Monday, May 20, 2024
Home » கொவிட் தடுப்பூசியை மீளப்பெறுவதாக அஸ்ட்ராசெனகா நிறுவனம் அறிவிப்பு

கொவிட் தடுப்பூசியை மீளப்பெறுவதாக அஸ்ட்ராசெனகா நிறுவனம் அறிவிப்பு

by Prashahini
May 8, 2024 4:02 pm 0 comment

உலக சந்தையில் இருந்து தங்களது கொவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக பிரித்தானிய மருந்து தயாரிப்பு நிறுவனமான AstraZeneca (அஸ்ட்ராசெனகா) நிறுவனம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று (07) முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொரோனா பெருந்தொற்று நெருக்கடியின்போது அஸ்ட்ராசெனகா மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கொவிட்-19 பாதிப்புக்கு தடுப்பூசியை உருவாக்கின. இந்தியாவில் இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து கொரோனாவுக்கான தடுப்பூசியாக ‘கொவிஷீல்ட்’ என்ற பெயரில் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலக நாடுகளை சேர்ந்த பல கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

அஸ்ட்ராசெனகாவின் (AstraZeneca) தடுப்பூசியை செலுத்திக் கொண்ட சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக ஐக்கிய இராச்சியம் (UK) நீதிமன்றத்தில் 50 இற்கும் மேற்பட்ட வழக்கு தொடரப்பட்டது.

இது இரத்த உறைவு மற்றும் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை குறைத்தலை இந்த தடுப்பூசி ஏற்படுத்துகிறது என்றும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

வழக்கில் பதிலளித்த அஸ்ட்ராசெனகா நிறுவனம், கொரோனா தடுப்பூசி மிக அரிதான சந்தர்ப்பங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்தது.

இந்த நிலையிலேயே தமது தடுப்பூசியை சர்வதேச சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராசெனகா தெரிவித்துள்ளது.

சந்தையில் தற்போது புதிய கொவிட் திரிபுகளுக்கு செயலாக்கம் புரியக் கூடிய புதிய கொவிட் தடுப்பூசிகள் அதிகளவில் காணப்படுகின்றமை, தடுப்பூசிக்கான கேள்வி குறைந்துள்ளமை உள்ளிட்ட வர்த்தக ரீதியிலான காரணங்களுக்காக தாம் கொவிட் தடுப்பூசியை தயாரிப்பதையும், விநியோகம் செய்வதையும் நிறுத்திக் கொள்ளும் முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பிரித்தானிய செய்தி நிறுவனங்கள் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இந்த முடிவு முற்றிலும் தற்செயலானது என்ற விளக்கத்தையும் அந்நிறுவனத்தினால் தரப்பட்டுள்ளது.

காரணம், கடந்த மார்ச் மாதத்திலேயே தமது தடுப்பூசியை திரும்பப் பெறுவது தொடர்பான விண்ணப்பத்தை ஐரோப்பிய ஆணையத்திடம் அஸ்ட்ராசெனகா சமர்ப்பித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT