Tuesday, May 21, 2024
Home » உடப்பு கிராமத்தில் பாரம்பரியமாக அனுஷ்டிக்கப்படும் சித்திரை செவ்வாய் முளைக்கொட்டு நாளையுடன் நிறைவு

உடப்பு கிராமத்தில் பாரம்பரியமாக அனுஷ்டிக்கப்படும் சித்திரை செவ்வாய் முளைக்கொட்டு நாளையுடன் நிறைவு

by sachintha
April 30, 2024 8:05 am 0 comment

புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் தமிழ்க் கிராமம் உடப்பூர் ஆகும். இந்தக் கிராம மக்கள் தங்களது பாரம்பரிய கலைகலாசாரத்தை கண்ணியமாக மதித்து வாழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் உடப்பு கிராமத்தில் ‘சித்திரைச் செவ்வாய் முளைக்கொட்டு’ தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்றது. இந்நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வுகள் கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முளைப்பதித்தல் மூலம் ஆரம்பமாகின.

தொடர்ந்து பத்துநாட்கள் நடைபெறுகின்ற இந்நிகழ்வின் இறுதி நிகழ்ச்சி நாளை 2024.05.01 புதன்கிழமை காலை இடம்பெறும். உடப்பில் மாரியம்மன் வழிபாட்டின் மற்றொரு அம்சமாகச் சித்திரை மாதத்தில் வீடுகளின் வளவுகளில் நடத்தப்படும் சித்திரைச் செவ்வாய் விழாவைக் குறிப்பிடலாம்.

அக்கினி நட்சத்திரம் என மக்கள் குமுறுகின்ற காலம் இது. அக்கினி நட்சத்திரம் என்பது சித்திரைமாதம் அவிட்ட நட்சத்திரத்தில் இருந்து விசாகநட்சத்திரம் வரை 21நாட்களைக் குறிக்கும். இக்காலப்பகுதி மிகவும் வெப்பமானது. இந்தக் காலத்திலேயே தமிழ்நாட்டில் மாரியம்மன் கோயில்களில் விழாக்கள் இடம்பெறும்.

மழை வரவிருப்பதையே இவ்வழிபாடு உணர்த்தும். அங்கு கோயில் திருவிழா தொடங்கிவிட்டதை அறிவிக்க கொடி ஏற்றப்படும். அன்று ‘முளைப்பாரி கொட்டுதல்’ என்ற ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதுண்டு.

கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தாரும் குறிப்பிட்ட ஓரிடத்தில் ஒரு குடத்தில் நெல் தானியங்கள், பயறு வகைகள் ஆகியவற்றை விதைப்பார்கள். எட்டாம் நாள் அந்தக் குடங்களை கோயிலுக்குக் கொண்டு வருவார்கள். அந்த மூன்று நாட்களும் பெண்கள் பலர் சேர்ந்து மாரியம்மன் புகழைக் கும்மியடித்துப் பாடுவார்கள். பிறகு பானைகளை கொண்டு வலம் வருவர். திருவிழாவின் இறுதில் அருகேயுள்ள குளம் அல்லது ஆற்றில் பானைகளை மூழ்கடித்து விடுவர்.

தமிழ்நாட்டில் பின்பற்றப்படுகின்ற வழிபாட்டுச் சடங்குகளின் சாயல் சித்திரைச் செவ்வாய் விழாவில் தென்படுகின்றது. இச்சடங்கின் போது கும்மி ஆட்டத்துடன் பாடலும் இடம்பெறுகின்றது. இச்சடங்கு நிகழ்ச்சியின் போது நவதானியங்கள் முளைக்க வைத்தல் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக உள்ளது. முளைக்க வைக்கத் தேவையான நவதானியங்களை வீடுவீடாகச் சென்று பெற்றுக் கொள்வர்.

நவதானியங்களுக்காக கடலை, பயறு, கானா, எள், கொள்ளு, இறுங்கு, நெல், குரக்கன், தினை போன்றவற்றை தெரிவு செய்வர். நவதானியங்களை சட்டியில் உரமிட்டு சாணம் நிரப்பிப் பதித்து தூப தீபம் காட்டி காலையும் மாலையும் நீர் ஊற்றுவார்கள்.

சித்திரை மாதத்தில் வெப்பம் நிறைந்த காலப்பகுதியாகும்.இக்காலப் பகுதியில் மக்களுக்கு அம்மை நோய் கூடுதலாக வருவதுண்டு. இந்நோய் நீங்குவதற்கு மாரியம்மனுக்கு செய்யும் ஒருநேர்த்தியாகவும் இதை உடப்பு கிராம மக்கள் கருதுகின்றனர்.

கலைச்சுடர்- க.மகாதேவன்-…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT