இதுவரை 633 ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு உதவியுள்ள காத்தான்குடி ஜனாசா நலன்புரி அமைப்பு

காத்தான்குடி ஜனாசா நலன்புரி அமைப்பு காத்தான்குடியிலும் காத்தான்குடியை அன்மித்துள்ள பிரதேசங்களிலும் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு பல்வேறு வகையிலும் உதவி வரும் ஒரு அமைப்பாகும். 63உறுப்பினர்களையும் 31நிருவாக உறுப்பினர்களையும் கொண்ட ஒரு சமூக சேவை நிறுவனமாக காத்தான்குடி ஜனாசா றலன்புரி அமைப்பு செயற்பட்டு வருகின்றது.

மரணித்தவர்களுகளை அடக்கம் செய்ய குழி (கப்ர்) தோண்டிக் கொடுப்பது, மரணித்தவர்களுக்கான வெள்ளை ஆடை (கபன்) வழங்குவது அடக்கம் செய்யும் பெட்டி (மஞ்சு) வழங்குவது, தூர இடங்களில் இருக்கும் காத்தான்குடியைச் சேர்ந்த மரணித்தவர்களின் ஜனாசாக்களை காத்தான்குடிக்கும் காத்தான்குடியை அன்மித்துள்ள பிரதேசங்களுக்கும் கொண்டு போய் கொடுப்பது, அதே போன்று காத்தான்குடியில் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை வெளி மாவட்டத்துக்கு இவர்களின் வாகனத்தில் கொண்டு போய் கொடுக்கும் சேவைகளை பிரதான சேவைகளாக இந்த நிறுவனம் செய்து வருகின்றது. இவைகள் அனைத்தையுமே இலவசமாக செய்து வருகின்றது.

காத்தான்குடியிலும் அதனை அன்மித்த பிரதேசங்களிலும் மரணிக்கின்ற மரண வீடுகளுக்கு தேவையேற்படின் கதிரைகள், பாய்கள், ஃபோகஸ் வெளிச்ச மின்குமிழ்களை வழங்குவதுடன் ஆண் ஜனாசாக்களை குளிப்பாட்டி கபன் செய்து கொடுக்கின்ற சேவைகளையும் இந்த நிறுவனம் செய்து வருகின்றது.

இதேபோன்று ஆண்டுதோறும் பாடசாலையில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் புத்தக பைகளையும் வழங்கி வருகின்றனர். இதனை 300மாணவர்களுக்கு வழங்கி வருவதும் இவர்களின் சிறப்பான வேலைத்திட்டமாகும்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை சிரமதானம் செய்து கொடுத்ததுடன் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சமைத்த உணவுகளையும் உலர் உணவுப் பொருட்களையும் இவர்கள் வழங்கி தமது வேலைத்திட்டத்தினை விரிவுபடுத்தியுள்ளனர்.

 இந்த அமைப்புக்கு மரணித்தவர்களின் உடல்களை ஏற்றுவதற்கான வாகனம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கான முயற்களை மேற்கொண்டு காத்தான்குடியிலுள்ள தனவந்தர்களின் உதவியுடன் 19இலட்சம் ரூபா பெறுமதியான வாகனம் ஒன்றை வாங்கியுள்ளதுடன் இந்த நிறுவனத்தின் மிக நீண்ட நாள் தேவையாக இருந்த இந்த வாகனத் தேவை இதன் மூலம் நிறைவேறியுள்ளது.

இதுவரை இந்த நிறுவனத்தினர் 633ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு உதவியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். கொரோனா வைரசினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களையும் வைத்தியசாலையிலிருந்து ஓட்டமாவடி மஜ்மா நகருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்வதற்காகவும் இவர்கள் உதவி செய்துள்ளனர்.

இந்த அமைப்பின் தலைவராக யு.எல்.ரபீக், செயலாளராக ஏ.எம்.நாசர், பொருளாளராக ஏ.எம்.ஹாறூன் ஆகியோருடன் 31பேர் கொண்ட நிருவாக சபை செயற்பட்டு வருகின்றது. இதற்கான ஒரு ஆலோசனைக் குழுவும் உள்ளது. அதில் ​ெடாக்டர் யு.எல்.நசிர்தீன, சட்டத்தரணி ஏ.உவைஸ், அஷ்ஷெய்க் எம்.சி.ரிஸ்வான் மதனீ, நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.ஜரூப், வர்த்தக பிரமுகர் ஏ.ஜே.அஜ்வத் ஆகியோர் அடங்குகின்றனர்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)