Home » நீண்ட காலத்தின் பின்னர் சுமுகமான மேதின விழா!

நீண்ட காலத்தின் பின்னர் சுமுகமான மேதின விழா!

by Gayan Abeykoon
May 1, 2024 1:00 am 0 comment

தொழிலாளர் தினம் இன்றாகும். உலக தொழிலாளர் தினமாக சர்வதேச மேதினம் விளங்குகிறது. உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளை உறுதிப்படுத்த அடித்தளமாக அமைந்த தினமே இது. குறிப்பாக தொழிலாளர்களுக்கு நாளாந்தம் வேலைக்கான நேரம் எட்டு மணித்தியாலங்களாக அங்கீகரிக்கப்பட்ட தினமாக விளங்கும் இத்தினம் தொழிலாளர்களின் உரிமைகள், அபிலாஷைகளை உறுதிப்படுத்தும் நாளாகவும் விளங்குகிறது.

இவ்வாறு சிறப்புற்று விளங்கும் இத்தினத்தை வியர்வை சிந்தி உழைக்கும் அனைத்து தொழிலாளர்களும் சிறப்பாகவும் வெகுவிமரிசையாகவும் வருடா வருடம் கொண்டாடுகின்றனர். அந்த வகையில் இவ்வருடமும் இத்தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதிலும் குறிப்பாக இலங்கையில் இம்முறை இத்தினத்தை வெகுசிறப்பாகக் கொண்டாடுவதில் உச்சபட்ச கவனம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இலங்கையைப் பொறுத்தவரையில் இச்சமயம் இரண்டு விடயங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

அவற்றில் ஒன்று கடந்த சில வருடங்களாக இந்நாட்டில் தொழிலாளர் தினத்தை சிறப்பாகக் கொண்டாட தொழிலாளர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட் 19 பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி என்பன காரணமாக கடந்த சில வருடங்களாக மேதினத்தை சுதந்திரமாகவும் வெகுவிமரிசையாகவும் கொண்டாட முடியவில்லை.

ஆனால் இம்முறை நாட்டில் அவ்வாறான இடையூறுகள் எதுவும் இல்லை. அதன் பயனாக இத்தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவதில் தொழிலாளர்கள் சிரத்தை எடுத்துக் கொண்டுள்ளனர்.

அதன் பயனாக இம்முறை நாடெங்கிலும் 40 மே தினக்கூட்டங்கள் இடம்பெறுகின்றன. அவற்றில் 14 ஊர்வலங்களும் கூட்டங்களும் தலைநகர் கொழும்பை மையப்படுத்தியதாக நடத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இக்கூட்டங்களில் கொழும்பில் நடாத்தப்படும் மே தினக்கூட்டங்களும் ஊர்வலங்களுமே முக்கியத்துவம் பெற்றதாக விளங்கும் என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏனென்றால் இவ்வருடத்தின் இறுதிப் பகுதியில் நாட்டில் முக்கிய தேர்தல் ஒன்று நடத்தப்பட இருக்கிறது. அந்த தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் செல்வாக்கையும் பலத்தையும் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இத்தினத்தைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றன. அந்தப் பின்னணியில் தான் பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் இம்முறை மே தின ஊர்வலங்களையும் கூட்டங்களையும் கொழும்பில் நடாத்துவதற்கு ஏற்பாடுகளை முன்னெடுத்து இருக்கின்றன.

இவ்வாறான சூழலில் இந்த தொழிலாளர் தினத்தில் தலைநகர் கொழும்பு விழாக்கோலம் பூண்டுள்ளளது. ஒவ்வொரு அரசியல் கட்சியினதும் கொடிகளும், பதாகைகளும் தலைநகரெங்கும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம் ஒவ்வொரு கட்சியும் தாங்கள் ஏற்பாடு செய்திருக்கும் ஊர்வலம் மற்றும் கூட்டத்தில் பங்குபற்றுபவர்களில் எண்ணிக்கையை அதிகளவில் காட்டிக் கொள்வதில் அதிக கவனம் எடுத்துக் கொண்டுள்ளன. அதனால் ஆதரவாளர்களையும் அபிமானிகளையும் கொழும்புக்கு அழைத்து வருவதிலும் இக்கட்சிகள் இறுதிக்கட்ட ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளன.

இவ்வாறு பெரும் எடுப்பில் இந்த மேதின ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் இவ்வருட மேதின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களுக்காக ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் ​மேல் செலவிடப்படுவதாக உத்தியோகப்பற்ற தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதன் நிமித்தம் இறுதிக்கட்ட நிதி திரட்டல்களையும் சில கட்சிகளின் ஏற்பாட்டாளர்கள் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மே தினக்கூட்டங்களில் பங்குபற்றும் ஆதரவாளர்களுக்கும் அபிமானிகளுக்கும் உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவை இவ்வாறிருக்க, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் அத்தேர்தலில் எந்தக் கட்சியின் அபேட்சகருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்தும் கூட சில கட்சிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அத்தோடு இன்றைய மேதினக் கூட்டங்களின் போது கட்சி தாவல்களும் இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு முக்கியத்துவம் பெற்றதாக விளங்கும் இலங்கையின் இம்முறை மேதினம் இந்நாட்டின் வரலாற்றில் அழியாத்தடம் பதிக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

ஆகவே நாட்டுக்கும் மக்களுக்கும் மறுமலர்ச்சியையும் பொருளாதார சுபீட்சத்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான வித்தூன்றும் நாளாக இத்தினம் அமைய வேண்டும். அதுவே அனைத்து தொழிலாளர்களதும் எதிர்பாரப்பாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT