Saturday, June 1, 2024
Home » ‘Come to RCB’; கே.எல்.ராகுலுக்கு அழைப்பு விடுக்கும் இரசிகர்கள்

‘Come to RCB’; கே.எல்.ராகுலுக்கு அழைப்பு விடுக்கும் இரசிகர்கள்

- களத்திலேயே விரக்தியை வெளிப்படுத்திய சஞ்சீவ் கோயங்கா

by Prashahini
May 9, 2024 9:16 pm 0 comment

நடப்பு IPL 2024 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்குப் பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல்.ராகுலிடம் தனது விரக்தியை ஆவேசத்துடன் வெளிப்படுத்தி இருந்தார்.அது சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் மத்தியில் பரவலாக கவனம் பெற்றது.

கே.எல்.ராகுலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் ஒலித்தன. இதில் ஆதரவு குரலே அதிகம். ‘கெமரா கண்களுக்கு அப்பால் அதை செய்திருக்கலாம்’ என்பதை பெரும்பாலான பதிவுகள் எதிரொலித்தன. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலரும் ராகுலுக்கு ஆதரவாக பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் அன்பர்களும், இரசிகர்களும் கே.எல்.ராகுலை தங்கள் அணிக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர். அவர்களது இந்த தூதினை சமூக வலைதளத்தில் அதிகம் காண முடிகிறது. ‘எக்ஸ்’ தளத்தில் ‘Come to RCB’ என தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கே.எல்.ராகுல், 2013 மற்றும் 2016 IPL சீசனில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி உள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் விளையாடி உள்ளார். தற்போது லக்னோ அணியில் விளையாடி வருகிறார்.

T20 கிரிக்கெட் மீதான ஆர்வம் தனக்கு வந்ததே பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்த்த பிறகுதான் என்றும் Youtube பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த சூழலில்தான் ‘ஆர்சிபி அணிக்கு வாருங்கள்’ என இரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இது அடுத்த சீசனுக்கான அழைப்பு. அடுத்த சீசனுக்கு முன்பாக மெகா ஏலம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் 130 போட்டிகளில் விளையாடி, 4623 ரன்கள் எடுத்துள்ளார் ராகுல். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவர், அணியை வழிநடத்தும் கேப்டன்சி திறனும் கொண்டுள்ளார்.

இந்த தோல்வி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களில் இருக்கும் அணிகள் தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். கடந்த 2022 சீசன் முதல் லக்னோ அணி, IPL களத்தில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு சீசனிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு அந்த அணி முன்னேறியுள்ளது.

IPL கிரிக்கெட் ஃப்ரான்சைஸ் முறையில் நடத்தப்படுகிறது. அதாவது ஒவ்வொரு அணிக்கும் உரிமையாளர்கள் இருப்பார்கள். பெரும்பாலும் அணி தேர்வு தொடங்கி அனைத்திலும் அவர்களது தலையீடு இருக்கும். அது அனைவரும் அறிந்ததே. ஆனால், நேற்று (08) நடந்த சம்பவம் முற்றிலும் வேறானதாக இருந்தது. சஞ்சீவ் கோயங்காவின் இந்த செயலை கிரிக்கெட் ஆர்வலர்கள், இரசிகர்கள் எனப் பலரும் சமூக வலைதளத்தில் விமர்சித்து இருந்தனர்.

‘IPL ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் என்பது எங்களுக்கு புரிகிறது. இது மாதிரியான தோல்வி பாதிப்பை தரவே செய்யும். ஆனால், குறைந்தபட்சம் இந்த மாதிரியான செயல்களை திரைமறைவில் செய்யலாமே. கெமரா கண்களின் முன்பு ஏன் இப்படி? இது ராகுலின் நன்மதிப்பை குலைக்கும் வகையில் உள்ளது’ என பெரும்பாலான நெட்டிசன்கள் தங்களது பதிவிலும், கொமெண்டிலும் தெரிவித்திருந்தனர். அடுத்த சீசனில் ராகுல், லக்னோ அணிக்காக ஆடுவதே சந்தேகம் என்ன சிலர் சொல்லி இருந்தனர்.

இதற்கு முன்பும் IPL கிரிக்கெட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் பகிரங்கமாக அனைவரது பார்வைக்கும் தெரிந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டேவிட் வார்னர் இடையிலான சம்பவம். 2021 சீசனில் கேப்டனாக வார்னர் களம் கண்டார். இருந்தும் அவரது மோசமான ஃபார்ம் காரணமாக அந்த பொறுப்பில் இருந்து விடுவித்தது அணி நிர்வாகம். அதே சீசனில் ஆடும் லெவனில் இடம்பெறும் வாய்ப்பை இழந்தார். தொடர்ந்து பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அணிக்கு சப்போர்ட் செய்தார். அப்போது அது பேசு பொருளானது.

கடந்த 2017 சீசனில் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி நீக்கப்பட்டார். ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது அது விவாதத்தை எழுப்பியது. அந்த அணியின் உரிமையாளரும் சஞ்சீவ் கோயங்காதான். 2017 சீசனுக்கு பிறகு அந்த அணி கலைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT