Sunday, May 19, 2024
Home » உரிய அதிகாரிகளை கோப் மற்றும் நிதிக் குழுவுக்கு அழைக்க தீர்மானம்
மத்திய வங்கியின் செயற்பாடுகள்

உரிய அதிகாரிகளை கோப் மற்றும் நிதிக் குழுவுக்கு அழைக்க தீர்மானம்

சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த

by mahesh
May 8, 2024 8:15 am 0 comment

மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்றத்தின் நிதிக் குழு மற்றும் கோப் குழுக்களுக்கு உரிய அதிகாரிகளை அழைத்து விசாரணைகளை நடத்த முடியும் என, சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சபாநாயகர் இதற்கான பணிப்புரையை வழங்கினால், அதனை மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று பேராசிரியர் சரித்த ஹேரத் எம்பி கூற்றை முன்வைத்து உரையாற் றினார்.இங்கு பேசிய அவர்: மத்திய வங்கிக்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்த நிலைப்பாட்டிலே மத்திய வங்கி செயற்படுகிறது. இந்த செயற்பாடுகள் பாரதூரமானவை, எனவே, மத்திய வங்கி அதிகாரிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றார். இதற்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் சபையில் நேற்று கருத்து தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்பி: புதிய அறிக்கையின் படி மத்திய வங்கி கடந்த வருடத்தில் ஆயிரம் மில்லியன் ரூபா நட்டமீட்டியுள்ளது. எனினும், அங்குள்ளோ ருக்கு 70 வீத சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயமாகும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இவ்விடயம் தொடர்பில் விமல் வீரவன்ச எம் பி சபையில் தெரிவிக்கையில், சம்பள அதிகரிப்பு ஒரு புறம் இருக்க, மத்திய வங்கி ஒரு அரசாங்க நிறுவனமல்ல, அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டு செயற்பட வேண்டியதில்லை என்ற சிந்தனையுடன் செயற்படுகிறது. இது பாரதூரமான விடயமாகும். இது தொடர்பில் முதலில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இந்த சிந்தனையிலிருந்து மத்திய வங்கியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இது தொடர்பில் சபையில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித்த ஹேரத், அரசாங்கம் என்றால் என்ன என்பது தொடர்பில் மத்திய வங்கியின் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வங்கி என்பது அரசாங்கத்தின் கீழ் வரும் நிறுவனம் என்பது அதில்,தெளிவாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்படி மூவரின் கேள்விகளுக்கும் பதில ளித்த சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, மூன்று எம்பிக்களும் சுட்டிக்காட்டியுள்ள விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த முடியும். நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மத்திய வங்கி கையளித்துள்ள அறிக்கையை, கோப் குழுவுக்கு கொண்டு வரவும் முடியும். ஏனென்றால், மத்திய வங்கி கோப் குழுவுக்கு கட்டுப்பட்ட நிறுவனமாகும். மறுபுறம் அதனை நிதி குழுவுக்கு அழைக்கவும் முடியும். சபாநாயகர் உரிய பணிப்புரை விடுத்தால் அதனை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT