Monday, May 20, 2024
Home » ஜேவிபியின் கூற்று நீதிமன்றத்தை அவமதிப்பதாக எம்பிக்கள் ஆவேசம்

ஜேவிபியின் கூற்று நீதிமன்றத்தை அவமதிப்பதாக எம்பிக்கள் ஆவேசம்

உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; சபையில் நீதி அமைச்சரிடம் வலியுறுத்து

by mahesh
May 8, 2024 9:50 am 0 comment

ஜேவிபியினர் மக்கள் மத்தியில் வெளியிடும் கருத்துக்கள் நீதிமன்றத்தை அவமதிப்பதாக உள்ளதாகவும், இது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபையில் நேற்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை கேட்டுக் கொண்டனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாடுகளை நாட்டு மக்கள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர், எதிர்காலத்தில் அமையும் ஜேவிபி அரசாங்கத்தில் நீதிமன்றத்தின் அதிகாரத்தை செயற்படுத்துவதை தமது உறுப்பினர்களுக்கு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார் என்பதையும் அவர்கள் சபையில் சுட்டிக்காட்டினர்.

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது.1971,1988,1989,2022ஆகிய காலப்பகுதிகளில் மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்ட விதம் நினைவுக்கு வருகிறது என்றும் காட்டு மிராண்டித்தனமாக அரசாங்கத்தின் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கும் இவர்களுக்கு, அதிகாரத்தை வழங்குவதா என்பதனை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பொலிஸ் மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரத்தை தமது உறுப்பினர்களுக்கு வழங்குவதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் லால்காந்த குறிப்பிடுவதை அந்தக் கட்சியின் எம்.பி.ஹரிணி அமரசூரிய ஏற்றுக்கொள்வாரா? என அவர் சபையில் கேள்வி எழுப்பினார்.

இதன்போது இதற்கு பதிலளித்த ஜே .வி.பி யின் ஹரிணி அமரசூரிய எம்.பி, நீதிமன்றத்தின் அதிகாரத்தை செயற்படுத்துவதை, மக்கள் விடுதலை முன்னணிக்கும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் வழங்குவதாக ஒரு போதும் எமது கட்சியின் உறுப்பினர் குறிப்பிடவில்லை என்று தெளிவு படுத்தினார்.

இதன்போது அவ்வாறு ”லால்காந்த குறிப்பிட்டார், லால் காந்த குறிப்பிட்டார்” என, பல தடவைகள் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். தொடர்ந்தும் சபையில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க;

ஹரிணி அமரசூரிய போன்ற படித்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், மக்கள் விடுதலை முன்னணி போன்ற காட்டுமிராண்டித்தனமான கட்சியின் மேடையில் தனது கொள்கையை மாற்றிக்கொண்டது கவலைக்குரியது. அவர் தவறான பக்கம் சென்று விட்டார் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, 1988,1989 காலப்பகுதிகளில் 27 நீதிமன்றக்கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. நுகேகொட,கல்கிசை ஹோமாகம,ஆகிய நீதிமன்றங்களின் மீது, மிக மோசமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ஹோமாகம நீதிமன்றத்தின் நீதிபதியின் கறுப்பு மேலங்கி பலவந்தமாக கழற்றப்பட்டு மாட்டுக்கு அணிவிக்கப்பட்டு, அம்மாடு வீதியில் விரட்டப்பட்டது.மக்கள் மத்தியில் இன்றும் அந்த அச்சம் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது நீதிமன்றம் மற்றும் பொலிஸ் அதிகாரத்தை சாதாரண மக்களுக்கு வழங்குவதனை ஹரிணி அமரசூரிய எம்.பி. ஏற்றுக்கொள்வாரா என அரச மற்றும் எதிரணி எம்.பி.க்கள் கேள்வியெழுப்பினர்.

இதன்போது மீண்டும் எழுந்த ஹரிணி அமரசூரிய எம்.பி. ,நீதிமன்றத்தின் அதிகாரத்தை கட்சியின் உறுப்பினர்களுக்கு வழங்குவதனை நான், ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.

தொடர்ந்தும் சபையில் உரையாற்றிய செஹான் சேமசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் குறிப்பிட்ட குரல் பதிவு என்னிடம் உள்ளது. அதனை ஒலிபரப்ப அனுமதி வழங்குங்கள் என சபைக்கு தலைமைதாங்கிய உறுப்பினரிடம் கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பதிலளித்த சபைக்கு தலைமைதாங்கிய கிங்க்ஸ் நெல்சன் எம்.பி. அனைவரிடமும் குரல் பதிவு உள்ளது. அனைவரும் ஒலிபரப்பு செய்தால் அது பிரச்சினையாகும். அத்துடன் வெளி நபர்களின் குரல்களை சபையில் ஒலிபரப்ப முடியாது என்றார்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான ஹர்ஷண ராஜகருணா, மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் லால்காந்த குறிப்பிட்டதாக கூறும் குரல் பதிவை, சபையில் ஒலிபரப்பு செய்து சட்டத்தை தனிநபர் ஒருவர் செயற்படுத்தும்போது அதன் விளைவு பாரதூரமாக அமையும். ஆகவே இவரின் கருத்து எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால் இதனை அலட்சியப்படுத்த முடியாது .எனவே இது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென நீதி அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

இதன்போது நீதிமன்றத்தின் அதிகாரத்தை கட்சியின் உறுப்பினர்களுக்கு வழங்குவதாக குறிப்பிடுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமையும். ஆகவே இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நீதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT