Sunday, May 26, 2024
Home » மானுடவியல்

மானுடவியல்

by damith
May 6, 2024 9:53 am 0 comment

பின் மழநாட்டிலே காவேரி வடகரையே சென்று, திருப்பாச்சிலாச்சிராமத்துக்குச் சமீபிக்குமுன்; அந்நகரத்திலே கொல்லி மழவன், தன்னுடைய புத்திரி முயலகனென்னும் நோயினால் வருந்துதலைக் கண்டு, கவலையுற்று, வேறொரு பரிசினாலும் நீங்காமைகண்டு, தான் சைவபரம்பரையோனாதலால் அவளைத் திருக்கோயிலினுள்ளே கொண்டே போய் சுவாமி சந்நிதானத்திலே இட்டு வைத்தான். ஆளுடைய பிள்ளையார் அந்நகரத்திற்குச் சமீபிக்கும்பொழுது, “திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் எழுந்தருளிவந்தார்” என்று ஊதுகின்ற திருச்சின்னத்தின் ஓசையைக் கேட்டு, கொல்லி மழவன் புத்திரியைவிட்டு விரைந்து சென்று, அந்நகரத்தை மிக அலங்கரிப்பித்து பிள்ளையாரை எதிகொண்டு, ஆனந்த பாஷ்பஞ்சொரிய, முத்துச்சிவிகைக்கு முன்னே அடியற்ற மரம்போல விழுந்தான். அது கண்டு, பிள்ளையார் “எழுக” என்று அருளிச் செய்ய; கொல்லிமழவன் எழுந்து மனமகிழ்ந்து, சிரசின்மேலே கைகுவித்துக்கொண்டு பிள்ளையாருடன் சென்றான். பிள்ளையார் திருக்கோயிற் கோபுரத்துக்குச் சமீபித்தவுடனே, முத்துச்சிவிகையினின்றும் இறங்கி, உள்ளே பிரவேசித்து, வலஞ்செய்துகொண்டு, சந்நிதானத்திலே போனார். போன பொழுது, அறிவு கெட்டு நிலத்திலே கிடக்கின்ற கன்னியைக் கண்டு, “இஃதென்னை” என்று வினாவ; மழவன் வணங்கி நின்று, “இவள் அடியேனுடைய புத்திரி. இவள் முயலகனென்னும் நோயினால் மிக வருந்துகின்றமையால் இவளைச் சுவாமி சந்நிதானத்திலே கொணர்வித்தேன்” என்று விண்ணப்பஞ் செய்தான். திருஞானசம்பந்தப்பிள்ளையார் அதைக்கேட்டு, அருள்சுரந்து, அவ்விடத்திலே நின்றே சுவாமியை நமஸ்கரித்து, அவளுடைய நோயை நீக்கும்பொருட்டு, “துணிவளர் திங்கள்” என்றெடுத்து, “மணிவளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோவிவர் மாண்பே” என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினார். அப்பொழுது அந்தக் கன்னி நோய் நீங்கி, எழுந்து ஒல்கிவந்து, தந்தையின் பக்கத்தை அடைந்தாள். அது கண்ட மழவன் மிகுந்த மகிழ்ச்சிகொண்டு, அவளோடும் பிள்ளையாரை விழுந்து நமஸ்கரித்தான். பிள்ளையார் அங்கே சுவாமி தரிசனஞ் செய்துகொண்டு. சில நாள் எழுந்தருளி இருந்தார்.

அதன்பின் பிள்ளையார் திருப்பைஞ்ஞீலியையும் திருவீங்கோய் மலையையும் வணங்கிக்கொண்டு கொங்க தேசத்திலே காவேரிக்குத் தென்கரையிற் சென்று, திருக்கொடி மாடச் செங்குன்றூரை அடைந்து, சுவாமிதரிசனஞ்செய்து கொண்டிருந்தார். இருக்கு நாளிலே திருநணாவிற்கும் போய்த் திருப்பதிகம் பாடி, திருக்கொடிமாடச்செங்குன்றூருக்குத் திரும்பி விட்டார். அங்கே எழுந்தருளியிருக்கும் பொழுது, மழைக்காலம் நீங்கிப் பனிக்காலம் வர, குளிர் மிருந்தது. அப்பொழுது பிள்ளையாருடைய பரிசனங்கள் நளிர்சுரத்தினால் வருத்தமுற்றுப் பிள்ளையாரை வணங்கி அவருக்கு விண்ணப்பஞ் செய்தார்கள்.

(தொடரும்)

கலாநிதி சிவ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT