Friday, May 3, 2024
Home » பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்ைகயை புறக்கணிக்கலாகாது!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்ைகயை புறக்கணிக்கலாகாது!

by damith
April 22, 2024 6:00 am 0 comment

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று இந்த சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து மலையகப் பெருநதோட்டப் பிரதேசங்களிலும் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பதுளை, பசறையிலும் நேற்றும் ஆர்ப்பாட்டமொன்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் நியாயமான கண்கொண்டு நோக்கத் தவறியுள்ளதாகவே தெரிகிறது. அதன் விளைவாகவே தொழிலாளர்கள் வீதியில் இறங்கி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இந்நடவடிக்கைகளின் ஊடாகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கை மக்கள்மயப்படுத்தப்பட்டு வருவதோடு, அது தொடர்பிலான விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்படுகின்றன.

தொழிலாளர்கள் முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கைகளால் தேயிலை, இறப்பர் உற்பத்திகளில் தாக்கங்கள், பாதிப்புக்கள் ஏற்பட இடமளிக்கப்படக்கூடாது. அது முதலாளிமார் சம்மேளனத்தின் பாரிய பொறுப்பாகும்.

ஏனென்றால் இந்த உற்பத்திகளில் பாதிப்புக்கள் ஏற்படுவது நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கங்கள் செலுத்தக்கூடியதாக அமைந்து விடலாம். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் விஷேட கவனம் செலுத்தத் தவறலாகாது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என்பவர்கள் இந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அளப்பரிய பங்களிப்பை நல்கும் பிரிவினரில் ஒரு பகுதியினராவார். அவர்கள் இந்நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுக்கக் கூடியவர்களாக உள்ளனர்.

தேயிலை, இறப்பர் தோட்டங்களில் பணிபுரிபவர்கள் என்றாலும் அவர்கள் இந்நாட்டின் பொருளாதாரத்திற்காக அளிக்கும் பங்களிப்பு அளப்பரியதாகும். சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக இந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு இந்த தொழிலாளர் சமூகம் முக்கிய பங்காற்றி வருகின்றது. அவர்களது பங்களிப்பு எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல.

அப்படியிருந்தும் இத்தொழிலாளர்களின் பொருளாதாரத்தில் முன்னேற்றங்களோ உட்கட்டமைப்பு வசதிகளில் மேம்பாடுகளோ குறிப்பிடத்தக்களவில் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

இவர்களது மூதாதையர் இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட போது அவர்கள் தங்க வைக்கப்பட்ட லயன் அறைகளில்தான் நான்கைந்து பரம்பரையினர் கடந்த பின்னரும் அவர்களது சந்ததியினர் தங்கி இருக்கின்றனர். அவர்களில் பெரும்பகுதியினருக்கு இன்னும் சொந்தமாக காணியோ இருப்பிட வசதியோ இல்லாதுள்ளது.

இந்நிலைமைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் அண்மைக் காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இம்மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும். இது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள உண்மையாகும். அப்போதுதான் அவர்களது பொருளாதாரம் மேம்பட வழிவகுக்கும். அதிலும் குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் இந்நாடு கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளானது. அதிலிருந்து கட்டம் கட்டமாக மீட்சி பெற்று மறுமலர்ச்சி பாதையில் தற்போது பிரவேசித்து இருக்கிறது. பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக மக்கள் பல்வேறுவிதமான நெருக்கடிகளுக்கும் அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்தனர். குறிப்பாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களது விலைகளும் பெரிதும் அதிகரித்தன. அச்சமயம் நாட்டின் பெரும்பாலான மக்கள் பொறுமை காத்தார்கள். ஆனால் அண்மைக் காலமாகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்களுக்கு அமைய அதன் பிரதிபலன்கள் சம்பள உயர்வுகளாகவும், பொருட்களின் விலைக் குறைப்புக்களாகவும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழலில்தான் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 1700 ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர். தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப இது நியாயமான கோரிக்கை என்பதுதான் பரவலான கருத்தாகும்.

இந்த நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் விஷேட கவனம் செலுத்தியுள்ளதோடு, முதலாளிமார் சம்மேளனத்திற்கு ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார்.

ஆகவே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனமும் நியாயமான கண்கொண்டு நோக்க வேண்டும். அதுவே பெருந்தோட்ட தொழிலாளர்களதும் ஏனைய அனைத்து தரப்பினரதும் எதிர்பார்ப்பாக உள்ளது. அப்போதுதான் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு பாரியதொரு நிவாரணம் கிடைக்கப் பெற்றதாக அமையும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT