கொவிட் சடலங்கள் கிண்ணியாவிலும் இன்று முதல் அடக்கம்

கொரோனாவில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு கிண்ணியா வட்டமடு கிராம 'கொவிட் 19 விஷேட மையவாடி'யில் இன்று 06 ஆம் திகதி சடலங்கள் நல்லடக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இக் காணியில் சுமார் 4,000 சடலங்களை அடக்கம் செய்வதற்கான வசதியுள்ளதாகவும் கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் கே.எம்.நிஹார் தெரிவித்துள்ளார். இதற்காக 10 ஏக்கர் அரச காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இக்காணியை கொவிட் 19 தொழில்நுட்பக் குழு ஆய்வுகளை மேற்கொண்டு சிபாரிசு செய்ததையடுத்தே கொவிட் 19 செயலணியினாலும் சுகாதார அமைச்சினாலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவர் தொடர்ந்தும் கூறியதாவது,..

தற்போது இக் காணியில் உட்கட்டமைப்பு வசதிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணிக்குள் 14 பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.

காணியை சூழ சுமார் 10 கிலோ மீற்றர் மதில் கட்டப்படவுள்ளது. மின்சார வசதிகள் மற்றும் சடலங்களின் உறவினர்களுக்கான வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை புத்தளம் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் கொவிட் 19 சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கு காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொவிட் 19 செயலணியின் தொழில்நுட்ப குழு இது தொடர்பில் ஆய்வுகளை நடத்தி வருவதாகவும் சுகாதார அமைச்சின் கொவிட் 19 ஒருங்கிணைப்பாளரும் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளருமான டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.


கிண்ணியா வட்டமடு உடல்கள் நல்லடக்கம் விவகாரம்; தடையாக இருந்த காரணங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன

- வசீர் முக்தார் தெரிவிப்பு

கொரோனாவினால் உயிரிழந்த உடல்களை நல்லடக்கம் செய்வதற்காக வட்டமடு பிரதேசத்தில்; நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அதற்கு தடையாக இருந்த காரணங்களைக் கண்டறிந்து தற்போது சீர் செய்யப்பட்டு வருதாக அமைச்சர் மஹிந்தானவின் இணைப்புச் செயலாளரும் யட்டிநுவர பிரதேச சபை உறுப்பினருமான வசீர் முக்தார் தெரிவித்தார்.

கொரோனாவினால் உயிரிழந்த உடல்களை கிண்ணியா வட்டமடு பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யப்படும் விவகாரம் தொடர்பில் கண்டியில் இருந்து விஜயம் செய்த குழுவினர் மாவட்ட செயலாளர், பிரதேச சபைத் தலைவர், பிரதேச செயலாளர், இப்பிராந்திய உயர் இராணுவ அதிகாரி உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடியதை அடுத்து அன்று ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படவுள்ள இடத்தையும் நேரில் பார்வையிட்டனர். அதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நல்லடக்கம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக சுகாதார அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொள்வதில் தாமதம் கண்டறியப்பட்டு உடனுடக்குடன் அமைச்சர் அலி சப்ரியுடன் தொடர்பினை ஏற்படுத்தி இது பற்றி அவருடைய கவனத்தில் கொண்டு செல்லப்பட்டு சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் மற்றும் இந்த செயற் திட்டத்திற்கு பொறுப்பாக இயங்கும் இராணுவ அதிகாரி கேர்ணல் ரவீந்திர ஜயசிங்க, மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர், ஆகியோருக்கு இடையிலான ஓர் ஒருங்கிணைப்பினை உடனடியாக ஏற்படுத்தி இதில் காணப்பட்ட சில தடைகளை நிவர்த்தி செய்து நல்லடக்கம் செய்வதற்கான நடவடிக்கைளை துரிதமாக மேற்கொள்ள இந்த சந்தர்ப்பம் வழிவகுத்துள்ளது.

அதேவேளையில் கிண்ணியா பிரதேச சபை தவிசாளரின் வேண்டுகோளுக்கு இணங்க மையவாடி நிலம், அதற்கு செல்லும் பாதை மற்றும் ஏனைய அபிவிருத்திகளுக்காக 45 இலட்சம் ரூபா நிதி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேற்கொள்ள நிதி உதவி அவசியம் என்று இங்கு விஜயம் செய்த குழுவினரிடம் தவிசாளர் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிதியினை தற்போது திரட்டும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இதற்கான கணிசமானளவு நிதி தற்போது சேகரிக்கப்பட்டு விட்டது. அதனை விரைவில் ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் போது அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி, அகில இலங்கை ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் முக்கியஸ்தர் அப்துல் Zam Zam அமைப்பின் பணிப்பாளர்களுள் ஒருவரான கியாஸ் ரவ்ப், கண்டி தேசிய வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர் முஹம்மத் ரிஸ்வி, பாருக் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் பஸ்லான் பாருக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

(மாவத்தகம தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...