Sunday, June 16, 2024
Home » LPL ஆட்ட நிர்ணய சதி; தம்புள்ளை அணியின் ஒப்பந்தம் இரத்து

LPL ஆட்ட நிர்ணய சதி; தம்புள்ளை அணியின் ஒப்பந்தம் இரத்து

- உரிமையாளருக்கு மே 31 வரை விளக்கமறியல்

by Rizwan Segu Mohideen
May 22, 2024 7:54 pm 0 comment

– பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற வங்கதேசத்தைச் சேர்ந்தவர்

லங்கா பிரீமியர் லீக் (LPL) ஆட்ட நிர்ணய செயற்பாட்டில் ஈடுபட முனைத்த குற்றச்சாட்டில் தம்புள்ள தண்டர்ஸ் (Dambulla Thunders) உரிமையாளர் தமீம் ரஹ்மான் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டு அமைச்சினால் நிர்வகிக்கப்படும், விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட புலனாய்வுப் பிரிவினரால் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்றையதினம் (22) கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 இல் கொண்டு வரப்பட்ட விளையாட்டுகள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விளையாட்டு அமைச்சின் சட்டத்தின் கீழ் தமீம் ரஹ்மான் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய, தமீம் ரஹ்மானை எதிர்வரும் மே 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, LPL தொடரில் பங்கேற்கும் 5 அணிகளில் ஒன்றான தம்புள்ளை தண்டர்ஸின் ஒப்பந்தத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த அதன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமீம் ரஹ்மான் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற பங்காளதேஷ் நாட்டவர் ஆவார். தமீம் ரஹ்மானின் இம்பீரியல் ஸ்போர்ட்ஸ் குழுவானது, கடந்த ஏப்ரல் மாதம் தம்புள்ளை அணியின் உரிமையை கொள்வனவு செய்திருந்தது.

அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் எல்.பி.எல். அல்லது வேறு போட்டிகளுடன் தொடர்புபட்டதா என்பது உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பான குற்றச்சாட்டுகள் முழுமையாக வெளிவராத போதிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LPL 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்றையதினம் (21) கொழும்பில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தெற்காசியாவில் ஆட்ட நிர்ணயம் மற்றும் விளையாட்டுகளில் ஊழலை குற்றச் செயலாக அமுல்படுத்திய முதல் நாடு இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

2019 இல் இது தொடர்பான சட்டம் இயற்றப்பட்டதோடு, இதில் குற்றவாளியாக அடையாளம் காணப்படுபவருக்கு 10 வருடங்கள் வரையான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

இச்சட்டத்தின் கீழ், ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடாத போதிலும், ஆட்ட நிர்ணயக்காரர்கள் எவரேனும் தங்களை அணுகும் நிலையில், அதனை அதிகாரிகளிடம் தெரிவிக்கத் தவறியவர்களும் குற்றவாளியாக கருதப்படுவார்கள்.

இதேவேளை, அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக்கில் (LCL) ஆட்ட நிர்ணயம் செய்ததாக, யோனி பட்டேல் மற்றும் பி ஆகாஷ் ஆகிய இரு இந்தியர்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் 08 முதல் மார்ச் 19 வரை நடைபெற்ற LCL இல் ஆட்ட நிர்ணயம் செய்ய முயன்ற பட்டேலும் யோனியும் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பட்டேல் இந்த லீக்கில் ஒரு அணியின் உரிமையாளராக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆயினும் இவ்வாறான குழப்பங்களும் மத்தியிலும் லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜூலை 01 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 21 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

2018 இல் ஆரம்பிக்கப்படவிருந்து LPL பல்வேறு தடைகளுக்கு மத்தியில் இலங்கை கிரிக்கெட் (SLC) நிர்வாகத்தில் ஏற்பட்ட சிக்கல்களாலும் சில முறை தாமதமானது.

LPL இன் தற்போதைய நடப்பு சாம்பியனாக B-Love கண்டி உள்ளதோடு, கடந்த வருடம் இறுதிப் போட்டியில் தம்புள்ளை ஆராவை தோற்கடித்து பட்டத்தை வென்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT