Saturday, May 4, 2024
Home » ரபா மீது இஸ்ரேல் விரைவில் படை நடவடிக்கைக்கு திட்டம்

ரபா மீது இஸ்ரேல் விரைவில் படை நடவடிக்கைக்கு திட்டம்

பொது மக்களை வெளியேற்ற கூடாரங்கள் அமைப்பு

by mahesh
April 25, 2024 6:00 am 0 comment

காசாவில் பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமாக இருக்கும் ரபா மீது இஸ்ரேல் இராணுவம் ‘மிக விரைவில்’ படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதோடு அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவதற்கான திட்டத்தையும் அது முன்னெடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் ரபாவில் இருந்து வெளியேற்றப்படும் பலஸ்தீன பொதுமக்களுக்காக ஆயிரக்கணக்கான கூடாரங்களை இஸ்ரேல் வாங்கி இருப்பதாக இஸ்ரேலிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த அரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் போர் காரணமாக எகிப்து எல்லையை ஒட்டி இருக்கும் ரபாவில் தஞ்சமடைந்துள்ள பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது.

இங்கு எஞ்சியுள்ள ஹமாஸ் படைப் பிரிவுகளுக்கு எதிராக படை நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பது தொடர்பில் இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது. எனினும் அவ்வாறான படை நடவடிக்கை பெரும் அழிவை ஏற்படுத்தும் என்று இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா உட்பட உலக நாடுகள் கவலை வெளியிட்டு வருகின்றன.

இங்குள்ள அகதிகள் எகிப்தின் சினாய் பகுதிக்குள் ஊடுருவுவதற்கு அனுமதிப்பதில்லை என்று எகிப்து குறிப்பிட்டிருக்கும் நிலையில் இந்த மக்கள் எங்கு செல்வார்கள் என்ற கவலையும் அதிகரித்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவுடன் பல வாரங்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின், ரபாவில் இருந்து வெளியேற்றப்படும் பலஸ்தீனர்களுக்காக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு 40,000 கூடாரங்களை வாங்கியுள்ளது. இதில் ஒவ்வொன்றிலும் 10 தொடக்கம் 12 பேர் வரை தங்க முடியுமாக உள்ளது என்று இஸ்ரேலிய அரச தரப்பு தெரிவித்துள்ளது.

ரபாவில் இருந்து சுமார் 5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கான் யூனிஸ் நகரில் வெள்ளை நிறத்திலான சதுர வடிவ கூடாரங்கள் வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவியுள்ளது.

இந்த கூடாரம் அமைக்கப்பட்ட நிலம் ஏப்ரல் 7 ஆம் திகதியன்று வெற்றி நிலமாகக் காணப்படுவது செய்மதி நிறுவனமான மக்சார் எடுத்த படங்கள் காட்டுகின்றன. இது தொடர்பில் கருத்துக் கூற இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு மறுத்ததாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் போர் கால அமைச்சரவை எதிர்வரும் இரண்டு வாரங்களில் கூடி பொதுமக்களை வெளியேற்றுவதற்கான ஒப்புதல் அளிக்க திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேலிய அரச வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. ரபா படை நடவடிக்கையின் முதல் கட்டமாக பொதுமக்களை வெளியேற்றுவதற்கு ஒரு மாதம் எடுத்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பில் நெதன்யாகு அலுவலகம் உடன் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவுடனான பிரச்சினைக்கு மத்தியில் பல வாரங்கள் பிற்போடப்பட்ட ரபா நடவடிக்கை ‘மிக விரைவில்’ இடம்பெறும் என்று இஸ்ரேலிய அரச தரப்பை மேற்கோள் காட்டி இஸ்ரேலில் அதிகம் விற்பனையாகும் ஹயோம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் ஏனைய செய்திப் பத்திரிகைகளும் இதனையொத்த செய்தியை வெளியிட்டுள்ளன.

ரபா மீதான படை நடவடிக்கை ஒன்றுக்கான சமிக்ஞையை இஸ்ரேல் இராணுவம் அண்மைக் காலத்தில் வெளியிட்டு வருகிறது. ‘வடக்கில் ஹமாஸ் கடுமையாக தாக்கப்பட்டது. காசா பகுதியின் மத்தியிலும் அது தீவிரமாக தாக்கப்பட்டது. ரபாவிலும் கூட விரைவில் கடுமையாக தாக்கப்படும்’ என்று காசாவில் செயற்படும் 162 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் இட்சிக் கோஹன், இஸ்ரேலின் அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த செவ்வாயன்று குறிப்பிட்டிருந்தார்.

ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களும் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன. தெற்கு ரபா நகரில் வீடு ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் மூன்று குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டு மேலும் நால்வர் காயமடைந்ததாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

ஏற்கனவே இடம்பெயர்ந்து ரபாவை அடைந்திருக்கும் பலஸ்தீனர்கள் மற்றொரு வெளியேற்றம் கடுமையானதான அமையும் என்று அஞ்சுகின்றனர்.

பாடசாலை ஒன்றில் தனது குடும்பத்துடன் தற்காலிக முகாமில் இருக்கும் 30 வயதான அயா என்பவர், பெரும் ஆபத்து பற்றி அஞ்சுவதாக தெரிவித்துள்ளார். துறைமுகப் பகுதியான அல் மவாசியில் இருந்து அண்மையில் இந்த முகாமுக்கு வந்த சில குடும்பங்கள் வசிக்கும் கூடாரங்களுக்கு அருகில் ஷெல் குண்டுகள் விழுந்ததை அடுத்து அவை தீப்பற்றிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

‘ரபாவில் இருந்து வெளியேறுவது தொடர்பில் நாம் முடிவு ஒன்றை எடுக்க வேண்டி உள்ளது. ஏனென்றால் ஆக்கிரமிப்பு திடீரென்று இடம்பெறக் கூடும் என்பதோடு நாம் தப்பிப்பதற்கு நேரம் இருக்காது என்று நானும் எனது தாயும் அஞ்சுகிறோம்’ என்று அந்தப் பெண் குறிப்பிட்டார். ‘நாம் எங்கு போவது?’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

காசாவில் 201 ஆவது நாளாகவும் நேற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருந்தன. அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் 200 ஆவது நாளை எட்டிய நிலையில் ஹமாஸ் ஆயுதப் பிரிவு பேச்சாளர் அபூ உபைதா கடந்த செவ்வாயன்று (23) வெளியிட்ட உரை ஒன்றில், ‘இந்த போரில் இஸ்ரேல் அவமானத்தையும் தோல்வியையும் மாத்திரமே சந்தித்துள்ளது’ என்றார்.

இதேவேளை இஸ்ரேலிய படை வாபஸ் பெற்ற கான் யூனிஸ் நகரின் நாசர் மருத்துவமனை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை தற்போது 300ஐ தாண்டியுள்ளது.

இந்த புதைகுழி தொடர்பில் அமெரிக்கா கவனத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் விபரத்தை தரும்படி இஸ்ரேல் அரசை அமெரிக்க அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

காசா போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பதற்றம் தீவிரம் அடைந்திருப்பதோடு வடக்கு ஹெப்ரூனில் நேற்றுக் காலை இஸ்ரேலிய படையினால் 20 வயது யுவதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டதை அடுத்தே இந்தப் பெண் சுடப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

தலையில் சுடப்பட்ட அந்தப் பெண்ணின் உடலை தமது பிடியில் வைத்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT