Tuesday, May 21, 2024
Home » நாட்டில் டெங்கு நோய் மீண்டும் அதிகரிக்கும் ஆபத்து!

நாட்டில் டெங்கு நோய் மீண்டும் அதிகரிக்கும் ஆபத்து!

by sachintha
April 30, 2024 6:01 am 0 comment

நாட்டில் கடந்த தினங்களாக பிற்பகல் மற்றும் மாலை வேளையில் மழை பெய்யும் காலநிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவாக டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்து டெங்கு நோய்க்கு உள்ளாகக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான ஆபத்தும் பரவலாகக் காணப்படுகின்றது.

டெங்கு நுளம்பானது தெளிந்த நீர் தேங்கும் இடங்களில் பல்கிப் பெருகும் பண்பைக் கொண்டிருக்கின்றது. அதற்கு இந்த மழைக் காலம் நல்ல வாய்ப்பாக அமையும்.

மழைநீர் தேங்குவதற்கு ஏற்ற சூழலை சுற்றுச்சூழலில் பரவலாக அவதானிக்க முடிகிறது. குறிப்பாக மழைநீர் தேங்கக்கூடிய கைவிடப்பட்ட பொலித்தீன்கள், பிளாஸ்ரிக் பொருட்கள், மட்பாண்டங்கள், சிரட்டைகள், யோகட் கப்கள், பொலித்தீன் உறைகள், செவ்விளநீர் குரும்பைகள் உள்ளிட்ட திண்மக்கழிவுப் பொருட்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.

அதன் காரணத்தினால் தற்போது மழைக் காலநிலை ஆரம்பித்துள்ளதால் இவ்வாறான திண்மக் கழிவுப் பொருட்களை சீராகவும் முறையாகவும் தொடராகவும் அப்புறப்படுத்தி சுற்றாடலை சுத்தமாகவும் உலர்நிலையில் வைத்திருப்பதில் கூடுதல் கவனம் செலுவது அவசியம். அதன் ஊடாக தற்போதைய மழைக் காலநிலையுடன் சேர்த்து டெங்கு நுளம்பு பல்கிப் பெருகுவதைக் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இது தொடர்பில் கவனயீனமாகவோ அசிரத்தையோடோ நடந்து கொள்ளக்கூடாது.

ஏனெனில் டெங்கானது முழுமையாகத் தவிர்த்துக் கொள்ளக்கூடிய ஒரு நோய். அது நேரடியாக மனிதனுக்கு தொற்றக்கூடியதல்ல. அந்நோய்க்கிருமியை காவிப் பரப்பும் பணியை நுளம்பில் காணப்படும் ஒரு நுளம்பினமே மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது. அவ்வின நுளம்புகள் தெளிந்த நீரில் முட்டையிட்டு பல்கிப்பெருகும் பண்பைக் கொண்டுள்ளன.

இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களிலும் 21,880 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 09 பேர் உயிரிழந்துள்ளனர். மழை குறைவாகவும் உஷ்ணம் அதிகரித்தும் காணப்பட்ட காலப்பகுதியிலேயே இவ்வளவு தொகையானோர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்றால் மழையுடன் காலப்பகுதி எவ்வாறு இருக்கும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.

அதேநேரம் மழைநீரில் முட்டையிட்டு பல்கிப் பெருகும் மற்றொரு வகை இன நுளம்புகளால் பரப்பப்படக்கூடிய மலேரியா நோய் ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை உலக சுகாதார ஸ்தாபனத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான சான்றிதழும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அப்படி இருந்த போதிலும் கடந்த இரண்டொரு வருடங்களாக மலேரியா நோய்க்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்படக்கூடிய நிலைமை நாட்டில் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த வருடத்தில் மாத்திரம் 63 பேர் மலேரியா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இல்ஙகை மலேரியா அற்ற நாடாக இருந்த போதிலும் உலகின் பல நாடுகள் இன்னும் மலேரியா காணப்படக்கூடிய நாடுகளாக உள்ளன. அதனால் அவ்வாறான நாடுகளுக்கு பல்வேறு தேவைகளின் நிமித்தம் சென்று திரும்புபவர்கள் தான் மலேரியாவுக்கு உள்ளானவர்’களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். கடந்த வருடம் மலேரியா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் 60 பேர் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியவர்களாவர். இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களிலும் 09 பேர் இவ்வாறு மலேரியா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்கள் மத்தியில் மலேரியா தொடர்ந்தும் பதிவாவதும் அதில் அதிகரிப்பு ஏற்படுவதும் ஆரோக்கியமானதல்ல. இந்நிலை தொடருமாயின் மலேரியா நாட்டில் பரவக்கூடிய அச்சுறுத்தலும் ஏற்பட்டு விடலாம். அதன் விளைவாக மலேரியா அற்ற நாடு என்ற உறுதிப்படுத்தலும் கூட கேள்விக்குரியதாக விடும்.

மலேரியாவும் நுளம்புகளால் பரப்பப்படக்கூடிய நோயாகும். இவ்வின நுளம்புகளும் கூட நீர் தேங்கும் இடங்களிலேயே பல்கிப் பெருகக்கூடிய பண்பைக் கொண்டுள்ளன.

கடந்த காலப்பகுதியில் மழை நீர் தேங்குவதற்கான வாய்ப்பு குறைந்திருந்த சூழலிலும் கூட இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டிருகின்றனர்.

அதனால் தற்போது மழை பெய்யக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு பெய்யும் மழைநீர் தேங்கக்கூடிய சாதகமான சூழலும் சுற்றாடலில் நிறைந்து காணப்படுகின்றன. அதனால் இவை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி திணமக் கழிவுப் பொருட்களை முறையாகவும் சீராகவும் அப்புறப்படுத்துவதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும்.அதனை தம் பொறுப்பாகவும் கருதி செயற்பட வேண்டும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT