Monday, May 20, 2024
Home » வீண்விரயத்தை தவிர்ப்போம்!

வீண்விரயத்தை தவிர்ப்போம்!

by Gayan Abeykoon
May 10, 2024 9:01 am 0 comment

ஸ்லாம் இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டும் மார்க்கம். அதன் போதனைகள் மனதுக்கு இதமானவை. அதனை நடைமுறைப்படுத்துவது இலகுவானது. அத்தோடு நற்பண்புகளைப் போதிக்கும் மார்க்கமும் கூட. அது எம்மில் தோற்றுவிக்க விரும்பும் நற்பண்புகளில் சிக்கனமும் சேமிப்பும் முக்கியமானவை.

சிக்கனம் என்றால் உள்ளதைக் கொண்டு தேவையை கச்சிதமாக நிவர்த்தி செய்து கொள்வதைக் குறிக்கும். அதாவது, உலோபித்தனத்துக்கும் வீண் விரயத்துக்கும் இடைப்பட்ட நிலையே சிக்கனம். அளவுக்கு அதிகமாக செலவு செய்வதைத் தவிர்ந்து கொள்ளல் வேண்டும். நடுநிலையாக செலவு செய்வதை நல்லடியார்களின் பண்புகளில் ஒன்றாக அல் குர்ஆன் சுட்டிக்காட்டுகிறது.

‘மேலும் அவர்கள் செலவு செய்யும் போது வீண்விரயமும் கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாறாக, அவர்களுடைய செலவுகள் இந்த மித மிஞ்சிய இரு நிலைகளுக்கிடையில் மிதமானதாக இருக்கும்.’ (அல் குர்ஆன் 25:67)

வீண் விரயம் செய்யாமல் சிக்கனமாக பயன்படுத்திய பின் மீதமானவற்றைப் பாதுகாப்பதை சேமிப்பு என்பது குறிக்கும்.

சேமிப்பதன் ஊடாக இக்கட்டான சந்தர்பங்களில் அவை நமக்கு உதவியாக இருக்கும். இது ஒரு சிறந்த பண்பு ஆகும். இதனை அல்லாஹ் மனிதர்களில் மட்டுமன்றி சில படைப்பினங்களிலும் ஏற்படுத்தியுள்ளான். உதாரணமாக எறும்புகள் தமக்குத் தேவையான உணவை மாத்திரம் சாப்பிட்டு விட்டு மீதி உணவைப் பத்திரமாகக் களஞ்சியப்படுத்துகின்றன. இதன் மூலம் மழை காலத்தில் உணவுத் தேவையை நிறைவுசெய்து கொள்கின்றன. தேனீக்கள் தேனைச் சேமிக்கின்றன. இவை தேனீக்களுக்கு மட்டுமன்றி மனிதர்களுக்கும் பயன்படுகின்றன.

இவ்வாறான முன்மாதிரியான பண்புகளை நபி (ஸல்) அவர்களது வாழ்விலும் எம்மால் கண்டு கொள்ள முடியும். அவர்கள் எப்போதும் சிக்கனத்தையும் எளிமையையும் விரும்பியுள்ளார்கள். அவர்களின் வாழ்வின் பல்வேறு சந்தரப்பங்களிலும் இதனைக் காணலாம். அன்னார் ஈச்சை ஓலைப் பாயில் உறங்கக்கூடியவராக இருந்தார்கள். அவர்களது விலாப்புறங்களில் அதன் அடையாளங்களைக் காணக்கூடியதாக இருக்கும்.

இதனைக் கண்ணுற்ற நபித்தோழர்கள் ‘உங்களுக்கு பஞ்சனை மெத்தை ஒன்றைத் தயார் செய்து தரட்டுமா?’ என்று வினவினார்கள். அதனை ஏற்க மறுத்த நபி (ஸல்) அவர்கள், பிரயாணி ஒருவன் மரநிழலில் தங்கி விட்டுச் செல்வது போன்றே நானும் இவ்வுலகை விட்டும் பிரிந்து செல்ல விரும்புகிறேன்.’ என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

மேலும் யூஸுப் (அலை) அவர்கள், எகிப்து நாட்டில் மிகப் பெரும் வரட்சி ஏற்படப் போகின்றது என்பதை அல்லாஹ்வின் உதவியினால் முன்கூட்டியே அறிந்து கொண்டதோடு, நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட தானியங்களில் ஒரு பகுதியைத் தொடராக ஏழு வருடங்கள் சேமித்து வைக்கவும் செய்தார். இவ்வாறு திட்டமிட்டு சேமித்த தானியங்களை அன்னார் வரட்சிக் காலத்தில் மக்களுக்கு விநியோகித்து உதவினார்கள். இதனால் அக்காலத்தில் நாட்டில் ஏற்பட இருந்த வறுமை, பஞ்சம் என்பன இல்லாமற் போயின. இது சிக்கனத்துக்கும் சேமிப்பிற்குமான அழகிய முன்மாதிரியாகவும் வெற்றிகரமான திட்டமாகவும் அமைந்தது.

இன்றைய காலகட்டத்தில் எமது வாழ்வில் பெரும் பாக்கியங்களாக கிடைக்கப்பெற்றுள்ள நேரம், பணம், நீர், மின்சாரம், பொதுச் சொத்துக்கள், எனப் பலதும் வீண் விரயத்திற்கு உட்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது. வீண் விரயம் செய்வது சைத்தானின் குணம் மாத்திரமல்லாமல் அல்லாஹ் கண்டித்துள்ள செயற்பாடும் ஆகும். இது தொடர்பில் நாம் மறுமையில் விசாரிக்கப்படுவோம். நபி (ஸல்) அவர்கள் வுழு செய்யும் போது கூட நீர் வீண் விரயம் செய்யப்படுவதைத் தடுத்துள்ளார்கள்.

ஒரு தடவை ஸஃத் (ரழி) அவர்கள் வுழு செய்து கொண்டிருந்த போது அவரைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், ஸஃதைப் பார்த்து ‘ஏன் இவ்வாறு வீண் விரயம் செய்கிறீர்?’ எனக் கேட்டார்கள். வுழுவிலும் வீண் விரயம் இருக்கிறதா நபியவர்களே?’ என்று அவர் கேட்க, ‘ஆம்’ என்று கூறிவிட்டு ‘ஓடும் நதியில் நீர் வுழு செய்தாலும் வீண் விரயம் செய்யக் கூடாது’ என்றார்கள். (ஆதாரம்: அஹ்மத், இப்னு மாஜா)

இச் சம்பவம் ஒரு துளி நீர் கூட வீண் விரயமாகக் கூடாது என்பதை எடுத்தியம்புகிறது. எனவே எமது வீடுகள், பாடசாலைகள், மஸ்ஜிதுகள் முதலான இடங்களில் நீர், மின்சாரம், உணவு போன்ற விடயங்களில் வீண் விரயங்களை தவிர்க்க முயற்சிப்பது அவசியம்.

ஒளிரும் மின்விளக்கு, மின் விசிறிகளை அணைத்தல், நீர் ஒழுகிக் கொண்டிருக்கும் நீர்க் குழாய்களை இறுக்கமாக மூடிவிடுதல், நீரைப் பாத்திரத்தில் எடுத்துக் குடித்தல், தேவையான அளவு உணவை மாத்திரம் பாத்திரத்தில் இடல் முதலானவற்றின் மூலம் வீண் விரயத்தை தடுத்துக் கொள்ள முடியும்.

அதே போன்று வீண் விளையாட்டுக்களிலும், கேளிக்கைகளிலும் நேரத்தைக் கழித்தல், பொருத்தமற்ற வழிமுறைகளில் பணத்தைச் செலவழித்தல், அளவுக்கதிகம் சாப்பிடல், தேவைக்கதிகமாக ஆடை அணிகலன்களை கொள்வனவு செய்தல் முதலானவற்றையும் வீண்விரயத்துக்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

‘நிச்சயமாக அல்லாஹ்தஆலா வீண்விரயம் செய்வோரை நேசிப்பதில்லை’ (அல் குர்ஆன்)

மேற்படி பண்புகளை வளர்ப்பதின் ஊடாக இம்மையிலும், மறுமையிலும் நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம். சிக்கனம், சேமிப்பு மற்றும் வீண் விரயத்தை தவிர்த்தல் ஆகிய பண்புகள் எமது வாழ்வில் சரியான முறையில் கடைபிடிக்கப்படும் போது கடன் பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடிகள், மற்றவர்களிடம் தங்கியிருந்தல் போன்ற நிலைமைகளில் இருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் அது மனநிறைவான வாழ்வுக்கும்  வழிவகுக்கும்.

மௌலவி 

எம்.யூ.எம். வாலிஹ்

 (பாரி, அல்-அஸ்ஹரி)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT