Home » காசா போர் நிறுத்தம் தொடர்பில் ஹமாஸ் தொடர்ந்து தீவிர பேச்சு

காசா போர் நிறுத்தம் தொடர்பில் ஹமாஸ் தொடர்ந்து தீவிர பேச்சு

முதல் முறை 'சாதகமான' நிலைப்பாடு

by mahesh
May 4, 2024 6:15 am 0 comment

காசா போர் நிறுத்தத் திட்டம் தொடர்பில் ஹமாஸ் தொடர்ந்து தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதோடு அந்த திட்டத்தை சாதக போக்குடன் கையாள்வதாக தெரிவித்துள்ளது. பேரழிவுக்கு உள்ளாகி இருக்கும் பலஸ்தீன நிலப்பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் காணாத பணியை மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பல மாதங்களாக இழுபறியுடன் நீடித்து வரும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில், ஹமாஸ் அமைப்பு முதல் முறை நம்பிக்கையை காண்பிக்கும் சமிக்ஞையை வெளிப்படுத்தி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிப்பதோடு தெற்கு நகரான ரபாவில் நேற்று (03) வான் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்காக விரைவில் பிரதிநிதிகளை அனுப்பப்போவதாக ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே தெரிவித்துள்ளார். ‘எமது மக்களின் கோரிக்கைகளை உண்மையாக்கும் உடன்படிக்கை ஒன்றுக்காக போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவரான ஹனியே, கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்களை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அதில் சாதகமான போக்குடன் இஸ்ரேலின் புதிய போர் நிறுத்த முன்மொழிவை ஆராய்வதாக தெரிவித்துள்ளார்.

காசாவில் 40 நாள் போர் நிறுத்தம் ஒன்று தொடர்பில் இஸ்ரேலின் முன்மொழிவு தமக்கு கிடைத்திருப்பதாக ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை கூறி இருந்தது. தொடர்ந்து கடந்த புதன்கிழமை இஸ்ரேல் சென்றிருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன், இந்த போர் நிறுத்த திட்டத்தை ஏற்கும்படி ஹமாஸை வலியுறுத்தி இருந்தார்.

எனினும் காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் அங்கிருந்து இஸ்ரேலிய படைகள் வாபஸ் பெறும் நிலைப்பாட்டில் ஹமாஸ் உறுதியாக இருப்பதோடு அதனை நிராகரிக்கும் இஸ்ரேல் காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் தற்காலி போர் நிறுத்தம் ஒன்றுக்கு முயற்சிக்கும் சூழலில் பேச்சுவார்த்தைகளில் இழுபறி நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த ஏழு மாதங்களாக இஸ்ரேல் இடைவிடாது நடத்தும் தாக்குதல்களில் தரைமட்டமாக்கப்பட்டிருக்கும் அனைத்து வீடுகளையும் மீளக் கட்டுவதற்கு 80 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்ளும் என்று ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் மதிப்பிடப்பட்டுள்ளது.

‘அழிவுகளின் அளவு பாரியதாகவும் முன்னெப்போதும் இல்லாததாகவும் உள்ளது… உலக மக்கள் இவ்வாறான ஒரு முயற்சியில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கையாண்டதில்லை’ என்று அரபு நாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிராந்திய பணிப்பாளர் அப்தல்லா அல் தர்தாரி ஜோர்தானில் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

இது பலஸ்தீனர்கள் பல தலைமுறைகளுக்கு சமூக பொருளாதார பதிப்பை செலுத்தும் என்று மதிப்பிட்டிருக்கும் அந்த அமைப்பு உடன் போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தொடரும் போரில் மத்தியஸ்தர்களால் இதுவரை ஒரு வாரம் போர் நிறுத்தம் ஒன்றை மாத்திரமே எட்ட முடிந்தது. கடந்த நவம்பரில் இடம்பெற்ற அந்தப் போர் நிறுத்தத்தில் காசாவில் பிடித்துச் செல்லப்பட்ட சுமார் 240 பணயக்கைதிகளில் 105 பேர் விடுவிக்கப்பட்டனர்.

பலஸ்தீன போராளிகள் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் பிடிக்கப்பட்ட பயணக்கைதிகளில் தொடர்ந்து 129 பேர் அந்தப் போராளிகளின் பிடியில் இருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது.

இதில் 35 பேர் உயிரிழந்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டிருப்பதோடு 49 வயது ட்ரோர் ஓர் என்பவர் உயிரிழந்திருப்பதை இஸ்ரேல் நேற்று உறுதி செய்தது. இவரின் இரு பிள்ளைகள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட நிலையில் கடந்த நவம்பரில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

பணயக்கைதிகளை விடுவிக்கும் உடன்படிக்கைக்கு செல்லும்படி கோரும் ஆர்ப்பாட்டங்கள் இஸ்ரேலில் தொடர்ந்து இடம்பெற்று வருவதோடு அது பிரதமர் பெஞ்சமின் நெதயாகு அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இஸ்ரேல் காசா மீதான தாக்குதல்களை தொடர்ந்து தீவிரமாக முன்னெடுத்து வருவதோடு உடன்படிக்கை எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும் தெற்கு காசாவின் ரபா மீது படையெடுப்பை முன்னெடுக்கப்போவதாக நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா, இஸ்ரேல் தரைப்படை நுழையாத ஒரே காசா நகராக உள்ளது. இங்கு இடம்பெறும் படை நடவடிக்கை பேரழிவுகளை ஏற்படுத்தும் என்று உலக நாடுகள் எச்சரித்து வருகின்றன. எனினும் இஸ்ரேல் அண்மைய வாரங்களாக இங்கு தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

ரபா பகுதி கடந்த வியாழக்கிழமை கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டதாக அங்கிருக்கு செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ரபாவில் கட்டடம் ஒன்றை இலக்கு வைத்து நேற்று இடம்பெற்ற இஸ்ரேலின் வான் தாக்குதல் ஒன்றில் நான்கு சிறுவர்கள் உட்பட ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது.

காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் எந்தத் தணிவும் இன்றி நீடித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த அரை ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெறும் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34,500ஐ தாண்டி இருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT