Monday, May 20, 2024
Home » இலங்கையின் மிக நீண்ட தூர கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்

இலங்கையின் மிக நீண்ட தூர கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்

- 55 நாட்களில், 98 ஆலயங்களைத் தரிசித்து, 815 கிலோமீற்றர் தூரம் நடை

by Prashahini
May 8, 2024 1:48 pm 0 comment

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல்விழாவினை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரை இன்னும் இரு தினங்களில் அதாவது 11ஆம் திகதி சனிக்கிழமை காலை ஜெயாவேல்சாமி தலைமையில் ஆரம்பமாகிறது.

அதற்கான சகல ஏற்பாடுகளும் ஒழுங்கமைக்கப்பட்டு பூர்த்தி அடைந்துள்ளதாக பாதயாத்திரைக் குழுத்தலைவர் ஜெயாவேல்சாமி தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு ஊவா ஆகிய 3 மாகாணங்களையும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகல 7 மாவட்டங்களையும் இணைத்து 55 நாட்களில் 98 ஆலயங்களைத் தரிசித்து 815 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கும் இப் புனித பாதயாத்திரை இலங்கையின் மிகமிகநீண்ட தூர கதிர்காம பாதயாத்திரையாக கருதப்படுகின்றது.

சந்நதி கதிர்காமம் பாதயாத்திரைக் குழுவின் ஏற்பாட்டில் 23ஆவது வருடமாக இப் பாதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

இம்முறை பாத யாத்திரையில் கலந்து கொள்வோர் கட்டாயம் சமய ஆசார முறைப்படி கலந்து கொள்ள வேண்டும்.

21 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் வேஷ்டியோடும், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் காவி புடவையுடனும் கலந்து கொள்ள வேண்டும். செல்லும் வழியில் உள்ள ஆலயங்களில் பஜனை மற்றும் சிரமதானத்தில் பங்கு கொள்ள வேண்டும்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் 45 வயதுக்கு உட்பட்ட பெண்கள் எக்காரணம் கொண்டும் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் யாராவது சமய ஆசார முறைக்கு மாறான நடத்தையில் ஈடுபட்டால் இடைநடுவில் நிறுத்தப்படுவார்கள் என்று ஜெயாவேல்சாமி மேலும் தெரிவித்தார்.

55 நாள் நீண்ட இப் பாதயாத்திரையில் பங்குபற்ற விரும்பும் அடியார்கள் அல்லது உதவி செய்ய விரும்பும் தனவந்தர்கள் 0778386381 அல்லது 0763084791 அல்லது 0776139932 என்ற தொலைபேசி இலக்கத் துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப் பட்டுள்ளார்கள்.

ஆடிவேல் விழா!

கதிர்காமக் கந்தன் ஆலயம் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் ஜூலை 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜூலை 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைதீவு குறூப் நிருபர் சகா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT