Home » சு.க.வின் பதில் தலைவராக விஜயதாச; மைத்திரி தரப்பினர் ஏகமனதாக தீர்மானம்

சு.க.வின் பதில் தலைவராக விஜயதாச; மைத்திரி தரப்பினர் ஏகமனதாக தீர்மானம்

சந்திரிக்கா தரப்பில் நிமல் சிறிபால டி சில்வா

by damith
April 22, 2024 6:00 am 0 comment

லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினரால் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.

லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நேற்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கோட்டே பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தின்போதே அமைச்சர் விஜயதாசவுக்கு இந்நியமனம் வழங்கப்பட்டது.

கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவின் பெயர் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாசவினால் முன்மொழியப்பட்டது. இந்த யோசனை கட்சியின் பிரதி செயலாளர் சரத் ஏக்கநாயக்கவினால் வழிமொழியப்பட்டது.

அதற்கிணங்க சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்‌ஷவின் பெயர் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த எம்.பி. அறிவித்தார்.

லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவிவகித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்பதவியை தொடர்ந்து வகிப்பதை தடைசெய்து நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பின்னணியில், நேற்று கட்சியின் பதில் தலைவர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய பின்னணியில்லங்கா சுதந்திரக் கட்சியின் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தரப்பினர், கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கை மன்றக் கல்லூரியில் கூடி கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நியமிக்க நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினர் நேற்று அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவை பதில் தலைவராக நியமித்துள்ளனர்.

நேற்றைய கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த எம்.பி. கட்சியின் நிறைவேற்றுக் குழுக்கூட்டத்திற்கு அனைவரும் வருகை தந்துள்ள நிலையில் ஜனநாயகம் இன்று வெற்றிபெற்றுள்ளது என நான் நம்புகிறேன்.

இது உத்தியோகபூர்வமான கூட்டமாகும். கட்சி தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் கட்சியின் நிறைவேற்றுக்குழுவுக்கே உள்ளது. அந்தவகையில் கட்சிக்குள் மேலும் ஒரு குழு கட்சியை சீர்குலைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்கள் லங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைக்கப் பார்க்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக நேற்று முற்பகல் அமைதியின்மை நிலவியது. மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று நடைபெற்ற நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் பின்னர் ஒரு குழுவினர் தலைமையகத்திற்குள் பிரவேசிப்பதற்கு முயன்ற போதே இந்த அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT