Monday, May 20, 2024
Home » ஆணைக்குழுக்கள் குறித்து நம்பிக்கை ஏற்பட வேண்டும்

ஆணைக்குழுக்கள் குறித்து நம்பிக்கை ஏற்பட வேண்டும்

சபையில் சுமந்திரன் எம்.பி சுட்டிக்காட்டு

by mahesh
May 8, 2024 9:40 am 0 comment

அரசாங்கம் நியமித்துள்ள ஆணைக்குழுக்க ளின் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத் தாது, இன்னுமொரு நல்லிணக்கத்துக்கான செயலணியை உருவாக்க மேற்கொள்ளும் முயற்சிகள், தமிழ் மக்கள் மத்தியில் எத்தகைய நம்பிக்கையையும் ஏற்படுத்தாதென தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி எம். ஏ. சுமந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

செப்டம்பரில் நடைபெறவுள்ள ஜெனிவா அமர்வை இலக்காகக் கொண்டு நல்லிணக்க செயலணியை உருவாக்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், வெறும் கண்துடைப்பே என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

யுத்த அத்துமீறல் குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளக பொறிமுறை மூலமாக சரியான நீதி கிடைக்காது என்பதற்கு யுத்தம் முடிவடைந்த இந்த 15 வருட காலத்தில் எதுவுமே இடம்பெறாமையே சான்றாக உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர்,

இன்னுமொரு நல்லிணக்க செயலணி உருவாக்கப்படுவதை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு நிரந்தர அரசியல் தீர்வின்றி எந்தவித நல்லிணக்கமும் ஏற்பட முடியாது. சர்வதேச நீதிமன்ற பொறிமுறை, ரோம் சட்டத்தின் மூலம் மட்டுமே நடத்தப்படும்.எனவே அரசாங்கம் ரோம் சட்டத்துக்கு இணங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பிரிவிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடல் (விசேட ஏற்பாடுகள்)திருத்தச் சட்டமூலம் (பராட்டே) ஆகியன மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இந்த மே, மாதத்துடன் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இத்தகைய சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சரின் தலைமையில் நல்லிணக்கத்துக்கான செயலணி தொடர்பாக அரசாங்கம் முன்மொழியும் சட்டமூலம் தொடர்பில் நேற்று கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

அங்கு நான் சில கருத்துக்களை முன் வைத்தேன்.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்திலும் யுத்த காலம் முழுவதும் பலவிதமான அத்துமீறல்கள் நடந்துள்ளன. உலகத்தில் நடக்கும் எந்தவொரு யுத்தமும் சுத்தமானது கிடையாது. சுத்தமான யுத்தம் என்று எதனையும் கூற முடியாது. ஆயுதப் போரில் அத்தமீறல்கள் நடந்தே தீரும்.ஆனால் அவ்வாறு நடக்கும் போது, அதனால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு பொறுப்பு உள்ளது.

அத்துமீறல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கும் விசேடமாக காணமாலாக்கப்பட்டவர்கள் விடயத்தில் என்ன நடந்தது? யார் இதற்கு பொறுப்பு? அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா? என்ற விபரங்களை உறவினர்களுக்கு தெளிவு படுத்துவதும் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

காணாமலாக்கப்படுவது பலரால் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் சாட்சியங்களின் அடிப்படையில், கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவுக்கு முன்னால் வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் யுத்தத்தின் இறுதி இரண்டு நாட்களில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அரச படையினரிடம் சரணடைந்தனர் என்று அரசாங்கம் நியமித்த ஆணைக்குழு வினாலேயே கூறப்பட்டது.

அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை வெளிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இந்த விடயத்தில் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு, உதலாகம ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு போன்றவற்றில் பல விடயங்கள் முன்வைக்கப்பட்டன

எந்த முன்மொழிவுகளும் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இறுதியாக இந்த அனைத்து ஆணைக்குழுக்களின் முன்மொழிவுகளையும் ஆராய்வதற்காக இன்னுமொரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அதன் முன்மொழிவுகளும் உள்ளன. இவை எவற்றையும் நடைமுறைப்படுத்தவில்லை. இவை அரசாங்கத்தின் ஆணைக்குழுக்களாகும். இவற்றின் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தாது. தற்போது இன்னுமொரு நல்லிணக்கத்திற்கான செயலணி தொடர்பில் பிரேரிக்கப்பட்டுள்ளது. அது எமதுமக்கள் மத்தியில் எந்தவிதமான நம்பிக்கையையும் ஏற்படுத்தாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT