Monday, May 6, 2024
Home » இந்தியாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா!

இந்தியாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா!

- 90 வீதம் பாதிப்பு கேரளாவில்!

by Rizwan Segu Mohideen
December 18, 2023 12:48 pm 0 comment

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கேரளாவில்தான் 90 வீதத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றவர்களின் எண்ணிக்கை 1701. இவர்களில் கேரளாவில் மட்டுமே 1324 பேர் பதிவாகி இருக்கின்றனர்.

கேரளா மாநிலத்தில் தினமும் 700 முதல் 1,000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதேவேளை கேரளாவில் கொரோனாவால் 2 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,33,316 ஆகும். தற்போது கொரோனாவின் JN1 உருமாறிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களில் இல்லாத அளவுக்கு அதாவது, கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு ஒரே நாளில் (டிசம்பர் 16) 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் 309 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 16 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் உயர்வு காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள், 3,4 நாட்களில் குணமாகி விடுகின்றனர்.

இது இவ்விதமிருக்க, கேரளாவில் சபரிமலைக்கு தற்போது பெருமளவு பக்தர்கள் செல்கின்றனர். இதனால் கேரளாவில் பரவும் கொரோனா ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலும் எதிர்வரும் நாட்களில் பரவும் ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே சபரிமலை செல்லும் பக்தர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தலைநகர் டெல்லியிலும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் பாதிப்பு மீண்டும் உச்சம் தொடுமோ என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.

காய்ச்சல், மூக்கு வடிதல், தொண்டைப்புண், தலைவலி, இரைப்பை குடல் பிரச்சினைகள் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக இருக்கின்றன. பெரும்பாலான நோயாளிகளுக்கு இலேசான மேல் சுவாச பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வகை கொரோனா பாதிக்கப்பட்டோரின் உடல்நிலை 4, 5 நாட்களில் குணமாகும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பெரும்பாலான நபர்களுக்கு இலேசான பாதிப்பே ஏற்படுகிறது. மிகச்சிலருக்கு மட்டுமே தீவிர பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT