Sunday, May 19, 2024
Home » பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளஉயர்வு வர்த்தமானி அறிவித்தல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளஉயர்வு வர்த்தமானி அறிவித்தல்

by damith
May 6, 2024 6:00 am 0 comment

பெருந்தோட்டத் தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளம் ரூபா 1700 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருக்கிறது. தொழில் ஆணையாளரினால் இந்த வர்த்தமானி அறித்தல் விடுக்கப்பட்டு இருக்கிறது.

சர்வதேச தொழிலாளர் தினமான மேதினம் முதல் நடைமுறைக்கும் வகையில் இவ்வருடம் விடுக்கப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கொட்டக்கலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த மேதினக் கூட்டத்தில் உரையாற்றும் போது உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்த வர்த்தமானி அறிவித்தலானது பெருந்தோட்டத் தொழிலாளர்களை மாத்திரமல்லாமல் இந்நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினர் அனைவரையும் கௌரவித்திருக்கிறது. இதனை உறுதிபடக் கூறலாம்.

சுதந்திர இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மேதினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரத்திற்கு அரசாங்கம் எவ்வளவு தூரம் முக்கியத்துவம் அளித்திருக்கிறது என்பது இதன் ஊடாகத் தெளிவாகிறது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 1350.00 ரூபாவும் மேலதிக கொடுப்பனவாக 350.00 ரூபாவும் வழங்கப்பட வேண்டும். அத்தோடு மேலதிக கிலோவுக்கான கொடுப்பனவு பற்றியும் இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் மேலதிக கிலோவுக்கான கொடுப்பனவு குறித்து அந்தந்த தோட்ட நிர்வாகங்கள் தீர்மானிக்க வேண்டும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பள உயர்வு குறித்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் அது தொடர்பில் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கவும் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.

அதற்கேற்ப தொழில் அமைச்சுடனும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்தை எடுக்க வேண்டிய பொறுப்பு முதலாளிமார் சம்மேளனத்திற்கு முன்பாக உள்ளது.

ஆன போதிலும், ‘இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வழங்க முடியாது’ என்று முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் நாட்சம்பளத்தை ரூ. 1700.00 இனால் அதிகரிக்கக் கோரி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களை நடத்தியுள்ளனர். முதலாளிமார் சம்மேளனத்தினருடனும், தொழில் அமைச்சின் உயரதிகாரிகளுடனும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளன. இருந்தும் கூட நாட்சம்பள அதிகரிப்பு கோரிக்கைக்கு இணக்கப்பாடு எட்டப்படாத நிலைதான் நீடித்து வந்தது. இந்தப் பின்புலத்தில் இவ்விடயத்தில் விஷேட கவனம் செலுத்திய அரசாங்கம் இந்த வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருக்கிறது.

வர்த்தமானி அறிவித்தல் என்பது அரசாங்கத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தவென விடுக்கப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்பாகும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்க முடியாது. அதனால் வர்த்தமானி அறிவித்தலை மதிக்காது செயற்படுவது சட்டம் ஒழுங்கை மீறியதாகவே அமையும்.

அதனால் வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவது குறித்து முதலாளிமார் சம்மேளனம் கவனம் செலுத்த வேண்டும். அதுவே இத்தொழிலாளர்களின் கோரிக்கையை நியாயக்கண் கொண்டு நோக்கியதாக அமையும். அனைத்துத் தரப்பினரதும் எதிர்பார்ப்பு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதேயாகும்.

ஏனெனில் இன்றைய நாளாந்த வாழ்க்கை செலவின்படி, இந்த நாட்சம்பளம் மிகவும் குறைந்தளவு தொகை என்ற கருத்து பரவலாகக் காணப்படுகிறது. அதேநேரம் இந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு முக்கிய பங்களிக்கும் இத்தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்க முதலாளிமார் சம்மேளனம் தயங்கக் கூடாது. இந்நாட்டின் பொருளாதாரத்திற்குத் தேவையான அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் துறைகளில் ஒன்றாக விளங்கும் பெருந்தோட்டங்களில் பணியாற்றுபவர்களே இத்தொழிலாளர்களாவர்.

ஆகவே வர்த்தமானி அறிவித்தல் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு அவை தொடர்பான சட்டம் ஒழுங்கு குறித்து கவனம் செலுத்தவும் தவறலாகாது. அத்தோடு இத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து விடுக்கப்பட்டு இருக்கும் இந்த வர்த்தமானி அறிவித்தலை சாதகமான கண்கொண்டு நோக்கவும் வேண்டும். அதற்கேற்ப நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். அது பெருந்தோட்ட தொழிலாளர்களின் பொருளாதார நலன்களுக்கு நிவாரணமாக இருக்கும் என உறுதிபடக் கூறலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT