Friday, May 17, 2024
Home » ரபாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 20 பேர் பலி: கெய்ரோவில் புதிய பேச்சு ஆரம்பம்

ரபாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 20 பேர் பலி: கெய்ரோவில் புதிய பேச்சு ஆரம்பம்

-பிளிங்கன் ஏழாவது முறையாக பிராந்தியத்திற்கு பயணம்

by sachintha
April 30, 2024 7:50 am 0 comment

 

பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருக்கும் அதே நேரம், எகிப்து தலைநகர் கெய்ரோவில் புதிய போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நேற்று (29) ஆரம்பமானது.

தெற்கு நகரான ரபாவில் உள்ள மூன்று வீடுகள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொடக்கம் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் ஐந்து சிறுவர்கள் உட்பட குறைந்தது 20 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரத்தை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

கடந்த ஏழு மாதங்களாக நீடிக்கும் போர் காரணமாக இடம்பெயர்ந்து மக்கள் நிரம்பி வழியும் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா மீது படை நடவடிக்கை ஒன்றுக்கு இஸ்ரேல் தயாராகி வரும் நிலையிலேயே அங்கு நாளுக்கு நாள் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் ரபாவின் ஜினினா பகுதியில் உள்ள அல் காதிப் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டை இலக்கு வைத்து நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட மூவர் கொல்லப்பட்டதோடு பலரும் காயமடைந்தனர்.

தொடர்ந்து ஷபோரா அகதி முகாமில் அல் கவாஜா குடும்பத்திற்கு சொந்தமான வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் குழந்தை ஒன்று உட்பட ஏழுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் ரபாவின் சலாம் பகுதியில் உள்ள அபூ தாஹா குடுபத்திற்கு சொந்தமான வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று சிறுவர்கள் உட்பட பத்துப் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ரபா மீதான இஸ்ரேலின் படை நடவடிக்கை பேரழிவை ஏற்படுத்தும் என்று உலகத் தலைவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

கடந்த ஞாயிறன்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், காசா எல்லை நகரான ரபா மீதான படையெடுப்பது தொடர்பில் ‘தமது தெளிவான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்’ என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.

வெள்ளை மாளிகை வெளியிட்ட இந்த அறிவிப்பில், இரு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பில் மேலும் விபரங்கள் வெளியிடப்படவில்லை. முறையான மற்றும் நம்பகமான மனிதாபிமான திட்டம் ஒன்று இல்லாமல் முன்னெடுக்கப்படும் ரபா படை நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று அமெரிக்கா ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது.

ராப தவிர காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் சரமாரித் தாக்குதல்கள் நீடித்து வருகின்றன.

காசாவின் வடக்கில் உள்ள காசா நகரில் இரு வீடுகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதலில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய காசாவின் புரைஜ் அகதி முகாம் உட்பட காசாவின் ஏனைய பகுதிகளில் பீராங்கி தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. மத்திய காசாவின் நுஸைரத் சந்திக்கு அருகில் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நேற்று உக்கிர மோதல் வெடித்துள்ளது. இதில் குறைந்தது இரண்டு இஸ்ரேலியப் படைகள் கொல்லப்பட்டு மேலும் எட்டுப் பேர் காயமடைந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா பகுதி பெரும் அழிவை சந்தித்திருக்கும் நிலையில், அங்கு வீதிகளில் 37 மில்லியன் தொன்; குப்பைகள் நிரம்பி இருப்பதாகவும் அதனை அகற்றுவதற்கு ஒரு தசாப்தத்திற்கு மேற்பட்ட காலம் தேவைப்படும் என்றும் ஐ.நா. சுரங்க செயற்பாட்டு சேவை கணித்துள்ளது.

இந்தக் குப்பைகளில் 10,000 வரையான வெடிக்காத வெடிபொருட்களும் உட்படுவதாக மனிதநேயம் மற்றும் உள்ளடக்கத்தின் மத்திய கிழக்கு பணிப்பாளர் பெடெரிகோ டெஸ்ஸி குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் காசாவில் 50,000 மற்றும் 100,000க்கு இடையிலான குண்டுகள் வீசப்பட்டிருப்பதாக தன்னார்வ தொண்டு அமைப்புகள் அனுமானிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் கடந்த ஏழு மாதங்களாக இடம்பெறும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34,500ஐ தொட்டுள்ளது.

பேச்சில் சாதகமான சூழல்

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் அதே தீவிரத்தில் நீடிக்கும் நிலையில் காசாவின் ஹமாஸ் பிரதித் தலைவர் கலீல் அல் ஹய்யா தலைமையில் பிரதிநிதிகள் குழு ஒன்று கெய்ரோ சென்றுள்ளது. இந்தக் குழு கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்கள் கையளித்த போர் நிறுத்த முன்மொழிவு ஒன்று மற்றும் இஸ்ரேலின் பதில் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துகிறது. உடன்பாடு ஒன்றை எட்டும் முயற்சியை அமெரிக்காவின் ஆதரவு பெற்ற மத்தியஸ்தர்களும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த புதிய போர் நிறுத்த முன்மொழிவில் உள்ளடங்கும் விடயங்கள் வெளியிடப்படாதபோதும், இஸ்ரேலிடம் இருந்து சனிக்கிழமை கிடைத்த புதிய முன்மொழிவு தொடர்பில் ஹமாஸ், கெய்ரோ ​ேபச்சுவார்த்தையில் பதிலளிக்கவிருப்பதாக ஹமாஸ் அதிகாரிகள் இருவரை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் பலஸ்தீனர்களை விடுவிப்பதற்கு பகரமாக 40க்கும் குறைவான பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் இரண்டாவது கட்டமாக ‘நீடித்த அமைதிக் காலம்’ ஒன்றை எட்டவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கான ஹமாஸின் நிபந்தனைக்கு இஸ்ரேல் சமரசமான பதிலை அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதல் கட்டத்தின் பின், காசா மக்கள் வடக்கு மற்றும் கிழக்கு காசாவுக்கு சுதந்திரமாக நடமாட இஸ்ரேல் அனுமதிப்பதோடு காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் பகுதி அளவு வெளியேறவுள்ளது என்றும் போர் நிறுத்த முன்மொழிவில் உள்ளடங்கிய விடயங்கள் பற்றி தெரிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.

இஸ்ரேல் மற்றும் எகிப்திடம் இருந்து கிடைத்துள்ள புதிய முன்மொழிவு தொடர்பில் தமது அமைப்புக்கு ‘பாரிய பிரச்சினைகள் இல்லை’ என்று ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

‘இஸ்ரேலின் புதிய இடையூறுகள் இல்லாத வரையில் நிலைமை சாதகமாக உள்ளது. முன்மொழிவின் உள்ளடக்கம் தொடர்பில் ஹமாஸ் சமர்பித்த அவதானிப்புகள் மற்றும் விசாரணைகளில் பாரிய பிரச்சினைகள் இல்லை’ என்று பெயர் குறிப்பிடாத அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதில் பூகோள அடிப்படையில் எகிப்து எல்லையான ரபாவில் போர் நெருங்கி இருக்கும் நிலையில் எகிப்தும் உடன்படிக்கை ஒன்றுக்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ரபா மீதான தாக்குதல் பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கும் எகிப்து அங்குள்ள பலஸ்தீனர்களை எல்லை கடந்து தமது நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

நெதன்யாகு அச்சம்

இதேவேளை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் மற்றும் காசாவில் மனிதபிமான உதவிகளை அதிகரிக்கும் புதிய முயற்சியாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்க நேற்று பிராந்தியத்திற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார். சவூதி அரேபியா சென்றடைந்த அவர் ஜோர்தான் மற்றும் இஸ்ரேலுக்கும் பயணிக்கவுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசா போர் வெடித்தது தொடக்கம் பிளிங்கன் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் ஏழாவது முறையாக இது உள்ளது.

இதில் சவூதி மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் இராஜதந்திர உறவை ஏற்படுத்த சவூதி தலைமையுடன் புதிய பேச்சுவார்த்தைகளில் பிளிங்கன் ஈடுபடுவார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தமக்கு எதிராக சர்வதேச பிடியாணை ஒன்று பிறப்பிக்கப்படும் சாத்தியம் தொடர்பில் கவலை அடைந்திருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா தாக்குதல்கள் தொடர்பில் ஹேகில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. இந்த நீதிமன்றம் நெதன்யாகு, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யொவால் கல்லன்ட் மற்றும் இஸ்ரேல் இராணுவத் தளபதி ஹெர்வி ஹலெவிக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக பரவலாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT