் கிடைக்க வேண்டும். முக்தியும் கிடைக்க வேண்டும் என்று நம்மில் பலரும் கருதுகிறோம். இரண்டில் ஒன்று மட்டுமே கிடைக்கும். ஒன்றை பெற மற்றொன்றை இழக்க வேண்டும். சுகபோகமான வாழ்க்கை, முக்திக்கான வாழ்க்கை இவ்விரண்டிலும் குழம்பி, செய்வதறியாமல் மக்கள் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சுகபோக வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தால், முக்திக்கான வாழ்க்கை எட்டாக் கனியாகிவிடும். பசிக்கு உணவு, உடம்பை மறைப்பதற்குத் துணி, என்று வாழ்ந்து சுகபோகங்களை துறந்தால், முக்திக்கான வாழ்க்கை நம் எதிரில் நிற்கும். ஆண்டவன் உலகை படைத்த நாள் முதல், இன்றளவும் ஒவ்வொரு மேன்மையானவரின் சரித்திரம் இதுவே. சுகபோகங்களை துறந்து, தியாக வாழ்க்கையை மேற்கொள்வது மேன்மையை அடைவதற்கான வழியாகும். ஆத்ம முன்னேற்றத்திற்கு இது ஒன்றே சிறந்த வழியாகும்.

தீர்த்தயாத்திரை மூலமோ, விரதம் இருப்பதாலோ, யோகப் பயிற்சி, மூச்சு பயிற்சி செய்வதாலோ, மனம், உடல் ஆகியவை வலுப் பெறுமே தவிர, கடவுளை அடைய முடியாது. கடவுளை வயப்படுத்த, மன உறுதி, மனக்கட்டுப்பாடுடன் கூடிய, செயலில் வெற்றி கொள்ளத் தக்க, சாதனாவின் மூலம் மட்டுமே இயலும். தனிமனித வாழ்வில் பிறருக்கு முன் உதாரணமாக வாழ்ந்தவர்கள் போற்றத் தகுந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் மூலமே உலகத்தில் மக்கள் நலம் உண்டாகியுள்ளது. எனவே நாம் மன பலம் படைத்தவர்களாகவும் ஆத்ம பலம் படைத்தவர்களாகவும் மாறுவோமாக.

இன்றைய உலகம் மூடத்தனம் மற்றும் மூட நம்பிக்கை என்னும் சங்கிலிகளால் இறுக்கப்பட்டுள்ளது. இச்சங்கிலியில் கட்டுப்பட்டு கிடக்கும் மாந்தரை நினைத்தால் என் மனம் துடிக்கிறது. ஒவ்வொரு மனிதனின் துன்பத்திற்கும், சமுதாயத்தின் இந்த அவல நிலைக்கும் மக்களின் மூட நம்பிக்கை தான் காரணமென, கிழக்கில் உதிக்கும் சூரியன் போல் தெள்ளத் தெளிவாக எனக்குத் தெரிகிறது.

உலகில் எங்கிருந்து ஒளி பிறக்கும்? தியாகத்தினால் மட்டுமே இது நிறைவேறும். தியாக உள்ளம் கொண்ட வீரன் மற்றவர்க்கு முன்னுதாரணமாய்த் திகழ்கிறான். பின்னர் பலரும் அவனின் அடிச்சுவட்டைப் பின்பற்றுகின்றனர். வெளிச்சத்தை உருவாக்கும் இந்த தியாக வீரர்களின் செயல், ஆதிகாலத்திலிருந்தே நடந்து வருகிறது. இப்பூவுலகில் பற்பல வீரர்கள், உத்தமர்கள், புனிதர்கள், மஹாத்மாக்கள் தோன்றியுள்ளனர்.

அவர்கள் யாவரும் தியாக வாழ்க்கை மேற்கொண்டு வாழ்ந்து காட்டினர். நாம் நம் சுகபோகங்ளை துறந்தால் தான், மற்றவர்களுக்கு சுகங்களை நாம் வழங்க முடியும். அதற்கான வழியைக் காட்ட முடியும். உண்மையான அன்பு எல்லையில்லா கருணை கொண்ட இதயங்கள் துணிச்சலுடன் செயலாற்றுபவர்கள், எந்தளவிற்கு இன்றைய நாளில் தேவைப் படுகிறதோ, அந்தளவிற்கு வேறு எந்த காலத்திலும் தேவைப்பட்டதில்லை.

எனவே, உணர்வுடையே ஆத்மாக்களே விழித்தெழுங்கள். உலகம் துக்கம் என்னும் நெருப்பில் பொசுங்கி கருகிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் தூங்கிக் கொண்டிருப்பது அழகல்ல. வெளிச்சமூட்டக் கூடிய பொறுப்பு உங்களிடம் தான் உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT