Tuesday, April 30, 2024
Home » எழுத்தாளர் முருகபூபதிக்கு அடுத்தவாரம் அவுஸ்திரேலியாவில் பாராட்டுவிழா

எழுத்தாளர் முருகபூபதிக்கு அடுத்தவாரம் அவுஸ்திரேலியாவில் பாராட்டுவிழா

by damith
January 1, 2024 9:32 am 0 comment

பிரபல எழுத்தாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான லெ.முருகபூபதி அவர்களுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், 2022 ஆம் ஆண்டுக்கான இயல்விருதையும், பிரான்ஸ் வென்மேரி அறக்கட்டளை இலக்கியச் சாதனையாளர் விருதையும் வழங்கிக் கௌரவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் முருகபூபதியைப் பாராட்டும் விழா, அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் மெல்பனில் 2024 ஜனவரி 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

112 High St, Berwick VIC – 3806, Australia என்ற முகவரியில் அமைந்துள்ள மூத்த பிரசைகள் மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்த விழாவில் முருகபூபதியின் இலக்கியச் சாதனைகள், சமூகநலச் செயற்பாடுகள் என்பவற்றைப்பற்றி அறிஞர்களும், இலக்கியவாதிகளும், சமூகச் செயற்பாட்டாளர்களும் உரையாற்றவுள்ளனர்.

சிறுகதை, நாவல், கட்டுரை, பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம், கடித இலக்கியம், நேர்காணல் பதிவுகள், புனைவு சாராத ஆக்கங்கள் முதலிய பல்துறைகளிலும் எழுதிவரும் அவரது படைப்புகள் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களாக வெளிவந்துள்ளன.

எழுத்தாளர் முருகபூபதி முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் பத்திரிகைத்துறையில் பணியாற்றியவர். அவரது ‘சுமையின் பங்காளிகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு 1976 ஆம் ஆண்டிலும், ‘பறவைகள்’ என்ற நாவலுக்கு 2003 ஆம் ஆண்டிலும் இலங்கையில் தேசிய சாகித்திய விருதுகள் கிடைத்தன.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் வெளிவரும் பத்திரிகைகளிலும், இலக்கிய இதழ்களிலும் தொடர்ந்து எழுதிவரும் முருகபூபதி, 1987 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார்.

இலங்கையில் போரினால் பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக, கடந்த 35 வருடங்களாக உதவி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான ‘இலங்கை மாணவர் கல்வி நிதியம்’ என்னும் அமைப்பின் நிறுவனரான முருகபூபதி, அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்தையும் ஆரம்பித்து அதிலும் தொடர்ந்து செயற்பட்டு வருகிறார்.

இவ்வாறு தமிழ் இலக்கியம், கலை, சமூகம் சார்ந்த பணிகளில் இடைவிடாது இயங்கிவரும் முருகபூபதிக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், பிரான்ஸ் வென்மேரி அறக்கட்டளையும் விருதுகளை வழங்கிக் கௌரவித்தமைக்காக நடத்தப்படவிருக்கும் இந்தப் பாராட்டுவிழாவினைஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் நடத்துகிறது. இந்தப் பாராட்டுவிழாவில் கலந்து கொள்ளுமாறு அன்பர்கள், நண்பர்கள், கலை இலக்கிய, ஊடக ஆர்வலர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
கிறிஸ்ரி நல்லரெத்தினம்
+ 61 450 450 998
சு.ஸ்ரீகந்தராசா + 61 478 060 366
(அவுஸ்திரேலிய தமிழ்
இலக்கியக் கலைச் சங்கம்)

தகவல்: --ஐங்கரன் விக்கினேஸ்வரா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT