Wednesday, May 8, 2024
Home » 2023ஆம் ஆண்டில் 40.3 பில்லியன் ரூபா லாபம் ஈட்டியுள்ளது இலங்கை வங்கி!

2023ஆம் ஆண்டில் 40.3 பில்லியன் ரூபா லாபம் ஈட்டியுள்ளது இலங்கை வங்கி!

வரிக்கு முந்தைய லாபம் 40.3 பில்லியன் ரூபா

by mahesh
March 27, 2024 6:00 am 0 comment

உலகமும் இலங்கையும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையிலும் இலங்கை வங்கியானது 2023 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான வரிக்கு முந்தைய இலாபமாக 40.3 பில்லியன் ரூபாயை ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது திரவத்தன்மை, மூலதனம், செயற்திறன், இலாபம் மற்றும் சொத்துத் தரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இலங்கை வங்கி வெளிப்படுத்தியுள்ள வலுவானதும் நிலையானதுமான செயற்திறனைக் காட்டி நிற்கிறது.

தொழிற்துறைப் போட்டியும் சவாலும் மிகுந்த சூழலிலும் இலங்கை வங்கியால் இத்தகையவொரு சாதனையை நிகழ்த்த முடிந்ததெனின் அதற்கு அதன் தொழில் நிபுணத்துவமும் அனுபவமும் வாய்ந்த ஆளணியே காரணம் எனலாம். இந்த ஆளணியே நலிவடைந்து சென்ற வணிகத் துறைகளை வியாபாரப் புத்துயிர்ப்பு மற்றும் மறுசீரமைப்பு உத்திகள் மூலம் இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றியது.

கடந்த சில வருடங்களில் ஏற்பட்ட அனைத்துச் சவால்களையும் வங்கி வெற்றிகரமாகச் சமாளித்துள்ளதுடன், மூலோபாய ரீதியாக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் வங்கியின் வியாபாரத் தொடர்ச்சி பேணப்பட்டதோடு எங்களின் பெறுமதியான பங்குதாரர்களுக்கு தடையற்ற சேவைகளையும் ஆற்ற முடிந்தது. வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறையை நிர்வகிப்பது ஒரு சவாலான பணியாகும்.

எரிசக்தி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வெளிநாட்டு நாணயத் தேவைகளை எளிதாக்க வங்கி தனது அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. இருப்பினும், வங்கியின் நீண்டகால மூலோபாய முன்னுரிமைகளில் சமரசம் செய்யாமல், நிதி நிலையை வலுப்படுத்துவதை மையமாகக் கொண்டு குறுகிய கால உத்திகள் கவனமாக நிர்வகிக்கப்பட்டன.

வங்கியானது 40.3 பில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை எட்டியிருந்தது. இதில் வட்டி வருமானத்தில் நிகழ்ந்த 15 சதவீதம் அதிகரிப்பு முக்கிய செல்வாக்குச் செலுத்துகிறது. இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வு மற்றும் குறைந்த வட்டி விகிதம் போன்ற சவால்கள் காணப்பட்ட போதிலும், வங்கியின் வைப்புத் தளம் 16 சதவீதத்தால் அதிகரித்து 3.9 டிரில்லியன் ரூபாயை எட்டியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT