கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தற்போது நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டல் உள்ளடங்கிய சுற்று நிருபத்தின் செல்லுபடி காலத்தை எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் நேற்று தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத், நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற் கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
நாட்டில் இதுவரை டிசம்பர் மாத நடுப்பகுதியில் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல்கள் உள்ளடங்கிய சுற்றுநிருபம் நடைமுறையில் இருந்ததுடன் நேற்றுடன் அது நிறைவுபெறும் நிலையில் பெப்ரவரி மாதம் இறுதி வரை அதை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய மட்டுப்படுத்தலுக்கு இணங்க சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மக்கள் அவதானமாக செயற்படுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை எதிர்வரும் வார இறுதி நீண்ட விடுமுறையின்போது மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மிகவும் அவதானமாக செயற்படுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். முடிந்தவரை பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு தெரிவித்துள்ள அவர் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment