Friday, May 17, 2024
Home » முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு!

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு!

-பெங்களூரில் கண்டன ஊர்வலம்

by sachintha
April 30, 2024 12:50 pm 0 comment

 

கர்நாடகாவில், முன்னாள் பிரதமர் தேவ கவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான ஆபாச வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. விசாரணைக்கு பயந்து, அவர் ஜெர்மனி தப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கு குறித்து, கர்நாடக அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணை குழுவுக்கு பிரஜ்வலின் சித்தப்பாவான குமாரசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் முன்னாள் பிரதமர் தேவ கவுடா (வயது 91) ஆவார். இவரது மூத்த மகன் ரேவண்ணா (வயது 66). இவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா (வயது33).

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் – ம.ஜ.த கூட்டணி வேட்பாளராக, ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் வெற்றி பெற்றார். இந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.க, – ம.ஜ.த கூட்டணி வேட்பாளராக ஹாசனில் போட்டியிட்டார். இந்த தொகுதிக்கு கடந்த 26 ஆம் திகதி வாக்குப்பதிவு நடந்தது.

இதற்கிடையில், பிரஜ்வல் ரேவண்ணா சில பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவின. ஆனால், வீடியோக்களில் பிரஜ்வல் முகம் தெளிவாக தெரியவில்லை.

இந்நிலையில், உதவி கேட்டு சென்ற தங்களை பிரஜ்வல் தவறாக பயன்படுத்தி கொண்டதாகவும், நெருக்கமாக இருக்கும்போது வீடியோ எடுத்து, அதை வைத்து மிரட்டுவதாகவும், சில பெண்கள் கன்னட தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தனர்.

இதையடுத்து, பிரஜ்வல் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இது தொடர்பாக விசாரிக்க, சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது.

இந்த விவகாரம் கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கிடையில் பெங்களூரில் இருந்து விமானம் வாயிலாக, ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு பிரஜ்வல் சென்று விட்டார். விசாரணைக்கு பயந்து அவர் தப்பி சென்று விட்டதாக காங்கிரசார் குற்றம் சாட்டுகின்றனர். பிரஜ்வலை கண்டித்து, பெங்களூரில் உள்ள மாநில டி.ஜி.பி., அலுவலக வளாகத்தில், மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி புஷ்பா அமர்நாத் தலைமையில் நேற்றுமுன்தினம் போராட்டம் நடந்தது.

பெங்களூரு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் பவன் வளாகத்தில், காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். பிரஜ்வல் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தனர். அவரது உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT