Home » O/L பரீட்சை முடிந்தவுடன் A/L வகுப்புகள் ஆரம்பம்

O/L பரீட்சை முடிந்தவுடன் A/L வகுப்புகள் ஆரம்பம்

by sachintha
April 30, 2024 6:50 am 0 comment

தவறவிடப்பட்ட கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வரத் திட்டம்

 

இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை முடிவுற்றதும் உடனடியாகவே, உயர்தரத்திற்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

கடந்த கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்ட மையால் தவறவிடப்பட்ட கல்வி நடவடிக்கைகள் மற்றும் பாடசாலை பரீட்சை நேர அட்டவணையை வழமைக்கு கொண்டு வருவதற்கான வேலைத்திட்டத்திற்கு இணங்க, இம்முறை சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு அந்த பரீட்சை நிறைவுற்றதும் உடனடியாகவே உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணைய வானொலியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த சவால் மிக்க நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதற்கு ஆசிரியர்களின் கடுமையான அர்ப்பணிப்பு அவசியம் என தெரிவித்த அமைச்சர், அதற்காக தற்போது கல்வி பொதுத் தராதர உயர்தரத்தில் விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச மொழிகள் ஆகிய பாடங்களைக் கற்பிப்பதற்காக புதிதாக 3000 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க இந்த வாரத்தில் அவர்களுக்கான நேர்முகப் பரீட்சை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலாம் தரம் முதல் 11 தரம் வரை மட்டுமே வகுப்புகள் காணப்படும் பாடசாலைகளிலுள்ள மாணவர்கள், உயர்தரத்தை கற்பதற்கு வேறு பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படும் சிக்கல்கள் இதன் போது எழக்கூடும். அதற்கு தீர்வு காணும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றின் மூலம் அனுமதி பெற்றுக்கொண்டு பெறுபேறுகள் கிடைக்கும் வரை, அந்த பாடசாலை மாணவர்களை தேவையான பாடசாலைகளில் தகைமைகளுக்கு ஏற்ப இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்ப டுவதில் ஏற்படும் தேவையற்ற தாமதத்தை தடுப்பதற்காகவே, இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வருடத்துடன் கடந்த இரண்டு வருட காலங்களில் கொவிட் காரணமாக தவறவிடப்பட்ட கல்வி நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதும் இந்நோக்கத்தில் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளை சாத்தியமாக முன்னெடுப்பதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பும் அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேற்படி தேசிய கல்வி நிறுவனத்தின் உத்தியோக பூர்வ இணைய வானொலியை ஆரம்பிக்கும் நிகழ்வில், யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பிரசாத் சேதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT