Friday, May 10, 2024
Home » இந்தியாவில் பரவும் JN1 புதிய வகை கொரோனா

இந்தியாவில் பரவும் JN1 புதிய வகை கொரோனா

- கேரளாவில் 79 வயது பெண்ணொருவருக்கு தொற்று உறுதி

by Prashahini
December 18, 2023 12:29 pm 0 comment

இந்தியா – கேரளத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனாவின் புதிய வகையான ‘JN1’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான லக்ஸெம்பெர்கில் சில மாதங்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட ‘JN1’ வகை கொரோனா, B.A.2.86 வகையின் திரிபாகும். இப்போது பல்வேறு நாடுகளில் இப்புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

‘JN1’ வகையானது வேகமாகப் பரவும் என்பதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமெனக் கூறப்படுவதால், கொரோனா தொடா்பான முன்னெச்சரிக்கை நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பல்வேறு நாடுகளில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு கடந்த ஒக்டோபா் 25 ஆம் திகதி சென்ற ஒருவருக்கு அங்கு JN1 வகை தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேநேரம், திருச்சியிலோ அல்லது தமிழகத்தின் இதர பகுதிகளிலோ கொரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை.

இந்தச் சூழலில், கேரளத்தில் 79 வயது பெண்ணுக்கு JN1 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் நேற்று முன்தினம் (16) தெரிவித்தன.

‘காய்ச்சல், இருமல் போன்ற மிதமான அறிகுறிகளுடன் இருந்த அவருக்கு கடந்த மாதம் 18ஆம் திகதி ஆா்டி-பிசிஆா் சோதனை மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. அவரின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், JN1 வகை தொற்று கடந்த டிசம்பர் 08ஆம் திகதி கண்டறியப்பட்டது.

நாட்டில் தற்போது பதிவாகும் கொரோனா பாதிப்புகளில் 90 சதவீதம் மிதமானதாகவே உள்ளது. இதற்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது மட்டுமே போதுமானது. கேரளப் பெண்ணுக்கு ‘JN1’ தொற்று உறுதியான நிலையில், நாட்டில் வேறெங்கும் இப்புதிய வகை பாதிப்பு கண்டறியப்படவில்லை’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் இந்த புதிய வகை திரிபு இலங்கையில் பரவியுள்ளதாக எந்த வகை அதிகாரபூர்வ அறிவிப்புக்களும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT