Home » பயிர்ச் செய்கையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்!

பயிர்ச் செய்கையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்!

by gayan
April 27, 2024 6:00 am 0 comment

இலங்கையில் தற்போது மரக்கறி வகைகளின் விலைகள் பெருமளவில் குறைந்துள்ளன. விளைச்சல் அதிகரித்ததன் காரணமாகவே மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளன என்பது தெரிந்த விடயம். மரக்கறி வகைகளின் விலைகள் மிகவும் குறைவடைந்துள்ளதால் மக்கள் அவற்றை தற்போது தாராளமாகவே வாங்குகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் உள்நாட்டு மரக்கறிகள் ஒரு கிலோ இரண்டாயிரம் ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டமை நாம் அறிந்த செய்தியாகும். அவ்விலையேற்றம் காரணமாக மக்கள் மரக்கறிகளை வாங்குவதையே பெருமளவில் குறைத்துக் கொண்டனர். இதன் காரணமாக மரக்கறி வியாபாரிகளின் வருமானமும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்து வந்த பெருமழை காரணமாகவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மரக்கறிச்செய்கை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. மலையகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் மரக்கறித் தோட்டங்கள் வெள்ளத்தினால் முற்றாக அழிவுற்றிருந்தன. மரக்கறிச் செய்கை நிலங்களை விவசாயிகள் முற்றாகவே கைவிட வேண்டியுமிருந்தது. குறைந்த அளவான மரக்கறியே அறுவடை செய்யப்பட்டதால், அவற்றின் விலைகள் கிடுகிடுவென அதிகரித்திருந்தன.

மழை ஓய்ந்த பின்னர் விவசாயிகள் மீண்டும் மும்முரமாக மரக்கறிச் செய்கையில் ஈடுபட ஆரம்பித்தனர். அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் மரக்கறிச் செய்கையில் ஈடுபட ஆரம்பித்ததால், தற்போது மரக்கறி வகைகளின் விலைகள் வெகுவாக சரிந்துள்ளன. நாட்டின் சில பிரதேசங்களில் ஒரு கிலோ மரக்கறியை நூறு ரூபாவுக்குக் கூட வாங்கக் கூடிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களிலும் வீதியோரங்களில் மரக்கறிகள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதைக் காண முடிகின்றது. நாட்டின் பல்வேறு பகுதிளிலும் இருந்து சிறியரக வாகனங்களில் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்குச் செல்கின்ற வியாபாரிகள், அங்கிருந்து பெருமளவு மரக்கறிகளைக் கொள்வனவு செய்து வருகின்றனர். அம்மரக்கறிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வீதியோரங்களில் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மரக்கறி வகைகளின் விலைகள் இவ்வாறு பெருமளவில் குறைந்திருப்பது நுகர்வோரைப் பொறுத்தவரை மகிழ்ச்சியான விடயம் ஆகும். அன்றாட வாழ்க்கைச் செலவு குறைகின்றதென்பது பாவனையாளர்களைப் பொறுத்தவரை மகிழ்ச்சியானதாகும். ஆனால் மரக்கறிச் செய்கையாளர்களின் நிலைமைதான் பரிதாபத்துக்குரியது.

மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சியுற்றதால் செய்கையாளர்களின் வருமானம் பெருமளவில் குறைந்து போயுள்ளது. பயிர்ச்செய்கையில் முதலீடு செய்ததைக் கூட மீளப்பெற முடியாமல் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியதாகும்.

மரக்கறிச் செய்கையில் ஈடுபடுவதற்காக அவர்கள் செலவிட்ட பணமும், உழைப்பும் கொஞ்சநஞ்சமல்ல. அடுத்தவர்களிடம் கடன் பெற்று, தங்கநகைகளை அடகு வைத்து என்றெல்லாம் பணத்தைப் பெற்று அவர்கள் மரக்கறிச் செய்கைக்காக அதிகளவில் செலவிட்டனர். அதுமாத்திரமன்றி, மரக்கறிச்செய்கைக்கான அவர்களின் உடலுழைப்பும் அதிகம்.

மரக்கறி அறுவடையின் போது கிடைக்கும் விளைச்சல்தான் அவர்களது உழைப்புக்கான ஊதியம் ஆகும். விளைச்சலின் போது கிடைக்கின்ற பணத்தையே அவர்கள் முழுமையாக நம்பியிருந்தனர். விளைச்சலின் போது கிடைக்கின்ற பணத்தைக் கொண்டே அத்தனை கடன்களையும் ஈடு செய்ய முடியுமென்பதுதான் அவர்களது நம்பிக்கையாக இருந்தது.

ஆனால் அத்தனை நம்பிக்கைகளும் இப்போது வீணாகி விட்டன. மிகவும் குறைந்த விலைக்கே அவர்கள் தங்களது விளைச்சலை மொத்தவியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். மரக்கறிச் செய்கைப் பிரதேசங்களுக்கு நேரடியாகச் செல்கின்ற மொத்த வியாபாரிகள் மிகவும் குறைந்த விலையில் மரக்கறிகளைக் கொள்வனவு செய்து வருகின்றனர்.

விளைந்த மரக்கறிகளை நீண்ட காலத்துக்கு அறுவடை செய்யாமல் வைத்திருக்க முடியாது. எவ்வாறாயினும் உடனடியாகவே விற்பனை செய்துவிட வேண்டும். அதனால் காலடி தேடி வருகின்ற மொத்தவியாபாரிகளுக்கு குறைந்த விலையிலேயே அவற்றை விற்பனை செய்கின்றனர்.

மரக்கறிச் செய்கையாளர்கள் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் வியாபாரிகளும் நுகர்வோரும் இக்காலத்தில் நன்மையடைகின்றனர். மரக்கறிகளின் உற்பத்தி அதிகரிப்பதும், அவற்றின் விலைகள் குறைவடைவதும் தீமையான விடயங்களல்ல. ஆனாலும் மரக்கறிச் செய்கையாளர்கள் ஓரளவேனும் இலாபம் பெறக்கூடிய வகையில் சந்தைப்படுத்தல் அமைவதே சிறந்தது. இந்த விடயத்தில் எந்தத் தரப்பினரும் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்கப்படலாகாது.

மரக்கறி கொள்வனவு செய்யும் விடயத்தில் ‘மாபியா’ குழுக்கள் செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. அவர்கள் செய்கையாளர்களிடம் மிகக்குறைந்த விலையில் கொள்வனவு செய்து அதிக இலாபமீட்டுவதாகக் கூறப்படுகின்றது.

இவ்வாறான ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட்டாலேயே மரக்கறி உற்பத்தியாளர்கள் பயனடைய முடியுமென்பதை சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT