Monday, May 20, 2024
Home » இஸ்ரேலுக்கான ஆயுதங்களை இடைநிறுத்த பைடன் எச்சரிக்கை: தொடர்ந்தும் தாக்குதல்
ரபா மீதான படையெடுப்பு திட்டம்

இஸ்ரேலுக்கான ஆயுதங்களை இடைநிறுத்த பைடன் எச்சரிக்கை: தொடர்ந்தும் தாக்குதல்

by Gayan Abeykoon
May 10, 2024 7:34 am 0 comment

தெற்கு காசா நகரான ரபா மீது இஸ்ரேல் படையெடுப்பு ஒன்றை மேற்கொண்டால், இஸ்ரேலுக்கான ஆயுதங்கள் இடைநிறுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதல் முறையாக வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் ரபா உட்பட காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் தொடர்ந்ததோடு எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்றும் (09) போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நிடித்தன.

‘அவர்கள் ரபாவுக்குள் சென்றால் நான் ஆயுதங்களை வழங்க மாட்டேன் என்பதை தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்’ என்று சி.என்.என். தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பைடன் குறிப்பிட்டார். ரபா மீதான இஸ்ரேலின் திட்டத்தில் பொது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட அமெரிக்க குண்டுகள் ஹமாஸை அழிப்பதற்காக ஏழு மாதங்களாக நடத்தப்பட்ட தாக்குதலில் காசா பொதுமக்கள் கொல்லப்பட்டதை பைடன் ஒப்புக்கொண்டார்.

காசாவில் தொடரும் தாக்குதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் பெற்றுள்ள ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு இஸ்ரேல் தீவிரமாக முயன்று வரும் நிலையில் அதற்கு எதிராக சர்வதேச அழுத்தங்களும் அதிகரித்துள்ளன. இதில் பைடனின் கருத்து இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேலுக்கு விடுக்கும் வெளிப்படையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

பைடனின் இந்தக் கருத்துக்கு இஸ்ரேல் தரப்பில் இருந்து உடன் எந்த பதிலும் வெளியிடாதபோதும் ரபா மீதான படை நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். ரபா மீது தாக்குதல் நடத்தி அங்கிருப்பதாகக் கூறும் ஆயிரக்கணக்கான ஹமாஸ் போராளிகளை தோற்கடிப்பதாக இஸ்ரேல் குறிப்பிடுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை எகிப்துடனான ரபா எல்லைக் கடவையை கைப்பற்றி பிரதான உதவிப் பாதையை துண்டித்த இஸ்ரேல், ரபா மீது தொடர்ந்து வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. காசாவில் தொடரும் போருக்கு சக ஜனநாய கட்சியினர் எதிர்ப்பு வெளியிட்டு வருவது மற்றும் பல்கலைக்கழக ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் பைடன் நிர்வாகம் உள்நாட்டில் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக இஸ்ரேலுக்கு ஆதரவை அளித்து வரும் பைடன் இந்த ஆண்டில் இரண்டாவது தவணைக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

எனினும் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய ஆயுத உதவிகளை வழங்கும் நாடாக இருக்கும் அமெரிக்கா, ஒக்டோபர் 7 இல் போர் வெடித்த பின்னர் அந்த உதவிகளை மேலும் அதிகரித்தது.

ஏவுகணை எதிர்ப்பு அமைப்பான அயர்ன் டோம் போன்ற இஸ்ரேலிய தற்காப்புக்கான ஆயுதங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் பைடன் குறிப்பிட்டார்.

முன்னதாக இஸ்ரேலுக்கு வெடிகுண்டுகளை வழங்குவதை அமெரிக்கா நிறுத்தி வைத்திருப்பதாக வெளியான செய்தியை அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். காசா பொதுமக்கள் மீதான அச்சுறுத்தல் காரணமாகவே அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை தருவதாக குறிப்பிட்டிருக்கும் ஐக்கிய நாடுகளுக்கான இஸ்ரேலிய தூதுவர் கிளார்ட் ஏர்டன், இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தை அமெரிக்கா நிறுத்தும் என்று நம்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

ரபாவில் குண்டு மழை

ரபாவில் நேற்றுக் காலையும் கடுமையான செல் தாக்குதல்கள் இடம்பெற்றதாக அங்கிருக்கும் ஏ.எப்.பி. செய்தியாளர் குறிப்பிட்டதோடு, காசாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் ஹமாஸ் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

கடந்த இரண்டு நாட்களில் இல்லாத அளவுக்கு ரபாவில் கடுமையான குண்டு தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக அங்குள்ள உதவிப் பணியாளர் ஒருவர் பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார். ரபாவில் நேற்று (09) காலை குண்டு சந்தங்கள் தொடர்ந்து கேட்டு வந்தன என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. உதவி நிறுவனத்தின் தொலைத்தொடர்பு அதிகாரி லுவிஸ் வோட்டரிட் குறிப்பிட்டார்.

மேற்கு ரபாவில் தாம் இருக்கும் கட்டடம் அருகில் விழும் குண்டுகளால் அதிர்ந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரபாவில் இடைவிடாது குண்டு விழுந்ததாக அங்கிருக்கும் பிரிட்டன் நாட்டு மருத்துவர் ஜேம்ஸ் ஸ்மித் விபரித்துள்ளார். ‘பத்து விநாடிக்கு ஒருமுறை குண்டு வெடிக்கும் சத்தத்தை கேட்டேன்’ என்றார்.

மறுபுறம் வடக்கு காசாவின் செய்தூன் பகுதியில் நேற்று கடுமையான வான் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் இடம்பெற்றதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் பல டஜன் பேர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.

ஹசன் அல் பன்னா பள்ளிவாசல் மற்றும் காசா பல்கலைக்கழகத்தை சூழ பல வீடுகள் மற்றும் கட்டடங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. பல கட்டடங்கள் தீப்பற்றி எரிந்தன என்று அந்த செய்தி நிறுவனம் கூறியது.

இந்நிலையில் காசாவில் கடந்த எட்டு மாதங்களாக தொடரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34,904 ஆக அதிகரித்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மேலும் 78,514 பேர் காயமடைந்துள்ளனர்.

ரபாவின் கிழக்கு பக்கமாக இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் துருப்புகள் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் முன்னேறி வரும் நிலையில் அங்கிருந்து இதுவரை சுமார் 80,000 பேர் வெளியேறி இருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரபாவில் இயல்பு வாழ்வு முழுமையாக நின்றுவிட்டது என்று இடம்பெயர்ந்த பலஸ்தீனர் ஒருவரான மர்வான் அல் மஸ்ரி குறிப்பிட்டார். ‘நகரின் மேற்குப் பகுதியில் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன’ என்று 35 வயதான அந்த ஆடவர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

‘நாம் கடுமையான அச்சத்திலும் முடிவில்லாத கவலையிலும் இருக்கிறோம்’ என்று 29 வயதான முஹனத் அஹமது கிஷ்தா என்பவர் தெரிவித்தார். ‘இஸ்ரேல் இராணுவம் பாதுகாப்பானது என்று கூறும் இடங்களிலும் குண்டு தாக்குதல்கள் இடம்பெறுகின்றன’ என்றும் குறிப்பிட்டார்.

எல்லைகள் மூடப்பட்டிருப்பதால் தெற்கு காசா மருத்துவமனைகளில் வெறும் மூன்று நாட்களுக்கு மாத்திரமே எரிபொருள் எஞ்சி இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் குறிப்பிட்டுள்ளார். ‘எரிபொருள் இல்லாவிட்டால் அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகளும் நின்றுவிடும்’ என்றும் அவர் கூறினார்.

 

தொடரும் பேச்சு

இழுபறி நீடித்து வரும் போர் நிறுத்த முயற்சியில் உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு கெய்ரோவில் பேச்சுவார்த்தைகள் நீடித்தன. எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இடம்பெறும் இந்த பேச்சில் ஹமாஸ் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் ஹமாஸுடன் இணைந்து போரிட்டு வரும் இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் பலஸ்தீன விடுதலை அமைப்பின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருப்பதாக எகிப்து உளவுப் பிரிவுடன் தொடர்புபட்ட அல் கெஹெரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இஸ்ரேல் மற்றும் பிராந்திய ஊடகங்களில் முரண்பாடான செய்திகள் வெளியாகி வருகின்றன. இடைவெளி குறைந்து வருவதாக கெய்ரோவில் இருந்து வரும் செய்திகள் கூறும் அதேநேரம் பிரதான இடைவெளிகள் தொடர்ந்து நீடிப்பதாக இஸ்ரேல் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த திங்கட்கிழமை ஒப்புக்கொண்ட போர் நிறுத்த முன்மொழிவுக்கு அப்பால் தமது அமைப்பு செல்லப்போவதில்லை என்று கட்டாரில் உள்ள ஹமாஸ் அரசியல் அலுவலக உறுப்பினரான இஸ்ஸத் எல் ரெஷிக் குறிப்பிட்டுள்ளார்.

‘இஸ்ரேல் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதில் தீவிரம் காட்டுவதில்லை. அது ரபா மற்றும் எல்லைக் கடவை மீதான ஆக்கிரமிப்பு பேச்சுவார்த்தைகளை ஒரு மறைப்பாக பயன்படுத்துகிறது’ என்று ரெஷிக் தெரிவித்துள்ளார்.

மத்தியஸ்தர்களின் மூன்று கட்ட போர் நிறுத்த முன்மொழிவொன்றுக்கே ஹமாஸ் கடந்த திங்கட்கிழமை ஒப்புதல் அளித்தபோதும் ஹமாஸ் அதனை நிராகரித்தது.

இந்நிலையில் அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. வின் தலைவர் பில் பர்ன்ஸ் கடந்த புதன்கிழமை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து போர் நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமது பிடியில் இருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு கெய்ரோ பேச்சுவார்த்தையே இஸ்ரேலுக்கான கடைசி வாய்ப்பு என்று ஹமாஸ் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT