Tuesday, April 30, 2024
Home » மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் பதற்றம்

மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் பதற்றம்

by mahesh
April 17, 2024 6:00 am 0 comment

ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராவதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், எதற்கும் தயாராகவே இருப்பதாக ஈரானும் கூறியுள்ளது. அதனால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

மத்திய கிழக்குப் பகுதியில் ஏற்கனவே இஸ்ரேல் – ஹமாஸ் போர் நடக்கும் நிலையில், இப்போது மற்றொரு பதற்றமான சூழல் உருவாகி வருகிறது. இஸ்ரேல் – ஈரான் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலை இஸ்ரேல் சமாளித்துவிட்டது. பெரியளவில் தேசம் இல்லை என்ற போதிலும் இது புவிசார் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் ஈரான் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் முடிவுக்காகக் காத்திருப்பதாகவும் இஸ்ரேல் ராணுவ தளபதி கூறியுள்ளார். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அதற்கு சில வினாடிகளில் பதிலளிப்போம் என்றுள்ளது ஈரான், தேவைப்பட்டால் இதுவரை பயன்படுத்தாத ஆயுதங்களைக் கூட பயன்படுத்துவோம் என்றுள்ளது. இது மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றத்தை அதிகரிப்பதற்கு வகுத்துள்ளது.

ஈரான் தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார். 24 மணி நேரத்திற்குள் பெஞ்சமின் நெதன்யாகு நடத்திய இரண்டாவது கூட்டம் இதுவாகும். இதுவரை பதில் தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் எந்தவொரு முடிவையும் எடுக்காத நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான அனைத்தையும் செய்யும் என்று நெதன்யாகு அமெரிக்க உயர் அதிகாரி ஸ்டீவ் ஸ்காலிஸுடனான தொலைப்பேசி உரையாடலில் கூறியதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேநேரம் ஈரானும் கூட இஸ்ரேல் என்ன செய்தாலும் அதற்குப் பதிலடி தர தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக ஈரான் தளபதி கூறுகையில், “நாங்கள் எங்களால் என்னவெல்லாம் முடியும் என்பது குறித்து ஆய்வு செய்கிறோம். பல ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவுவது ஒரு பதிலடியாக இருக்கும். சரியான நேரத்தில் மிக பெரியளவில் பதிலடி கொடுக்க நாங்கள் காத்திருக்கிறோம்” என்றார்.

நெதன்யாகு தலைமையில் நேற்று முன்தினம் நடாத்தப்பட்ட அமைச்சரவைக்கூட்டத்தில் ட்ரோனுக்கு பதிலடி கொடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து தீவிரமாக ஆலோசனை நடாத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அதில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

இஸ்ரேல் ஏதாவது பதில் தாக்குதல் நடத்தினால் அதைச் சமாளிக்க தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கான விரிவான போர் உத்திகளை வகுத்துள்ளதாகவும், இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தினால் இதுவரை பயன்படுத்தப்படாத ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறது.

இருப்பினும், சர்வதேச நாடுகளின் அழுத்தம் அதிகமாக இருப்பதால் இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது. அமெரிக்கா தொடங்கி உலகின் பல நாடுகளும் இஸ்ரேல் நிலைமையை மோசமாக்கக்கூடாது என்றே கூறியுள்ளனர். இஸ்ரேல் – ஈரான் இடையே போரை விரும்பவில்லை என்று கூறியுள்ள அமெரிக்கா, அந்த பிராந்தியத்தில் அமைதியையே விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் முதலாம் திகதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் ஈரானின் குடியரசுப் படைத்தளபதிகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை. என்றாலும், இஸ்ரேல் தான் இத்தாக்குதலை நடத்தியதாகக் குறிப்பிட்டே ஈரான் இஸ்ரேல் மீது சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT