Tuesday, April 30, 2024
Home » வடக்கையும் தெற்கையும் இணைக்கும் விமானப்படையின் 73வது ஆண்டு விழா

வடக்கையும் தெற்கையும் இணைக்கும் விமானப்படையின் 73வது ஆண்டு விழா

by mahesh
March 2, 2024 6:00 am 0 comment

இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவு விழா இன்று (02ஆம் திகதி) ஆரம்பமாகிறது. இவ்விழாவின் பிரதான வைபவங்கள் யாழ்ப்பாணத்தை அடிப்படையாகக் கொண்டு வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. பௌத்த சமய நிகழ்ச்சிகள் களனி ரஜமகா விகாரையில் நடைபெறவிருப்பதோடு ஏனைய சமய நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவ்விழாவையொட்டி கல்வி மற்றும் சமூக சேவை வேலைத்திட்டங்களும் வட மாகாணத்தில் விஷேடமாக ஏற்பாடு செய்யப்படடிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

விமானப்படை என்பது ஒரு நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கப் பங்காற்றும் முக்கிய பிரிவாகும். குறிப்பாக நாடொன்றின் ஆகாயப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரிவினரே விமானப்படையினர். இவற்றைவிடவும் சமூக, பொருளாதார உட்கட்டமைப்பு அபிவிருத்திகளுக்கும் விமானப்படைகள் பங்களிப்பது வழமை.

அந்த வகையில் இற்றைக்கு 73 வருடங்களுக்கு முன்னர் ரோயல் விமானப்படையாக ஆரம்பிக்கப்பட்ட இலங்கை விமானப்படை 1972 இல் இலங்கை குடியரசானது முதல் இலங்கை விமானப்படை பெயர் மாற்றம் பெற்றது.

இந்நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் முன்னுரிமை அளித்து செயற்பட்டுவரும் இலங்கை விமானப்படை, நாட்டின் நிலைபேறான சமாதானத்திற்காக அளப்பரிய பங்களிப்பை நல்கி வருகின்றது. குறிப்பாக 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார் மூன்று தசாப்த காலம் நீடித்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும் நாட்டில் அமைதி சமாதானத்தை ஏற்படுத்தவும் அளித்த பங்களிப்புக்கள் அளப்பரியதாகும்.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு பங்களித்து வரும் இலங்கை விமானப்படை சமூக மேம்பாட்டு பணிளையும் முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் விமானப்படையினரின் இவ்வருட விழாவை வடக்கையும் தெற்கையும் இணைக்கும் வகையில் யாழ்ப்பாணத்தை அடிப்படையாகக் கொண்டு வடமாகாணத்தில் நடாத்துகின்றனர்.

இவ்விழாவையொட்டி கல்வி அமைச்சின் சிபாரிசுகளுக்கு அமைய வட மாகாணத்திலுள்ள 73 பாடசாலைகளில் 100 மில்லியன் ரூபா அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. ‘வடக்குக்கு என்னால் ஒரு புத்தகம்’ என்ற வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ், ஆங்கில மொழிப் புத்தகங்களைப் பகிர்ந்தளிக்கவென 25 மில்லியன் ரூபாவையும் விமானப்படையினர் ஒதுக்கியுள்ளனர்.

மேலும் வட மாகாணத்திலுள்ள 5 மாட்டங்களிலும் அந்தந்தப் பகுதிகளுக்கு பொறுத்தமான மரக்கன்றுகளை நடவும் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். யாழ்ப்பாணப் பல்லைக்கழகத்திற்கு கேஸ் டேர்பைன் இன்ஜின் ஒன்றும் விமானப்படையினரால் வழங்கப்படவிருக்கிறது.

அத்தோடு விமானப்படையினர் வருடா வருடம் ஏற்பாடு செய்யும் பைசிக்கிள் ஓட்டப்போட்டியும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

வடமாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு பாரிய ஏற்பாடுகளுடன் இன்று ஆரம்பமாகும் விமானப்படையினரின் 73 வது ஆண்டு விழா ஊடாக மக்களுக்கு விமானப்படை குறித்த அறிவூட்டலகள் முன்னெடுக்கப்படவிருக்கின்றன.

இவ்விழாவின் நிமித்தம் வட மாகாணத்தில் பல்வேறு சமூக சேவைப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் யுத்த முடிவுக்கு வந்த பின்னரும் அப்பிரதேசங்களிலும் புனரமைப்பு மற்றும் சமூக சேவைப் பணிகள் பல விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

73 வது ஆண்டு விழாவின் பிரதான வைபவங்கள் வட மாகாணத்தில் இடம்பெறுகின்ற போதிலும் நாடெங்கிலுமுள்ள பிராந்திய மட்ட விமானப் படைத்தளங்களிலும் அணிவகுப்பு மரியாதை, விளையாட்டுப் போட்டிகள், மாகாணத்துடன் சம்பந்தப்பட்ட சமூக சேவைகள், இரத்தான முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு பரந்தடிப்படையில் கவனம் செலுத்தி முன்னெடுக்கப்படும் இவ்விழாவை யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாண மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் விமானப்படைத் தளபதி உதேனி பெரேரா, ‘கடந்த காலங்களில் விமானப்படையின் ஆண்டு விழாக்கள் கொழும்புக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இம்முறை வடக்கையும் தெற்கையும் இணைக்கும் வகையில் யாழ்ப்பாணத்தை அடிப்படையாகக் கொண்டு வட மாகாணத்தில் நடாத்தப்படுகிறது. இந்நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம். அது அபிவிருத்திக்கு இன்றியமையாததது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயற்படுவது இன்றியமையாததாகும். அது நாட்டினதும் மக்களினதும் சுபீட்சத்திற்கு வித்திட்டும். அந்த வகையில் இலங்கை விமானப்படையினர் மேற்கொண்டுள்ள இந்த ஏற்பாடுகள் மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் நிச்சயம் ஏற்படுத்தும் எனலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT