கொரோனா சடலங்களை எரிக்க இனி கட்டணம் அறவிடக்கூடாது

அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்

கொரோனா ​தொற்று காரணமாக இறந்தவர்களின் சடலங்களை தகனம் அல்லது அடக்கம் செய்ய எவ்வித கட்டணங்களையும் அறவிடக்கூடாது என அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

நாட்டின் நாலா திசைகளில் இருக்கும் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்களோடு இணைய வழி ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் உள்ளூராட்சி தவிசாளர்களிடம் மேற்கண்டவாறு பணிப்புரை விடுத்தார்.

கொரோனா வைரஸினால் மரணப்பவர்களின் சடலங்கள் நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளின் பிரேத சாலைகளில் தேங்கி கிடப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இங்கு கருத்து தெரிவித்த உள்ளூராட்சி மன்ற தவிசாளர்களின் பலர் கொரோனா தொற்று காரணமாக மரணிப்போரின் சடலங்களை பொறுப்பேற்கவோ அல்லது அடையாளம் காட்டிடவோ மரணித்தவரின் உறவுகள் முன் வராமையின் காரணமாக மரணித்தவர்களின் சடலங்கள் தேங்கி கிடக்கின்றது. இதனால் வைத்தியசாலை முகாமைத்துவம் பல இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றது. எனவே அரசு இதற்கு ஒரு மாற்று வழியை கையாள வேண்டுமென உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனை தெளிவுப்படுத்தியதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸினால் மரணிப்போரின் சடலங்களை தகனம் அல்லது அடக்கம் செய்திட அறவிடப்படும் கட்டணங்களை நிறுத்திக்கொள்ளும்படியும் இதற்கான நிதியை தான் மத்திய அரசிடமிருந்து பெற்றுத்தர நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

பிரேதங்களை தகனம் செய்திட அதிகளவு எரிவாயு தேவைப்படுகின்றது. எனவே தற்போது நாட்டில் நிலவுகின்ற எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பிரேதங்களை தகனம் செய்வதில் சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக தவிசாளர்கள் அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து தகனம் செய்திட தேவையான எரிவாயுகளை மத்திய அரசு மூலமாக இலவசமாக பெற்றுத்தர நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார். தற்போது நிலவுகின்ற ஊழியர்களின் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்திட அண்மையில் அரசினால் தொழில் வாய்ப்புகளுக்காக இணைத்துக் கொண்ட கல்வி தகைமைகள் குறைத்தவர்களை இப்பணியில் இணைத்துக்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் து.து ரத்தின சிறி, உள்ளுராட்சி மாகாண சபைகள், இராஜாங்க அமைச்சின் செயலாளர் பந்துல போரலஸ்ஸ அமைச்சரின் ஆலோசகர் மஹிந்த மடிங்க ஹேவா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

உக்குவளை விசேட நிருபர்

 

Add new comment

Or log in with...