Wednesday, May 15, 2024
Home » புவி வெப்பமடைவதால் உருவாகி வரும் பேராபத்து!

புவி வெப்பமடைவதால் உருவாகி வரும் பேராபத்து!

by damith
April 29, 2024 6:00 am 0 comment

தற்போது நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. என்றாலும் ‘அதிக உஷ்ண காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்கும்’ என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் தற்போதைய மழைக் காலநிலையின் போது இடி, மின்னலின் தாக்கமும் அதிகரித்துக் காணப்படும். அதனால் இடி, மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அத்திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

குறிப்பாக இடிமின்னலுடன் கூடிய காலநிலை நிலவும் போது திறந்தவெளிகளில் நடமாடுவதையும் வேலைகளில் ஈடுபடுவதையும், குளங்கள், கடற்கரைகளில் நீராடுவதையும் தவிர்க்க வேண்டும். மீன்பிடி நடவடிக்கைகளிலும் வயல் வேலைகளிலும் ஈடுபடுவது ஆபத்தை ஏற்படுத்தலாம். மின்சாரப் பொருட்களின் பாவனையும் ஆபத்தானது. உயர்ந்த பச்சை இலை மரங்களுக்கு கீழே இருப்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆலோசனை கூறியுள்ளது. அதிக உஷ்ணத்துடன் கூடிய காலநிலை நிலவும் காலப்பகுதியில் இடி மின்னல் தாக்கம் தீவிரம் மிக்கதாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது இடி மின்னலுடன் மழை பெய்தாலும் கூட இன்னும் கடும் உஷ்ண காலநிலையே நிலவுகிறது. அதிகரித்த வெப்பத்தின் தாக்கம் பரவலாக உணரப்படுகிறது.

அதனால்தான் கடும் உஷ்ணத்தின் விளைவாக ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தவிர்த்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு பொதுமக்களை மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக அதிக உஷ்ணம் நிலவும் போது உடலில் நீரிழப்பு ஏற்படும். அதன் விளைவாக மயக்கம் உள்ளிட்ட பலவித உடல் உபாதைகளுக்கு முகம்கொடுக்கக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது. அதனால் உஷ்ணம் அதிகரித்துக் காணப்படும் தற்போதைய சூழலில் அடிக்கடி போதியளவில் நீரைப் பருகுமாறும் கடும் வெயிலில் தொழில்களில் ஈடுபடுவதைத் தவிர்ந்து நிழல்களில் போதிய ஒய்வு எடுத்துக் கொள்ளுமாறும் வலியுறுத்தப்படுகின்றது.

இவ்வாறான சூழலில் ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு அதிர்ச்சிகர செய்தியொன்றை வெளியிட்டு இருக்கிறது.

அச்செய்தியில், கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவில் இவ்வருடம் புவிவெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் கடந்த 65 வருடங்களின் பின்னர் கடலின் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் விளைவாக அடுத்துவரும் மூன்று வருட காலப்பகுதிக்குள் அதாவது, 2027 ஆண்டுக்குள் புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயர்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை ஆரோக்கியத்திற்கு உகந்த செய்திகள் அல்ல. புவியின் வெப்பநிலை அதிகரித்து வருவதை தற்போது மக்களால் உணர முடிகிறது. இவ்வாறான சூழிலில் அடுத்து வரும் மூன்று வருடங்களுக்குள் இந்த வெப்பநிலையில் 1.5 டிகிரி செல்சியஸ்ஸில் அதிகரிக்குமாயின் அதன் தாக்கங்கள் தற்போதையதை விடவும் மிக மோசமாக இருக்கும். அது உயிரினங்களின் இருப்புக்கும் அதிக அச்சுறுத்தலாக அமையலாம்.

தற்போது வெப்பநிலையில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பு இலங்கையில் மாத்திரமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் அவதானிக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில் அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டவியல் நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில், தற்போதைய அதிகரித்த வெப்பநிலை மே மாதம் வரையில் நீடிக்க முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு புவிவெப்பநிலை அதிகரிப்பது புவியின் இயற்கை சமநிலையைச் சீர்குலைக்கவே வழிவகுக்கும். அதன் விளைவாக புவிவாழ் உயிரினங்கள் பலவிதமான தாக்கங்களுக்கும் இருப்பின் அச்சுறுத்தலுக்கும் முகம்கொடுக்க நேரிடலாம். அதேநேரம் புவிவெப்பநிலை உயர்வடையும் போது பனிப்பாறைகளும் உருகத் தொடங்கும். அதன் விளைவாக கடல் நீர்மட்டம் உயர்வடையும். அதனால் பல நாடுகளின் தற்போதைய பல கரையோரங்கள் இருந்த இடம் தெரியாதபடி கடல்நீரில் மூழ்கி விடக்கூடிய ஆபத்தும் காணப்படுகின்றது.

ஆனாலும் புவியின் வெப்பநிலை அதிகரித்து வருவதற்கு மனிதனின் தவறான செயற்பாடுகளே அடிப்படைக் காரணம் என சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளும் கூட சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆகவே புவியின் வெப்பநிலை உயர்வதற்கு துணைபோகக் கூடிய வளிமாசடைதல், காடழிப்பு உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளையும் குறைத்துக் கொள்வதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். அதுவே மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் இருப்புக்கு உத்தரவாதமாகவும் பாதுகாப்பாகவும் அமையும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT