Thursday, May 9, 2024
Home » தமிழகத்தில் கூடுதல் ஆசனங்களை தி.மு.க கைப்பற்றப் போவது உறுதி!

தமிழகத்தில் கூடுதல் ஆசனங்களை தி.மு.க கைப்பற்றப் போவது உறுதி!

வெற்றி நம்பிக்கையுடன், காங்கிரஸின் வெற்றிக்காக வடமாநிலங்களில் பிரசாரம் செய்யப் புறப்படுகிறார் ஸ்டாலின்

by gayan
April 27, 2024 6:14 am 0 comment

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதுமே, தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கிய தி.மு.க தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின், தினந்தோறும் 2 லோக்சபா தொகுதிகளை உள்ளடக்கி சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

காலையில் மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்கு சேகரிப்பது, மாலையில் பொதுக்கூட்டங்கள் வாயிலாக வாக்கு சேகரிப்பது என்று தேர்தல் முடியும் வரை சுற்றிச் சுழன்று பணியாற்றினார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். கடந்த மார்ச் 22ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி வரை 20 பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்தார்.

தமிழ்நாட்டில் தேர்தல் வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தி.மு.க நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என பல தரப்பினரிடமும் பேசி வருகிறார் ஸ்டாலின்.

நடந்து முடிந்துள்ள தேர்தல் தொடர்பாக பல்வேறு அறிக்கைகளையும் பெற்றுள்ளார் ஸ்டாலின். எங்கெல்லாம் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும், எங்கெல்லாம் இழுபறி சூழல் இருக்கும் என்பதை அவர் கேட்டறிந்து வருகிறார்.

இந்த அறிக்கைகளைப் பொறுத்தவரை, தி.மு.க கூட்டணிக்கு பெருவெற்றி கிடைக்கும் எனச் சொல்லப்படுவதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஸ்டாலின்.

தமிழக நிலைமை இவ்வாறிருக்க, அடுத்தகட்டமாக, ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் பிரசாரம் செய்வதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் இந்தப் பிரசாரப் பயணத்திற்கான திகதிகள், இடங்கள் என நிகழ்ச்சிநிரல் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலினை, தி.மு.க நிர்வாகிகள் பலர் சந்தித்துப் பேசி வரும் நிலையில், வடமாநிலங்களுக்கும் தான் சென்று தேர்தல் பிரசாரம் செய்ய உள்ள தகவலை அவர் அவர்களிடம் பகிர்ந்துள்ளார். இந்த விஷயம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரவியுள்ளது.

இந்தியா கூட்டணி உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்த தலைவர்களில் ஒருவர் ஸ்டாலின் என்றால் மிகையில்லை. காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் திரள வேண்டும் என ஸ்டாலின் உறுதியாக கூறி வந்தார். சில கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறினாலும், காங்கிரஸுடன் உறுதியாக நின்று வருகிறார்.

தேர்தலுக்குப் பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் தி.மு.கவுக்கு முக்கிய இடம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில்தான் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வதற்காக வடமாநிலங்களுக்குச் செல்ல உள்ளார்.

இதேவேளை இந்தியாவில் லோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்களிப்பு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கேரளா, கர்நாடகா உட்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு வாக்கெடுப்பு நடைபெற்றது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் கடந்த 19 ஆம் திகதி 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இவற்றில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 65.54 சதவீத வாக்குகள் பதிவாகின.

கேரளா (20 தொகுதிகள்), ராஜஸ்தான் (13), மகாராஷ்டிரா (08), அசாம் (05), சத்தீஸ்கர் (03), கர்நாடகம் (14), உத்தர பிரதேசம் (08), மத்திய பிரதேசம் (07), பீகார் (05), மேற்கு வங்கம் (03), மணிப்பூர் (01), திரிபுரா (01), ஜம்மு காஷ்மீர் (01) என மொத்தம் 89 தொகுதிகளுக்கு நேற்று 26 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். அதேபோல் திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிட்டார்.

இதேசமயம் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி 29 தொகுதிகளில் உறுதியாக வெற்றி பெறும் என்று தந்தி டி.வி மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக தேர்தல் தொடர்பாக தந்தி டி.வி சார்பில் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணி கட்சிகள்தான் அதிக இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி 34 இடங்களில் வெற்றிபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் தி.மு.க 29 தொகுதிகளில் எளிதாக வெற்றி பெறும் எனவும், 5 தொகுதிகளில் கடும் போட்டிக்கு இடையே வெற்றி பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT