Saturday, May 4, 2024
Home » இலங்கை- – ஈரான் நட்புறவை வலுப்படுத்தும் திட்டம்

இலங்கை- – ஈரான் நட்புறவை வலுப்படுத்தும் திட்டம்

by mahesh
April 25, 2024 6:00 am 0 comment

சுதந்திர இலங்கையின் வரலாற்றில் மற்றொரு பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டம் நேற்று மக்களிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. அதுதான் உமா ஒயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டமாகும். இத்திட்டமானது இந்நாட்டின் விவசாயம் மற்றும் மின்னுற்பத்தி துறைகளை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் பங்களிக்கக் கூடியது.

இலங்கையின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த அபிவிருத்தித் திட்டத்தை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்றாஹிம் ரைசியும் இணைந்து உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து மக்கள் பாவனைக்காக கையளித்திருக்கின்றனர்.

இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் நீண்ட காலம் நிலவிவரும் சிநேகபூர்வ நட்புறவின் பிரதிபலனாக கிடைக்கப்பெற்றுள்ள இந்த பாரிய அபிவிருத்தித் திட்டம், இந்நாட்டின் துரித பொருளாதார அபிவிருத்திக்கும் பங்களிக்கும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இந்த உமா ஒயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்திற்காக 2007 நவம்பர் 27 ஆம் திகதி இலங்கையின் கனிய வள அபிவிருத்தி அமைச்சும் ஈரானின் வலுசக்தி அமைச்சும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. அதனடிப்படையில் இத்திட்டத்தை செயற்படுத்தும் பொறுப்பு ஈரானின் பராப் நிறுவனத்திடமும் இலங்கையின் அன்றைய நீர்ப்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சிடமும் ஒப்படைக்கப்பட்டது.

அதற்கேற்ப பராப் நிறுவனம் விரிவான சாத்தியக்கூற்று ஆய்வுகள், பொறியியல் திட்டமிடல் பொருட்கள், உபகரணங்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட துறைசார்ந்த பல்வேறு செயற்பாடுகளையும் முன்னெடுத்தது. அதனைத் தொடர்ந்து 514 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த அபிவிருத்தி ஒப்பந்தத்தின் கீழான பணிகள், 2010 மார்ச் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்ததோடு, 2015 மார்ச் 15 ஆம் திகதி நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. எ

ஈரான் தொடர்ந்தும் நிதியளிப்பதில் எதிர்கொண்ட தடைகள், ஹெட்ரஸ் சுரங்கப்பாதையில் எதிர்பாராத விதமான தண்ணீர் பிரவேசித்ததால் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை இந்த அபிவிருத்தித் திட்டம் எதிர்கொண்டது. அதன் விளைவாகவே இத்திட்டத்தை 2024 மார்ச் 31 வரை நீடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இத்திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு இலங்கை மக்களிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. இதன் ஊடாக இருநாட்டுக்கும் இடையிலான நட்புறவு மேலும் வலுவடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த பல்நோக்கு திட்டத்தின் ஊடாக மொனறாகலை மாவட்டத்தில் 4,500 ஹெக்டேயர் புதிய விவசாய நிலங்களும் தற்போதுள்ள 1,500 ஹெக்டேயர் விவசாய நிலங்களும் நீர்ப்பாசன வசதியைப் பெற்றுக்கொள்ள இருக்கின்றன. அத்தோடு பதுளை, மொனறாகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் குடிநீர் மற்றும் தொழிற்சாலை நீர்த்தேவைகளுக்கு 39 மில்லியன் கன மீற்றர் நீரை வழங்கக்கூடியதாக இருக்கும். மேலும் இத்திட்டத்தின் ஊடாக வருடாவருடம் 290 ஜிகாவாட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்புக்கு வழங்கப்படும்.

இவ்வாறு பாரிய பிரதிபலன்களை இலங்கை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் இத்திட்டம் புஹுல்பொல மற்றும் டயரபா உள்ளிட்ட இரு நீர்த்தேக்கங்களை இணைக்கும் 3.98 கிலோ மீற்றர் நீளமான நீர்ச்சுரங்கம் (இணைப்பு சுரங்கப் பாதை), 15.2 கிலோ மீற்றர் நீளமான நீரோட்ட சுரங்கப் பாதை, நிலக்கீழ் மின்நிலையம், சுவிட் யார்ட், பயணப் பாதை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நிர்மாணங்களையும் உள்ளடக்கியுள்ளது.

இத்திட்டமானது இலங்கையின் விவசாயத் துறையை மேலும் வலுப்படுத்தவும் மின்னுற்பத்தியை மேம்படுத்தவும் துணைபுரியும். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால சிநேகபூர்வ நட்புறவின் பிரதிபலனே அன்றி வேறில்லை. இலங்கையும் ஈரானும் அனைத்துத் துறைகளிலும் நெருக்கமான ஒத்துழைப்பைப் பேணி வருகின்றன.

அந்த வகையில் ஈரானின் அபிவிருத்தி உதவிகள் கடன் வடிவில் இலங்கைக்கு வழங்கப்படுகின்றன. குறிப்பாக உட்கட்டமைப்பு அபிவிருத்தி வசதிகள், நீர்ப்பாசனம் மற்றும் வலுசக்தி துறைகளை மேம்படுத்துதல் என்பவற்றில் ஈரான் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது.

அந்த வகையில் ஈரான் இலங்கைக்கு அளித்துள்ள கடன்களில் 19,301,572.6 அமெரிக்க டொலர்களை திருப்பி செலுத்தியுள்ள இலங்கை, 35,246,022.56 அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டியும் உள்ளது.

இருந்த போதிலும் தற்போது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ள உமா ஒயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இருநாட்டு வரலாற்றில் அழியாத்தடம் பதிக்கும் என உறுதிபடக் கூறலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT