Monday, May 20, 2024
Home » பசளை மானியத்தினால் உணவு உற்பத்தி உயரும்

பசளை மானியத்தினால் உணவு உற்பத்தி உயரும்

by Gayan Abeykoon
May 10, 2024 1:00 am 0 comment

லங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்டுள்ள நாடான போதிலும், ஆரம்ப காலம் முதல் விவசாயப் பொருளாதார நாடாகும். உணவு உற்பத்திப் பயிர்ச்செய்கைக்கு அவசியமான மண்வளத்தையும் சீதோஷண நிலையையும் இந்நாடு இயற்கையாகவே பெற்றுக் கொண்டுள்ளது.

குறிப்பாக நெற்செய்கைக்குத் தேவையான மண்வளமும் சீதோஷண நிலையும் இந்நாட்டில் தாராளமாகக் காணப்படுகின்றன. அதனால் நெற்செய்கையை பலப்படுத்திடவும் பரவலாக்கிடவும் ஆரம்ப காலம் முதல் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நெற்செய்கையானது தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட ஒன்றாகும். அதனால் இச்செய்கையை மேம்படுத்திடவென மன்னர்களது ஆட்சிக் காலம் முதல் நாட்டின் பல பிரதேசங்களிலும் நீர்ப்பாசனக் கட்டமைப்புக்கள், நீர்தேக்கங்கள், குளங்கள் என்பன அமைக்கப்பட்டன. இன்று பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான நீர்ப்பாசனக் கட்டமைப்புக்கள் இற்றைக்கு பல தசாப்தங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்டவையாகும்.

இவ்வாறான பின்னணியில் ஒரு காலத்தில் தெற்காசியாவின் நெற்களஞ்சியமாக விளங்கிய இலங்கை, பல நாடுகளுக்கும் அரிசியை ஏற்றுமதி செய்யக் கூடியதாகவும் இருந்துள்ளது. இந்நாட்டின் பிரதான உணவு என்ற இடத்தையும் அரிசி அன்றே பெற்றுக் கொண்டது.

ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு உள்ளாகி இருந்த காலப்பகுதியில் இந்நாட்டின் நெற்செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனபோதிலும் சுதந்திரத்திற்கு பின் வந்த ஆட்சியாளர்கள் நெற்செய்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக பல்வேறு ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளான இந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆக்கபூர்வமான பல பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்திட்டங்களில் இரசாயனப் பசளையை விவசாயிகள் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்து கொடுத்தமையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

குறிப்பாக விவசாயிகள் இரசாயனப் பசளையை எவ்வித இடையூறுகளும் இன்றி பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்த அரசாங்கம் பசளையை மானியமாகப் பெற்றுக்கொடுக்கும் திட்டத்தையும் முன்னெடுத்தது. அதனைத் தொடர்ந்து பசளை மானியத்திட்டத்தின் கீழ் பசளையை கொள்வனவு செய்வதற்கான பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிடும் திட்டத்தையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

இத்திட்டங்கள் அனைத்தும் நெற்செய்கையில் தன்னிறைவு அடைவதை இலக்காக கொண்டவையாக அமைந்துள்ளன.

இதேவேளை இவ்வருடம் சில நாடுகளுக்கு அரசியை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பையும் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இவ்வாறான சூழலில் இந்நாட்டின் நெற்செய்கை மேலும் விரிஸ்தரிப்பதிலும் ஊக்குவிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

அந்த அடிப்படையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களில் நெற்செய்கையாளர்களுக்கான பசளை மானியத் திட்டம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் நெற்செய்கைக்கு அவசியமான எம்.ஒ.பி (Muriate of Potassium) பசளையை கொள்வனவு செய்து கொள்ளவென ரூ. 15 ஆயிரம்  விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கடந்த 07 ஆம் திகதி முதல் விவசாயத் திணைக்களத்தினால் வைப்பிடப்பட்டுள்ளது.

இதனை நெற்செய்கையாளர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். அத்தோடு நம்பிக்கையோடு நெற்செய்கையில் ஈடுபடுவதிலும் அவர்கள் ஆர்வம் கொண்டவர்களாக செயற்படுகின்றனர்.

நெற்செய்கை வலுப்படுத்துவதற்கு எம்.ஒ.பி பசளை மிகவும் அவசியமானது. என்றாலும் கடந்த சில போகங்களில் இப்பசளைப் பயன்பாட்டில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த போகத்தில் 08 இலட்சம் ஹெக்டெயர் பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் 11 ஆயிரம் மெற்றிக் தொன் எம்.ஒ.பி பசளைதான் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு பசளை நிறுவனங்களிலும் நாட்டுக்குத் தேவையான அளவு எம்.ஒ.பி. பசளை கையிருப்பில் இருப்பதாக தெரிவித்துள்ள விவசாய அமைச்சு, இவ்வருடம் சுமார் 15 ஆயிரம் மெற்றிக்தொன் எம்.ஒ.பி பசளையே தேவைப்படும் என்றுள்ளது. ஆனால் தற்போது 35 ஆயிரம் மெற்றிக் தொன் எம்.ஒ.பி பசளையை கையிருப்பில் உள்ளது. அவற்றில் 27 ஆயிரம் மெற்றிக் தொன் பசளை அரசுக்கு சொந்தமான பசளை நிறுவனங்களிடம் உள்ளன.

ஆகவே நெற்செய்கையை மேலும் மேம்படுத்தவும் பரவலாக்கவும் ஊக்குவிக்கவும் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கப்பட வேண்டும். அது நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அளிக்கப்படும் பாரிய பங்களிப்பாக அமையும். அத்தோடு நாட்டின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் பக்கத்துணையாக அமையும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT