Home » மாணவிகளை தவறாக வழிநடத்திய பரபரப்பான வழக்கில் பேராசிரியர் நிர்மலாதேவி குற்றவாளியென்று நீதிமன்றம் தீர்ப்பு

மாணவிகளை தவறாக வழிநடத்திய பரபரப்பான வழக்கில் பேராசிரியர் நிர்மலாதேவி குற்றவாளியென்று நீதிமன்றம் தீர்ப்பு

by sachintha
April 30, 2024 6:48 am 0 comment

ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தினால் இன்று தீர்ப்பு

தமிழ்நாடு அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவி மீது குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நிர்மலாதேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பளித்துள்ளது.

நிர்மலாதேவிக்கான தண்டனை இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்த நிர்மலாதேவி என்பவர், மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2018- ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி நிர்மலாதேவியை பொலிசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

சுமார் ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்தவர் பேராசிரியை நிர்மலாதேவி. இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், உயர் கல்வித்துறையிலும் செல்வாக்குடன் இருந்தார். தான் வேலை செய்த தனியார் கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி, அவர்களை உயர்கல்வித்துறையின் செல்வாக்கானவர்களுக்கு பாலியல் ரீதியாக பயன்படுத்த முயன்றுள்ளார்.

பேராசிரியை நிர்மலாதேவியின் இலக்கில் இருந்த சில மாணவிகள், நிர்மலாதேவி பேசியதை பதிவு செய்து பெற்றோர் மூலம் கல்லூரி நிர்வாகத்தில் புகார் செய்தனர்.

அதை அப்போது கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்று புகார் எழுந்த நிலையில், ஓடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகள் எழுந்தன.

ஆரம்பத்தில் மறைக்கப்பட்ட இந்தப் பிரச்சினையை கையில் எடுத்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தியதால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அதன் பிறகே பொலிஸ் விசாரணை நடந்தது. 2018 ஏப்ரலில் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.

இதனிடையே ஆளுநர் மாளிகையும் இந்த வழக்கில் இணைத்துப் பேசப்பட்டதால், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் தனியாக ஒரு விசாரணைக்குழுவை அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார்.

இதனால் தமிழக அரசியலில் பெரும் விவாதமாக மாறிய நிர்மலாதேவி வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் நிர்மலாதேவியுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள். இந்த வழக்கில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபசார தடுப்புச் சட்டம், தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்திய பிரிவுகளில் விசாரணை நடத்தப்பட்டது.

இதனிடையே, வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 29ஆ-ம் திகதியான நேற்றைக்கு ஒத்திவைத்து நீதிபதி பகவதியம்மாள் கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி உத்தரவிட்டார். இந்நிலையில் கல்லூரி மாணவிகளை தவறாக நடத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் நேற்று தீர்ப்பளித்துள்ளார்.

நிர்மலாதேவி மீதான தண்டனை இன்று அறிவிக்கப்படுகிறது. அதேநேரம் 2வது மற்றும் 3வது குற்றவாளிகள் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். போதிய ஆதாரங்கள் இல்லை என்று அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT