கொவிட் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படும்; சுற்றுநிருபம் வெளியீடு

கொவிட் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படும்; சுற்றுநிருபம் வெளியீடு-Post Mortem Diagnosis Disposal-Reporting of COVID19 Related Deaths

- எந்தவொரு மையவாடிகள்/ மயானங்களிலும் அடக்கலாம்
- மார்ச் 05 முதல் நடைமுறையில்
- திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியீடு

கொவிட் தொற்றினால் மரணிப்போரின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 05 முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் இது தொடர்பான திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனைகளாவன,

  • கொவிட் தொற்றினால் மரணிப்போரின் உடல்கள் சுகாதார ஊழியர்களால் சீலிடப்பட்டு, சவப் பெட்டியில் வைக்கப்படும். (உறவினர்களால் சவப்பெட்டி வழங்கப்பட வேண்டும்)
  • உடல் விடுவிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் அடக்கம்/ தகனம் செய்யப்பட வேண்டும்.
  • இவ்வாறு விடுவிக்கப்படும் உடலை அடக்கம்/ தகனம் செய்யப்படும் இடத்தை தவிர வேறு எந்தவொரு இடத்திற்கும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது.
  • உடல் பதனிடப்படக் (embalmed) கூடாது.
  • உடல் அடக்கம்/ தகனம் செய்யப்படும் இடம் உறவினர்களின் விருப்பத்திற்கு அமைய மேற்கொள்ளலாம். (நீதிமன்ற உத்தரவுகள் இல்லாத நிலையில் மாத்திரம்)
  • உடலின் அடக்கம்/ தகனம் ஆனது, உறவினர்களின் செலவில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் பிற்பாடு சுகாதார அமைச்சு அல்லது வேறு எந்தவொரு அமைச்சுகள், திணைக்களங்களோ பொறுப்பேற்காது.

என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...