Monday, May 20, 2024
Home » விசா வழங்குவதில் பாரிய மோசடி உரிய விசாரணை முன்னெடுப்பது அவசியம்

விசா வழங்குவதில் பாரிய மோசடி உரிய விசாரணை முன்னெடுப்பது அவசியம்

by Gayan Abeykoon
May 10, 2024 9:02 am 0 comment

சுற்றுலாப் பயணிகளுக்கு விசா சேவை வழங்கும் தனியார் நிறுவனத்துக்கு கிடைக்கும் நிதி மத்திய வங்கி மோசடியை விட பல மடங்கு அதிகமானது என்றும் அது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம். பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்   இடம்பெற்ற வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல்(விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில்  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும்  தெரிவிக்கையில், ஊழல் மோசடிகள் ஒழிப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எமது நாட்டுக்கு புதிய முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், நாட்டுக்குள் வரும் வெளிநாட்டவர்களுக்கான விசா வழங்குவதில் பாரிய மோசடி இடம்பெற்று வருகின்றமை  கடந்த சில தினங்களாக ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வெளியிடப்பட்டு வருகிறது.

அரசாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுலாப் பயணிகளிடமிருந்து மேலதிகமாக 25 டொலர்களை அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக எதிர்வு கூரப்பட்டுள்ளது.

அவ்வாறு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தரும் போது, அவர்களுக்கு விசா வழங்கும் குறித்த தனியார் நிறுவனத்துக்கு அதன் மூலம் மாத்திரம் 62.5மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் கிடைக்கப்பெறுகிறது. இலங்கை ரூபாவின் படி  18 பில்லியனாகும்.

ஆனால் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்துக்கு சம்பளம் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளுக்கு 992 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில், குறித்த தனியார் நிறுவனத்துக்கு இந்த விசா வழங்கும் சேவை மூலம் 18.6 மடங்கு அதிகமான நிதி கிடைக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT