Monday, May 20, 2024
Home » என்றும் நினைவுகூரப்படும் பேராசிரியர் வித்தியானந்தன்

என்றும் நினைவுகூரப்படும் பேராசிரியர் வித்தியானந்தன்

by mahesh
May 8, 2024 6:00 am 0 comment

இலங்கையின் புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் சுப்ரமணியம் வித்தியானந்தன் அவர்களின் நூறாவது பிறந்த தினம் (08.05.2024) இன்றாகும். இத்தினத்தையொட்டி பேராசிரியர் சு. வித்தியானந்தன் அறக்கட்டளையும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியும் இணைந்து நூற்றாண்டு விழாவொன்றை ஏற்பாடு செய்துள்ளன. இந்த விழா எதிர்வரும் 11 ஆம் திகதி யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியின் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இலங்கையில் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கும் பத்திரிகைத்துறை முன்னேற்றத்திற்கும் அளப்பரிய பங்களிப்பை நல்கியவராக விளங்கும் சு. வித்தியானந்தன் முன்னணி எழுத்தாளருமாவார். நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ள வித்தியானந்தனின் பல கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. அவை இன்றும் பயன்மிக்க நூல்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்நாட்டின் வடமாகாணத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தில் 1924 ஆம் ஆண்டு மே மாதம் 08 ஆம் திகதி பிறந்த சு. வித்தியானந்தன், யாழ்ப்பாணம், வீமன்காமம் தமிழ்ப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தெல்லிப்பழை ஒன்றியக் கல்லூரி, பரி. யோவான் கல்லூரி, யாழ். இந்துக்கல்லூரி ஆகியவற்றில் இடைநிலைக் கல்வியைக் கற்ற இவர் இலங்கைப் பல்கலைக்கழகம், இலண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர்கல்வியைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுவாமி விபுலானந்த அடிகள், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ஆகியோர் இவரது ஆசிரியர்களாக இருந்துள்ளனர். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்று கலைமாணி, முதுகலைமாணி ஆகிய பட்டங்களைப் பெற்ற முதல் கல்விமானாகவும் விளங்குகிறார். தனது 26 ஆவது வயதில் பிரித்தானியா சென்று இலண்டன் பல்கலைக்கழகத்தில் இணைந்து கற்று கலாநிதி பட்டம் பெற்றுக் கொண்ட இவர், அங்கிருந்து திரும்பியதும் தினகரனில் இலண்டன் பயணம் தொடர்பில் பயணக் கட்டுரையை எழுதினார். அத்தோடு 1950 முதல் தினகரன் எழுத்தாளர்களில் ஒருவராகவும் விளங்கினார் சு. வித்தியானந்தன்.

அதேநேரம் லேக் ஹவுஸ் நிறுவனம் வெளியிடும் தினகரன் பத்திரிகைக்கு பேராசிரியர் கைலாசபதி, ஆர். சிவகுருநாதன் ஆகியோரை அறிமுகப்படுத்தியவரும் இவரேயாவார்.

இலண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தை பெற்றுக் கொண்ட சு. வித்தியானந்தன் தாயகம் திரும்பிய பின்னர் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளராக இணைந்து கொண்டார்.

அதேநேரம், 1970 ஆம் ஆண்டில் மூன்றாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு பாரிஸில் நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் இலங்கையில் இருந்து கலந்து கொண்ட பேராசிரியர் வித்தியானந்தன், நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1972 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதற்கு முன்னின்று உழைத்தவர்களில் ஒருவராகவும் விளங்குகிறார்.

இவை இவ்வாறிருக்க, 1977 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் வித்தியானந்தன். அதன் பின்னர் 1979 ஜனவரியில் அவ்வளாகம் பல்கலைக்கழகமான போது அதன் முதலாவது துணைவேந்தரானார் அவர். பல்கலைக்கழக வளாகமாக இருந்த யாழ். பல்கலைக்கழகத்தை முழுமையான பல்கலைக்கழகமாக மேம்படுத்துவதற்கு அவர் அரும்பாடுபட்டு உழைத்தார்.

அத்தோடு பல்கலைக்கழக மாணவர்களது தேவைகளை நிறைவு செய்யக்கூடிய வகையில் அவர் அவ்வப்போது கட்டுரைகளையும் எழுதினார். அக்கட்டுரைகளும் தொகுக்கப்பட்டுத் தனி நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. பேராசிரியர்களான கா. சிவத்தம்பி, க. கைலாசபதி, பொ. பூலோகசிங்கம், ஆ. வேலுப்பிள்ளை போன்ற தமிழறிஞர்களும் இவரது மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

பேராசிரியர் வித்தியானந்தன் யாழ்ப்பாணம் வளாகத் தலைவராகவும் தொடர்ந்து மும்முறை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.

இவ்வாறு அளப்பரிய சேவைகளை பேராசிரியர் வித்தியானந்தன் ஆற்றியுள்ளார். அவரது சேவைகளைக் கௌரவிக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகம் ‘பேராசிரியர் சு.வித்தியானந்தன் நூலகம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அத்தோடு இலங்கைத் தபால் திணைக்களம் பேராசிரியர் வித்தியானந்தனுக்கு 1997 நவம்பர் 11 ஆம் திகதி நினைவு தபால் முத்திரையையும் முதல் நாள் காகித உறையையும் வெளியிட்டு கௌரவித்துள்ளது.

தமிழ்மொழிக்கும் தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கும் மாத்திரமல்லாமல் பத்திரிகைத்துறை வளர்ச்சிக்கும் அளப்பரிய பங்களிப்பு நல்கியுள்ள பேராசிரியர் வித்தியானந்தனின் சேவைகள் இந்நாட்டு வரலாற்றில் அழியாத்தடம் பதித்துள்ளன. அத்தோடு அவரது பணிகள் என்றும் நினைவு கூரப்படக் கூடியவை என்றால் அது மிகையாகாது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT