Tuesday, April 30, 2024
Home » பொருளாதார ரீதியிலான முன்னேற்றம் உலக வங்கி, IMF அரசாங்கத்துக்கு பாராட்டு

பொருளாதார ரீதியிலான முன்னேற்றம் உலக வங்கி, IMF அரசாங்கத்துக்கு பாராட்டு

வாஷிங்டன் மாநாட்டில் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு

by mahesh
April 17, 2024 6:20 am 0 comment

சவாலான காலகட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டைப் பொருளாதார ரீதியில் முன்னேற்றியுள்ளமைக்கு, உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் அரசாங்கத்தைப் பாராட்டியுள்ளன.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெறும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மாநாட்டில் இலங்கையின் சார்பில் கலந்து கொண்டுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க உள்ளிட்ட குழுவினருடனான பேச்சு வார்த்தையின் போதே, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முக்கியஸ்தர்கள் இவ்வாறு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் மேற்படி மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றுள்ள குழுவினர் அங்கு பல்வேறு உயர்மட்ட பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா மற்றும் நிதி ராஜாங்க அமைச்சர் தலைமையிலான இலங்கை தூதுக்குழு உறுப்பினர்களுக்குமிடையிலான பேச்சு வார்த்தை, மேற்படி மாநாட்டின் சமகாலத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் போது இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத் திட்டத்தின் முன்னேற்றம், பலமான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் இலங்கை அரசாங்கத்தை அவர்கள் பாராட்டியுள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத் திட்டத்தை ஆரம்பித்தது முதல் இலங்கை பெற்றுக் கொண்டுள்ள வெற்றியைப் பாதுகாத்து பலமான வகையில் அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியத்தில் முகாமைத்துவப் பணிப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.

அந்த வகையில் சமகாலத்தில் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட வேலைத் திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதார கொள்கை மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாகவும் நிலையானதாகவும் முன்னெடுப்பதை உறுதி செய்ய இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட அர்ப்பணிப்பு தொடர்பிலும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை, அதன் முன்னேற்றம் மற்றும் முதலீடுகள் தொடர்பான சர்வதேச வர்த்தக கவுன்சிலின் (BCIU) பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதலீடுகள் தொடர்பில் இலங்கையில் காணப்படும் வாய்ப்புகள் மற்றும் கல்வி, சுற்றுலாத்துறை புதுப்பிக்கத்தக்க மின்சக்தி, விவசாயம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகள் செய்வது தொடர்பிலும் அதன் மூலம் நிலையான பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்ட தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் இந்தியா மற்றும் இலங்கைக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.

கடன் மறு சீரமைப்பு தொடர்பான முன்னேற்றம் மற்றும் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற பணியாளர் மட்ட உடன்படிக்கையின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத் திட்டத்தின் இரண்டாவது மீளாய்வை நிறைவு செய்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் இதன் போது பேச்சு நடத்தப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிதி இராஜங்க அமைச்சர் மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயர் ஆகியோருக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. கஷ்டமான மறுசீரமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு பரமேஸ்வரன் ஐயர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT