Tuesday, April 30, 2024
Home » முன்னேற்றப் பாதையில் இலங்கையின் பொருளாதாரம்

முன்னேற்றப் பாதையில் இலங்கையின் பொருளாதாரம்

by mahesh
April 17, 2024 6:00 am 0 comment

இலங்கையின் பொருளாதாரம் நம்பிக்கை அளிக்கும் வகையில் முன்னேற்றப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதனை இலங்கை மத்திய வங்கி, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களது தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. அதேநேரம் பொருளாதார முன்னேற்றத்தின் பிரதிபலன்களை பொருட்கள் விலை குறைப்பு ஊடாகவும் நிவாரணங்கள், சலுகைகள் வழங்குவதன் மூலமும் வெளிப்படுகின்றன.

2022 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகம் கொடுத்தது. அதன் விளைவாக நாடும் மக்களும் பல்வேறு விதமான நெருக்கடிகளையும் அசௌகரியங்களையும் எதிர்கொண்டனர். அச்சமயத்தில் அந் நெருக்கடிகளில் இருந்து மக்களை மீட்டெடுக்கவோ அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவோ மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவோ முடியாத நிலைக்கு அன்றைய ஆட்சியாளர்கள் உள்ளாகினர். அதனால் அவர்கள் பதவி விலகிச் சென்றனர்.

அந்த இக்கட்டான சூழலில் நாட்டின் தலைமையை ஏற்று நாட்டையும் மக்களையும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க எவரும் முன்வரவில்லை. அச்சமயத்தில் சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் அரசியல் நலன்களுக்கு முன்னுரிமை அளித்தே செயற்பட்டனர்.

அவ்வாறான சூழலில் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைமையை ஏற்றார். அத்தோடு நாட்டையும் மக்களையும் பொருளாதார நெருக்கடியில் மீட்டெடுப்பதற்கான பொருளாதார வேலைத்திட்டங்களையும் அவர் ஆரம்பித்தார். கட்சி நலன்களை விடவும் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தியதாகவே அவரது பொருளாதார வேலைத்திட்டங்கள் அமைந்திருந்தன.

அதன் பயனாக பொருளாதார நெருக்கடி நிலவிய காலப்பகுதியில் மக்கள் முகம் கொடுத்த அசௌகரியங்களும் பாதிப்புக்களும் குறுகிய காலப்பகுதிக்குள் கட்டம் கட்டமாக நீங்கலாயின. அதன் ஊடாக பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகம் கொடுத்ததா என வினவும் அளவுக்கு நாட்டில் இயல்புநிலை ஏற்பட்டிருக்கிறது. நாடு அடைந்த பொருளாதார முன்னேற்றங்களின் பிரதிபலன்களை, மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றன.

இருந்த போதிலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீட்சி பெற்றுவருவதையும், அதன் பிரதிபலன்களை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தற்போதைய பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்களை விமர்சிக்கக் கூடியவர்களாக உள்ளனர். ஆனால் நாடும் மக்களும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்த போது அந்நெருக்கடியில் இருந்து அவர்களை மீட்டெடுக்கவோ நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்கவோ முன்வராதவர்கள் இவர்கள் என்பதை மக்கள் அறியாதவர்கள் அல்லர்.

அதேநேரம் இவர்கள் என்ன தான் விமர்சனங்களை முன்னெடுத்த போதிலும் நாடு பொருளாதார ரீதியில் நம்பிக்கை தரும் வகையில் முன்னேற்றப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள உண்மையாகும்.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் படி, வெளிநாடுகளில் பணிபுரியும் பணியாளர்கள் இவ்வருடம் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் 1,536 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 1,432.2 மில்லியன் டொலர்களையே அனுப்பி வைத்திருந்தனர். இதன்படி வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர் கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் அனுப்பி வைத்த அந்நியச் செலாவணியில் 8.7 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருப்பது தெளிவாகிறது.

அதேநேரம் உல்லாசப் பயணிகள் வருகையிலும் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றன. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின் படி, இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களிலும் 6 இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உல்லாசப் பயணிகள் நாட்டுக்குள் வருகை தந்துள்ளனர். ஆனால் கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் 3 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உல்லாசப் பயணிகளே வருகை தந்திருந்தனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் உல்லாசப் பயணிகளின் வருகையில் 89.4 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள இலங்கை மத்திய வங்கி, 1025.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதேபோன்று நாட்டின் ஏனைய துறைகளிலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இவற்றில் காழ்ப்புணர்வு கொண்டவர்கள்தான் பொருளாதார திட்டங்கள் குறித்து பலவிதமான விமர்சனங்களை முன்வைத்து குறைகள் கூறக்கூடியவர்களாக உள்ளனர். இவை அனைத்தும் அற்ப அரசியல் இலாபம் பெறும் முயற்சியே அன்றி வேறில்லை.

ஆகவே நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு கட்சி, அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். அதுவே நாட்டை உண்மையாக நேசிக்கும் குடிமக்களின் பொறுப்பாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT