Monday, May 20, 2024
Home » IPL 2024 RCB vs PK: தப்பித்தது RCB; தொடரிலிருந்து வெளியேறிய பஞ்சாப்

IPL 2024 RCB vs PK: தப்பித்தது RCB; தொடரிலிருந்து வெளியேறிய பஞ்சாப்

- விராட், சிராஜ் உலக தரமான ஆட்டம்

by Prashahini
May 10, 2024 8:42 am 0 comment

IPL 2024 தொடரின் 58ஆவது லீக் போட்டியில் நேற்று (09) பஞ்சாப் அணியை எதிர்த்து RCB அணி விளையாடியது. இரு அணிகளுக்கும் வாழ்வா, சாவா போட்டி என்பதால், இரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் நாணயச்சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின் RCB அணிக்காக விராட் கோஹ்லி – டூ பிளசிஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. பஞ்சாப் அணிக்காக அறிமுக வீரர் காவேரப்பா முதல் ஓவரை வீசினார்.

இந்த ஓவரின் 3ஆவது பந்திலேயே விராட் கோஹ்லி கொடுத்த கேட்சை அஷுதோஷ் சர்மா கோட்டைவிட்டார். இதன்பின் உஷாரான விராட் கோஹ்லி அதிரடியை தொடங்கினார். ஆனால் மறுபக்கம் காவேரப்பா வீசிய 3ஆவது ஓவரில் டூ பிளசிஸ் 9 ஓட்டங்களிலும், வில் ஜாக்ஸ் 12 ஓட்டங்களிலும், ஆட்டமிழந்தனர். இதனால் RCB அணி 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதன்பின் கோஹ்லி – பட்டிதர் கூட்டணி இணைந்து அதிரடியில் பொளந்து கட்டியது. ஹர்சல் படேல் வீசிய 6ஆவது ஓவரில் 3 பவுண்டரி அடித்த பட்டிதர், ராகுல் சஹர் வீசிய 8ஆவது ஓவரில் 3 சிக்சர்களை விளாசி மிரட்டினார். இதன் காரணமாக RCB அணி 8.3 ஓவர்களிலேயே 100 ஓட்டங்களை கடந்தது. அதிரடியில் பொளந்து கட்டிய ரஜத் பட்டிதர் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். சிறப்பாக ஆடிய அவர் 23 பந்துகளில் 55 ஓட்டங்கள் எடுத்து சாம் கரண் பவுலிங்கில் வெளியேறினார். அப்போது RCB அணியின் ஸ்கோர் 10 ஓவர்கள் முடிவில் 119 ஓட்டங்களாக இருந்தது. பின்னர் மழை குறுக்கிய சில நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் விராட் கோஹ்லி – கேமரூன் க்ரீன் கூட்டணி இணைந்து அதிரடியாக ஓட்டங்களை சேர்த்தது.

சிறப்பாக விளையாடிய விராட் கோஹ்லி 32 பந்துகளில் அரைசதம் கடக்க, 15 ஓவர்களில் RCBஅணி 164 ஓட்டங்களை சேர்த்திருந்தது. பின்னர் விராட் கோஹ்லி கியரை மாற்றினார். சாம் கரண் வீசிய 16ஆவது ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 21 ஓட்டங்கள் விளாசப்பட்டது. தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸ் அடித்த விராட் கோஹ்லி சதம் அடிப்பார் என்று பார்க்கப்பட்டது. ஆனால் சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் ரூசோவ் கையில் கேட்ச் கொடுத்து 47 பந்துகளில் 6 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 92 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

தொடர்ந்து ராகுல் சஹர் வீசிய 19ஆவது ஓவரில் தினேஷ் கார்த்திக் – கேமரூன் க்ரீன் இணைந்து 21 ஓட்டங்களை விளாசினர். ஹர்சல் படேல் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் டிகே 7 பந்தில் 18 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, 4ஆவது பந்தில் லோம்ரோர் டக் அவுட்டானார். கடைசி பதில் கேமரூன் க்ரீனும் ஆட்டமிழந்தார். இதனால் RCB அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ஓட்டங்கள் சேர்த்தது.

இந்த IPL 2024 தொடரில் விராட் கோஹ்லியின் ஸ்ட்ரைக் ரேட் குறித்த விமர்சனங்கள் அதிகரித்திருந்த நிலையில், இந்த போட்டியில் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி அசத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஆரஞ்ச் கேப் ரேசில் யாரும் எட்ட முடியாத உயரத்திற்கு விராட் கோஹ்லி சென்றுள்ளார். அதேபோல் 2ஆவது முறையாக சதத்தை எட்ட முடியாமல் விராட் கோலி 90 ஓட்டங்களுக்கு மேல் குவித்து IPL தொடரில் ஆட்டமிழந்திருக்கிறார். அதேபோல் ஸ்பின்னர்களை விராட் கோஹ்லி வெளுத்து கட்டியது இரசிகர்களிடையே ஆச்சரியத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த இன்னிங்ஸ் குறித்து விராட் கோஹ்லி பேசுகையில், ஸ்ட்ரைக் ரேட்டை சீராக உச்சத்தில் வைத்திருக்க வேண்டிய தேவை இருந்தது. இந்த பிட்சில் நானும் டூ பிளசிஸ்-ம் இணைந்து பேட்டிங் செய்த போது, வேகத்தை குறைத்ததால் என்ன நடந்தது என்று அறிந்து கொண்டோம். ஒரு பக்கம் நல்ல வேகத்திலும், பிட்சின் மற்றொரு புறம் ஸ்லோயர் பந்துகளும் நன்றாக எடுபடுகின்றன.

பேட்டிங்கின் போது 230 ஓட்டங்கள் எடுத்தால் சமாளிக்க முடியும் என்று கணித்திருந்தோம். அதுமட்டுமே எங்களின் மனநிலையாக இருந்தது. கடைசி ஓவரில் ஹர்சல் படேல் மிரட்டிவிட்டார் என்றே சொல்லலாம். அந்த ஓவரில் 3 விக்கெட்டுகளை விடவில்லை என்றால், நிச்சயம் 250 ஓட்டங்களுக்கு மேல் குவித்திருக்க முடியும். காவேரப்பா போன்ற வீரர்களின் திறமையை ஒரே போட்டியை மட்டுமே வைத்து சொல்லிவிட முடியாது.

அவரின் கைகளில் இருந்து பந்து வரும் போது நன்றாக ஸ்விங்காகிறது. இந்த இன்னிங்ஸில் கவெரப்பா பந்துவீச்சின்போது முதல் 3 ஓவர்களில் நன்றாக ஸ்விங் செய்தார். ஆனால் அவரின் 4ஆவது ஓவரை எங்களால் அட்டாக் செய்ய முடிந்தது. ஏனென்றால் பிட்சில் அதன்பின் ஸ்விங் இருக்காது என்று தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT