Monday, May 20, 2024
Home » நாட்டின் முன்னேற்றத்துக்கு பொது உடன்பாடு அவசியம்

நாட்டின் முன்னேற்றத்துக்கு பொது உடன்பாடு அவசியம்

பாராளுமன்றத்தில் நேற்று விசேட உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு

by Gayan Abeykoon
May 10, 2024 6:54 am 0 comment

ற்றுமை, பொது உடன்பாட்டுடன் முன்னோக்கிச் சென்றால், இலங்கையை உலகில் அபிவிருத்தியடைந்த நாடாக விரைவில் உயர்த்த முடியுமென,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டுக்கான பொது உடன்பாட்டின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.  

நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவ விட வேண்டாமெனக் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டை விட்டு தனிப்பட்ட இலட்சியங்களைக் கருத்திற்கொண்டு செயல்படுவது, மாபெரும் அழிவின் ஆரம்பமாக அமையும் என்றும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று (09) ஆற்றிய விசேட உரையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்கு நேற்று வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தற்போதைய நிலை, எதிர்கால செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கி விசேட உரையொன்றை ஆற்றினார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி:

இன்று நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்தே எமது எதிர்காலம் தீர்மானிக்கப்படுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தம்மை நாட்டுக்கு துரோகம் செய்தவர்களாக முத்திரை குத்திக்கொள்வதா    அல்லது நாட்டின் மீது அன்பு கொண்டவர்கள் என்ற அடையாளத்தை பெறுவதா  என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமின்றி, மதத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், வர்த்தக சமூகம், அரச சார்பற்ற அமைப்புகள், வெவ்வேறான சிந்தனைகளைக் கொண்ட தலைவர்கள், சமூகத்தில் தாக்கம் செலுத்தக்கூடியவர்கள் உள்ளிட்ட சகலரும் பொது உடன்பாட்டுடன் இணைந்துகொள்ள வேண்டியது அவசியம் என்பதையும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார். தொலைநோக்குப் பார்வை இல்லாமல் குறுகிய கால மற்றும் குறுகிய எதிர்பார்ப்புகளை இலக்காகக் கொண்டு தற்போதைய பயணப் பாதையை மாற்ற முனைந்தால், நாடு மீண்டும் அதல  பாதாளத்திற்கே தள்ளப்படும்.

தற்போதைய இக்கட்டான காலகட்டத்தில் நாட்டைத் தவிர்த்து , தமது சொந்த நலன்களை முன்னிறுத்தி செயற்பட்டால் அந்தப் பயணம் பாரிய அழிவின் தொடக்கமாகவே அமையும். உடன்பாடு மற்றும் ஒருமித்த கருத்துடன் செயற்பாடுகளை முன்னெடுத்து முன்னோக்கி பயணிக்க முடியுமானால், உலகில் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை விரைவில் முன்னேற்ற முடியும்.   நாட்டை மீட்டெடுக்கவும் நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு ஏதோ ஒரு வகையில் பங்களிப்பை செய்யக்கூடியதுமான இந்த வாய்ப்பை எவரும் தவற விட்டு விடக்கூடாது. அனைவரும் சேர்ந்து மலர்த்தட்டில் கைவைப்போம். இன்று நாம் எவ்வாறு செயற்படுகிறோம் என்பதை வைத்தே எமது எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.

மிக மோசமாக வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்திலிருந்து நிலையான பொருளாதாரத்தை நோக்கிய இந்தப் பயணத்தில் அடைந்துள்ள முன்னேற்றம் நாடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட முன்னேற்றமடைந்துள்ளது. இந்த முன்னேற்றத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத சில குழுக்கள்,   நரகத்தில் ஒரு இடைவேளையைக் கடந்து கொண்டிருக்கிறோம் என்று கேலி செய்கின்றனர். உண்மையில் நாம் பொருளாதார நரகத்தில்தான்,நாம் இருந்தோம். இப்போது முறையான திட்டமிடல் மூலம் அந்த நரகத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறோம்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT