Monday, May 20, 2024
Home » IPL 2024 DC vs RR: 19 பந்தில் அரைச்சதம் விளாசிய ஜேக் பிரேஷர்

IPL 2024 DC vs RR: 19 பந்தில் அரைச்சதம் விளாசிய ஜேக் பிரேஷர்

- சாதனை படைத்த யுஸ்வேந்திர சாஹல்

by Prashahini
May 8, 2024 9:37 am 0 comment

– சாம்சன் விக்கெட் குறித்து பெரிய சர்ச்சை

IPL 2024 ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ரோயல்ஸ் ,டெல்லி அணி மோதிய ஆட்டத்தில் ரன் மழை பொழிந்து வருகிறது. டெல்லி பிரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற 56வது லீக் ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

டெல்லி மைதானம் மிகவும் சிறிய அளவு என்பதால் முதலில் துடுப்பாட்டம் மேற்கொள்ளும் அணி மிகப்பெரிய ஓட்டங்களை குவித்தால் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு இருக்கும். இந்த நிலையில் தொடக்க வீரராக டெல்லி அணியில் ஜேக் பிரேஷர் களம் இறங்கினார். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் பவுல்ட் வீசிய முதல் ஓவரில் பிரேஷர் வெறும் பவுண்டரி மட்டும்தான் அடித்தார்.

முதல் ஓவரில் வெறும் 6 ஓட்டங்கள்தான் அடிக்கப்பட்டது. இதை அடுத்து இரண்டாவது ஓவரில் அபிஷேக் போரெல் 2 பவுண்டரிகளை எடுத்தார். இரண்டாவது ஓவரில் 10 ஓட்டங்கள் சேர்க்கப்பட்டது. இதை அடுத்து மூன்றாவது ஓவரில் பவுல்ட் பந்துவீச்சை எதிர்கொண்டு ஜேக் பிரேசர் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தார். இதில் ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரி, சிங்கிள்ஸ் என மூன்றாவது ஓவரில் 15 ஓட்டங்கள் சேர்த்தார். அதேபோன்று நான்காவது ஓவரை ஆவேஷ் கான் வீசினார். அதையும் பிரேசர் எதிர்கொண்டார் இதில் ஜேக் பிரேஷர் தன்னுடைய சுய ரூபத்தை காட்டினார். முதல் மூன்று பந்துகளிலும் ஹட்ரிக் பவுண்டரி அடித்த ஜேக் பிரேஷர் நான்காவது பந்தில் சிக்ஸர், ஐந்தாவது பந்தில் பவுண்டரி ஆறாவது பந்தல் சிக்சர் என தெறிக்கவிட்டார். இதன் மூலம் 19 பந்தில் பிரேஷர் அரை சதத்தை அடித்தார்.

டெல்லி அணி நான்கு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 59 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இதில் 50 ஓட்டங்கள் அடித்ததாகும். இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் மிகப்பெரிய ஓட்டங்கள் குவிக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது. ஜேக் பிரேஷர் அதிரடியாக விளையாடுவதை பார்த்த சஞ்சு சாம்சன் உடனடியாக அஸ்வினை பந்து வீச அழைத்தார். அஸ்வின் பந்தை ஜேக் பிரேஷர் எதிர்கொள்ள முதல் பந்திலேயே அவர் ஆட்டம் இழந்தார். எனினும் 20 பந்துகளில் ஜேக் பிரேஷர் 50 ஓட்டங்கள் எடுத்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 250 என்ற அளவில் இருக்கிறது. இப்படி அதிரடியாக விளையாடும் ஜேக் பிரேஷருக்கு அவுஸ்திரேலிய அணியில் T20 உலக கோப்பையில் இடம் கிடைக்கவில்லை. இதனால் இவருடைய அதிரடி ஆட்டத்தை பார்த்து ஏதேனும் வீரருக்கு காயம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி பிரேஷரை அணியில் சேர்ப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக இரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சாம்சன் விக்கெட் குறித்து பெரிய சர்ச்சை

போட்டியில் சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து பெரிய சர்ச்சை வெடித்தது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்கள் எடுத்தது. 222 என்ற கடின இலக்கை நோக்கி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஆடியது. அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டம் ஆடி 45 பந்துகளில் 86 ஓட்டங்கள்சேர்த்து இருந்தார்.

அப்போது 16வது ஓவரின் நான்காவது பந்தை சஞ்சு சாம்சன் சிக்ஸ் அடிக்க முயன்றார். அந்த பந்து பவுண்டரி எல்லையில் நின்றிருந்த ஷாய் ஹோப் கைகளுக்கு சென்றது. பந்தை பிடித்த ஷாய் ஹோப் நிலை தடுமாறினார். பவுண்டரி எல்லையை தன் கால்கள் தொடாதவாறு ஒவ்வொரு அடியாக நகர்ந்தார். அப்போது அவரது ஷூவின் முனை பவுண்டரி எல்லையை லேசாக உரசியது. எனினும் அவர் சமாளித்து கேட்ச் பிடித்ததாகவே நினைத்தார். அதை சரி பார்க்க களத்தில் இருந்து நடுவர் மூன்றாவது நடுவரிடம் ரிவ்யூ பார்க்குமாறு கேட்டுக் கொண்டார். மூன்றாவது நடுவர் ரீப்ளே செய்து பார்க்கும் போது ஷாய் ஹோப்பின் ஷூ பவுண்டரிக் கோட்டில் லேசாக உரசியது தெரிந்தது. அந்த ரீப்ளே காட்சியை தெளிவாக பார்க்காமல், ஒரே ஒருமுறை மட்டும் பார்த்த மூன்றாவது நடுவர் உடனடியாக அவுட் என அறிவித்தார்.

ஆனால் அந்தக் காட்சியை நேரலையில் பார்த்த அனைத்து இரசிகர்களும் அது அவுட் இல்லை, அது சிக்ஸ் என கூறினர். எனினும் நடுவர் அவுட் கொடுத்து விட்டார். அதை பார்த்து அதிர்ந்து போன சஞ்சு சாம்சன், “இது அவுட்டே இல்லை” என களத்தில் இருந்த நடுவர்களிடம் முறையிட்டார். இதை மீண்டும் ரிவ்யூ செய்ய முடியுமா எனவும் கேட்டார். ஆனால் அதற்கான கால அவகாசம் முடிந்து விட்டதால் அவருக்கு அந்த வாய்ப்பும் மறுக்கப்பட்டது. இதை எடுத்து பெரும் ஏமாற்றத்துடன் 86 ஓட்டங்கள் எடுத்து நிலையில் சஞ்சு சாம்சன் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். இது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தோல்விக்கும் காரணமாக அமைந்தது. இந்த சம்பவத்தால் IPL தொடரில் நடுவர்கள் சரியாக செயல்படவில்லை என இரசிகர்கள் கடும் விமர்சனம் செய்தனர்.

சாதனை படைத்த யுஸ்வேந்திர சாஹல்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக T20 போட்டிகளில் 350 விக்கெட்களை வீழ்த்தி சரித்திரம் படைத்திருக்கிறார் யுஸ்வேந்திர சாஹல். சுழற் பந்துவீச்சாளரான சாஹல் IPL தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக வலம் வருகிறார்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் ஆடி வரும் அவர் IPL தொடரில் 200 விக்கெட்கள் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை சமீபத்தில் செய்து இருந்தார். தற்போது ஒட்டுமொத்த T20 கிரிக்கெட் போட்டிகளில் 350 விக்கெட்டுகள் என்ற மைல் கல் சாதனையை செய்து இருக்கிறார். இந்திய அளவில் 350 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை தொட்ட முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் செய்து இருக்கிறார் சாஹல். அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராஜஸ்தான் ரோயல்ஸ் போட்டிக்கு முன் 349 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் 350 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டலாம் என்ற நிலையில் இருந்தார்.

இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விக்கெட்டை வீழ்த்தினார். அதன் மூலம் அவர் 350 T20 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அளவில் மிகப்பெரும் சாதனை படைத்திருக்கிறார். இந்திய அளவில் T20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா அவர் 310 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். உலகளவில் 350 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் பதினோராவது இடத்தில் இருக்கிறார் சாஹல்.

அவர் வீழ்த்திய 350 விக்கெட்களில் 96 விக்கெட்கள் இந்திய அணிக்காக சர்வதேச T20 போட்டிகளில் வீழ்த்தியவை. 21 விக்கெட்டுகள் IPL தொடரில் கிடைத்தவை. உள்ளூர் போட்டிகள், IPL மற்றும் சர்வதேச T20 போட்டிகள் என ஒட்டுமொத்தமாக 301 போட்டிகளில் விளையாடி 350 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறார் சாஹல். ஓராண்டாக இந்திய அணியில் வாய்ப்பின்றி இருந்த சாஹல் தற்போது இந்திய T20 அணியில் இடம் பிடித்து இருக்கிறார். 2024 T20 உலகக்கோப்பை தொடரில் அவர் பங்கேற்க இருக்கிறார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT